- ஏ.ஆர்.ஏ.பரீல்
ஒரு நாட்டின் தேசிய சொத்தாக தொல்பொருட்கள் கருதப்படுகின்றன. இவற்றைப் பாதுகாப்பதற்காக இலங்கையில் தனியான ஒரு திணைக்களம் கலாசார அமைச்சின் கீழ் இயங்கி வருகிறது.
தம்புள்ளை, அநுராதபுரம், பொலன்னறுவை, மிஹிந்தலை, சீகிரியா என்று எமது நாட்டின் தொல்பொருள் பிரதேசங்களை பட்டியலிட்டுக் கொண்டு செல்லலாம்.
நாட்டில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருள் பிரதேசங்களை அடையாளப் படுத்தியுள்ளதாக தொல்பொருள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் விராஜ் பாலசூரிய தெரிவிக்கிறார்.
அண்மைக்காலமாக எமது சமூகம் தொல்பொருள் என்றால் என்ன? பெருமளவிலான தொல்பொருட்கள் எந்தெந்தப் பிரதேசங்களில் அமைந்துள்ளன என்பதில் ஓரளவு தெளிவினைப் பெற்றுள்ளது. இதுவரை காலம் நாம் தொல்பொருட்கள் தொடர்பில் அக்கறையின்றியே இருந்தோம்.
எமது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் தொல்பொருள் சின்னங்கள் மீதேறி புகைப்படம் எடுத்துக்கொண்ட சம்பவங்கள் நாட்டில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டன. சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் முஸ்லிம் சமூகத்தை எமது நாட்டுக்கு வேண்டாதவர்களாக, புராதன தொல்பொருட்களின் எதிரிகளாகவே சித்திரித்தன. இதற்கான பொறுப்பினை எமது எதிர்கால சந்ததியினரான மாணவர் சமூகமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அண்மையில் தொல்பொருள் சின்னங்களுடன் தொடர்புபட்ட இரு சம்பவங்கள் எமது சமூகத்தை பெரும்பான்மையினர் மத்தியில் சந்தேகக்கண் கொண்டு நோக்குவதற்கு வழி சமைத்துவிட்டன.
மிஹிந்தலை தா-துகோபுர சம்பவம்
ஹொரவப்பொத்தான, கிரலாகல புராதன வரலாற்றுப் புகழ் மிக்க தூபியின் மீதேறி புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய 8 தென்கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நீதிமன்றினால் அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சில தினங்களில் மீண்டும் அவ்வாறான ஒரு சம்பவம் பதிவாகியது. அச்சம்பவத்துக்கும் பொறுப்பானவர்கள் எமது மாணவர்களே.
மிஹிந்தலை ரஜமகாவிகாரை வளாகத்திலுள்ள பிரபல சைத்திய ஒன்றுக்கு அருகிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாதுகோபுரம் மீதேறி புகைப்படம் எடுத்துக்கொண்டதற்காக மிஹிந்தலை பொலிஸாரால் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். புதைபொருள் திணைக்கள அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் திஹாரியைச் சேர்ந்த இஸ்லாமிய கல்வி நிலையம் ஒன்றின் மாணவர்களாவர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் மூதூரைச் சேர்ந்தவர்கள். திஹாரியில் தங்கியிருந்து கல்வி பயிலும் மாணவர்கள். மூதூர் அப்துல் லத்தீப் வீதியைச் சேர்ந்த ரஷீட்மொஹமட் ஜிப்ரி(20) மற்றும் மூதூர் நெய்தல்நகரைச் சேர்ந்த ஜலால்தீன் ரிப்தி அஹமட்(18) ஆகியோரே அவர்கள்.
இருமாணவர்களும் ஒருவரை ஒருவர் மாறி மாறி புகைப்படம் எடுத்துக்கொண்டபோதே தொல்பொருள் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். புகைப்படம் எடுக்கப்பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசியும் பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டது. அதில் தாது கோபுரத்தின் மீதேறி எடுக்கப்பட்ட மூன்று புகைப்படங்கள் இருந்துள்ளன.
இரு மாணவர்களும் அவர்கள் பயிலும் கல்வி நிலையத்திலிருந்து விடுமுறை பெற்றுக்கொண்டு மிஹிந்தலை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வரும் ஒரு மாணவரின் தாயாரைப் பார்ப்பதற்குச் சென்றபோதே மிஹிந்தலையில் தாதுகோபுரம் மீதேறி இவ்வாறு புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.
கடந்த 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இருமாணவர்களும் அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரினால் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை கடந்த 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிவான் உத்தரவிட்டிருந்தார். அவர்கள் கடந்த 21 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிவான் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
கடந்த 14 ஆம் திகதியிலிருந்து இரு மாணவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், நாட்டின் தொல்பொருள் சட்டம் பற்றிய போதிய அறிவின்மை மற்றும் புராதன தொல்பொருள் சின்னங்களின் புனிதத்தன்மை, அச்சின்னங்களுக்கு வழங்கப்படவேண்டிய மரியாதை தொடர்பில் அறிவின்மையினாலே இவ்வாறு புகைப்படம் எடுத்துள்ளனர்.
பாடசாலைகள், அரபுக்கல்லூரிகள், இஸ்லாமிய கல்வி நிலையங்களின் மாணவர்கள் எமது வரலாறு, புராதன சின்னங்கள், தொல்பொருட்கள் பற்றிய போதிய அறிவில்லாதவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறான கல்வி நிலையங்கள் மாணவர்களை கல்விச் சுற்றுலாக்களுக்கு அழைத்துச்செல்லும் போது இவ்வாறான புராதன வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்களுக்கு முக்கியத்துவமளிக்க வேண்டும். அவ்வாறான இடங்களுக்கு மாணவர்களை கல்விச்சுற்றுலா அழைத்துச் சென்று அவ்விடத்திலிருந்து வரலாறு போதிக்கப்பட வேண்டும். இவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்படாமையே மாணவர்களின் குறிப்பிட்ட செயற்பாடுகளுக்குக் காரணமாகும்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் கிரலாகல, தூபிமீதேறி புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவத்தில் அதிக அக்கறை செலுத்திய சமூகம் இஸ்லாமிய கல்வி நிலையத்தின் மாணவர்கள் விவகாரத்தில் மௌனம் சாதிக்கின்றமை கவலை தருகின்றது.
கிரலாகல தூபியில் ஏறி படமெ-டுத்த விவகாரம்
ஹொரவப்பொத்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபியில் ஏறி புகைப்படம் எடுத்த காட்சியை முகநூல் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய 8 தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் விவகாரம் இச்சந்தர்ப்பத்தில் மீட்டிப்பார்க்க வேண்டியது அவசியமாகும்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எட்டு மாணவர்கள் கிரலாகல தூபியில் ஏறி புகைப்படம் எடுத்ததாக தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் பொலிஸில் புகார் செய்ததற்கு அமைவாக அவர்களில் ஏழு பேரை ஹொரவப்பொத்தானை பொலிஸார் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி இரவு பல்கலைக்கழகத்தில் வைத்து கைது செய்தனர். மேலும் ஒரு மாணவர் அடுத்த தினம் கொழும்பிலிருந்து வந்து பொலிஸில் சரணடைந்தார். எட்டு மாணவர்களும் கெப்பித்திகொல்லாவ நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிவான் பெப்ரவரி 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
பெப்ரவரி 5 ஆம் திகதி அவர்கள் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது கெப்பித்திகொல்லாவ நீதிவான் நீதிமன்ற நீதிவான் மாலிந்த ஹர்ஷன அல்விஸ் எட்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தலா 50 ஆயிரம் ரூபா அபராதமும், தலா 2 ஆயிரம் ரூபா அரச கட்டணமும் விதித்து வழக்கினை நிறைவு செய்தார்.
இம்மாணவர்களுக்கு எதிராக ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தண்டனை சட்டக்கோவையின் 120, 140 ஆம் அத்தியாயங்களின் கீழ் தலா ஒவ்வொரு குற்றச்சாட்டும், தொல்பொருள் சட்டத்தின் கீழ் 31 (பீ) பிரிவின் கீழ் மற்றொரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.
நீதிமன்றில் ஆஜரான தொல்பொருள் திணைக்கள சட்டத்தரணி 8 மாணவர்களுக்கும் குறைந்தபட்சம் இரு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டுமென வாதிட்டார். அவ்வாறு வழங்கப்பட்டாலே எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுக்க முடியும் எனவும் வாதிட்டார்.
மாணவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள 5 வழக்குத் தீர்ப்புகள், இதற்கு முன்பு தொல்பொருள் பிரதேசங்களில் பதிவான இவ்வாறான சம்பவங்களின் போது நீதிமன்றம் கடைப்பிடித்த வழிமுறை என்பனவற்றைச் சுட்டிக்காட்டி மாணவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையோ, கைவிரல் பதிவோ வேண்டாம் என வாதிட்டார். இதனையடுத்து நீதிவான் குறிப்பிட்ட அபராதங்களை விதித்து வழக்கினை நிறைவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 5 ஆம் திகதி இவ்வாறு வழக்கொன்று நிறைவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் சில தினங்களுக்குப் பின்பு கடந்த 14 ஆம் திகதி இதே போன்றதொரு சம்பவம் இடம்பெற்றிருக்கின்றமையை அனுமதிக்க முடியாது. பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேர் தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்த விவகாரம் அதன் பின் மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் என்பன நாட்டில் பிரதான செய்திகளாக ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. இந்நிலையில் குறிப்பிட்ட இஸ்லாமிய கல்வி நிலையத்தின் இரு மாணவர்கள் இந்தச் செய்தியையும் அது தொடர்பான நீதிமன்றின் தீர்ப்புகளையும் அறியாதிருந்தார்களா? இல்லையென்றால் அவர்கள் வெறும் புத்தகப் பூச்சிகளாகவே இருந்துள்ளார்களா-?
அவர்கள் பத்திரிகைகள் வாசிக்காதவர்களாக, தொலைக்காட்சி அலைவரிசைகளில் செய்திகளைக் கேட்காதவர்களாகவே இருந்துள்ளனர். பல்கலைக்கழக மாணவர்களின் விவகாரத்தை அவர்கள் அறிந்திருந்தால் நிச்சயம் தூபிமீது ஏறியிருக்க மாட்டார்கள். புகைப்படம் எடுத்திருக்க மாட்டார்கள்.
பள்ளிவாசல்கள், பாடசாலைகளின் பொறுப்பு
முஸ்லிம் மாணவர்கள், இளைஞர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புராதன பௌத்த தூபிகள் மீதேறி புகைப்படம் எடுக்கும் சம்பவங்கள் அனுமதிக்கப்பட முடியாது என முஸ்லிம் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் கூறியுள்ளார். முஸ்லிம்கள் ஏனைய இன மக்களின் கலாசார பண்புகளையும் அடையாளச் சின்னங்களையும் கௌரவிக்க வேண்டுமெனவும் அறைகூவல் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் பாடசாலைகள், அரபுக் கல்லூரிகளில் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடாத்தப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். பெண்கள் அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு நிகழ்வொன்றிலே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். அவரது கருத்து வரவேற்கத்தக்கது என்றாலும் அமைச்சர் கருத்து தெரிவிப்பதுடன் மௌனித்து விடக்கூடாது.
அரபுக்கல்லூரிகளும், பள்ளி வாசல்களும் அவரது அமைச்சின் கீழேயே இயங்குகின்றன. அமைச்சில் உயர் அதிகாரிகளாக முஸ்லிம்களே அதிகம் இருக்கிறார்கள். அமைச்சர் இதற்கான திட்டமொன்றினை வகுக்க வேண்டும். முஸ்லிம் பாடசாலைகளில் தொல்பொருள் சட்டம், மற்றும் பொதுச் சட்டம் தொடர்பில் கருத்தரங்குகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்திட்டங்களை வகுக்கவேண்டும்.
மாணவர்களை விடுவிக்க முயற்சிகள் தேவை
மிஹிந்தலை சம்பவத்துடன் தொடர்புபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் மாணவர்களின் விடுதலைக்காகவும் முஸ்லிம் சட்டத்தரணிகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
தொல்பொருள் சட்டம் பற்றிய அறிவின்மையே தூபி மீதேறி புகைப்படம் எடுப்பதற்கு காரணமாய் இருக்கலாம்.
எமது மாணவர்கள் மாத்திரமல்ல இளைஞர்களும் இவ்வாறான செயற்பாடுகளில் ஒரு போதுமே ஈடுபடக்கூடாது. ஏனென்றால் அறியாத்தனமாக இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று தொடர்ந்தும் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியும்.
எமது வரவாற்றுச் சின்னங்களையும், கலாசாரங்களையும், தொல்பொருட்களையும் கௌரவிப்பதுபோன்று நாம் ஏனைய இனத்தவரின் வரலாற்றுச் சின்னங்களையும் கௌரவிக்க வேண்டும். தேசிய சொத்தாக கருத வேண்டும்.
-Vidivelli