- ஏ.ஜே.எம். நிழாம்
1833 ஆம் ஆண்டு கோல்புரூக் ஆணைக்குழு முதல் முறையாக சட்ட நிர்ணய சபையை நிறுவி ஆறுபேரை உத்தியோக பூர்வமற்ற அங்கத்தவர்களாக நியமித்தது. ஆங்கிலேயர் மூவர் சிங்களவர் ஒருவர் தமிழர் ஒருவர் பறங்கியர் ஒருவர். இலங்கை முஸ்லிம்களுக்கு எந்த பிரதிநிதித்துவமும் இல்லை. பூர்வீக முஸ்லிம்களுக்கு வழங்காத பிரதிநிதித்துவத்தை இடையில் குடியேறிய பறங்கியருக்கு வழங்கியமை அவதானிக்கத்தக்கதாகும். 1889 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. 1910 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 1912 ஆம் ஆண்டு அமுலாக்கப்பட்ட—- அரசியல் சீர்திருத்தத்தின் மூலம் இந்நாட்டு சனத்தொகையில் 100 க்கு 4 சதவீதத்தினருக்கே வாக்குரிமை வழங்கப்பட்டது.
படித்தவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் மட்டுமே வாக்குரிமை இருந்தது. அப்போதும்கூட நான்கு அங்கத்தவர் தெரிவு செய்யப்பட்டதில் ஆங்கிலேயருக்கு 2 உறுப்பினர்களும் பறங்கியருக்கு ஒரு உறுப்பினரும் வழங்கப்பட்டிருக்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், மலாயர் எனும் வகையில் இவர்கள் அனைவருக்கும் ஒரு பொது உறுப்பினரே வழங்கப்பட்டிருந்தது. 4 சமூகங்களுக்கும் ஒரு பிரதிநிதித்துவத்தை மட்டுமே வழங்கினால் என்னாகும்? 1915 ஆம் ஆண்டு நிகழ்ந்த இனக்கலவரத்துக்கு இதுவே காரணமாயிற்று. இதன் மூலம் அரசவை பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை இன்றைய முஸ்லிம் தலைமுறை தெளிவாக அறிந்துகொள்வது அவசியமாகும். எந்த வகையிலும் இதில் அசமந்தமாக இருந்து விடக்கூடாது.
2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த விகிதாசாரத்தேர்தலின்படியே பாராளுமன்றத்துக்கு எல்லாக் கட்சிகளிலிருந்தும் 21 முஸ்லிம் எம்.பி.க்கள் தெரிவாகியிருந்தார்கள். தற்போது ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண ஆளுநராக ஆனபின் இப்போது 20 எம்.பி.க்களே இருக்கின்றனர்.
முஸ்லிம்கள் 100 க்கு 8 வீதம் எனும் வகையில் இது நியாயமான தொகையே ஆகும். எனினும் அண்மையில் நிகழ்ந்த எல்லை நிர்ணயக் கமிஷனின் செயற்பாட்டின்படி 13 முஸ்லிம் எம்.பி.க்களே எதிர்காலத்தில் தெரிவாவர் எனக்கூறப்பட்டது. அந்தச் செய்தி பற்றி இப்போது பேச்சே இல்லை. முஸ்லிம் அரசியல்வாதிகளும், முஸ்லிம் எம்.பி.க்களும் இதுபற்றி அரசிடம் தீர்க்கமாக கேட்காதிருக்கிறார்களே? ஏன்? 7 முஸ்லிம் எம்.பி.க்கள் குறைவதென்பது சாதாரண விடயமா? புதிதாக நியமிக்கப்பட்டிருந்த தொகுதி நிர்ணய தலைவரும் இதைக் குறிப்பிட்டுள்ளாரே.
முஸ்லிம் 100 வீதம் வாக்களித்த அரசில் முஸ்லிம் கட்சிகள் ஏகோபித்து ஒத்துழைத்த அரசில் 7 முஸ்லிம் எம்.பி.க்கள் குறைவதென்பதும், அதுகேட்டு முஸ்லிம் சமூகம் பாராமுகமாக இருப்பதும் எப்படி-? தற்போது இந்த தொகுதி நிர்ணயம் கைவிடப்பட்டு விட்டதா? முஸ்லிம்கள் இலங்கையில் செறிந்து வாழும் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை ஆகிய பகுதிகளிலிருந்து சில பகுதிகளைப் பிரித்தெடுத்து மூன்று சிங்களத் தொகுதிகளை உருவாக்கப் பார்த்தார்களே? அப்போது உள்ளூராட்சி அமைச்சராக பைசர் முஸ்தபா எனும் முஸ்லிம்தானே இருந்தார். சமூக நோக்கோடு அவர் இம்முயற்சியை ஆட்சேபித்திருக்கலாமே? பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் இதைச்சுட்டிக்காட்டாதிருந்தால் இந்த விடயம் வெளிவந்திருக்காது அல்லவா?
இலங்கையில் சிங்கள மக்களுக்கு 18 மாவட்டங்களும், தமிழர்களுக்கு 7 மாவட்டங்களும் இருக்கையில் முஸ்லிம்களுக்கு ஒரு மாவட்டமும் இல்லை. பைசர் முஸ்தபாவால் சமூகம் சார்ந்து இதையாவது வழங்க முடிந்ததா? ஆக அந்த கரையோர மாவட்டம் அமைய வேண்டிய அதே பகுதியைத் துண்டாக்கி முஸ்லிம் மாவட்டக் கோரிக்கையை இல்லாமலாக்கவே அதே இடத்தில் மூன்று சிங்களத் தொகுதிகளை உருவாக்க முயன்றிருக்கிறார்கள் என்றாகிறதே.
சிறுபான்மைகள் அதிகமாக வாழும் அம்பாறை மாவட்டத்தின் மாவட்டச் செயலாளராக ஒரு சிறுபான்மை இனத்தவர் இல்லை. அங்கு தமிழ் பேசுவோர் அதிகமாக வாழ்கிறார்கள். எனினும் செயற்பாடுகள் சிங்கள மொழியிலேயே இடம்பெறுகின்றன.
பாராளுமன்றத்திலுள்ள 20 முஸ்லிம் எம்.பி.க்களும் இனியேனும் இவ்விடயங்களில் கூடிய அக்கறை காட்டியாக வேண்டும்.
சோல்பரி யாப்பே இந்நாட்டில் சமூக ரீதியான பிரதிநிதித்துவத்தை ஒழித்து தொகுதி முறையிலான பிரதிநிதித்துவத்தோடு விசேட பிரதிநிதித்துவங்களுக்கும் வழி செய்தது. அதன்படிதான் அது முஸ்லிம் சிறுபான்மைகளின் பிரதிநிதித்துவங்களுக்கும் வழிவகைகளைச் செய்திருந்தது. இன்றேல் முழு நாட்டிலும் சிதறிவாழும் முஸ்லிம்களின் நியாயமான பிரதிநிதித்துவங்கள் அடியோடு குறைந்திருக்கும். அத்தகைய நியாயமான ஏற்பாட்டை இப்போதும் மேற்கொள்ள வேண்டும். காரணம் முஸ்லிம்கள் நாடெங்கும் சிங்களவர் மத்தியிலும் தமிழர் மத்தியிலும் கலந்து சிறுசிறு தொகையினராக வாழ்வதேயாகும்.
இதனால்தான் சோல்பரி யாப்பில் சில தொகுதிகளுக்குப் பல பிரதிநிதித்துவ (Multi Members) முறை கொண்டுவரப்பட்டிருந்தது.
- கொழும்பு மத்திய தொகுதி –
3 எம்.பி.க்கள்
- பேருவளை – 2 எம்.பி.க்கள்
- மட்டக்களப்பு – 2 எம்.பி.க்கள்
- மூதூர் – 2 எம்.பி.க்கள்
- அக்குறணை – 2 எம்.பி.க்கள்
தற்போது ஹரிஸ்பத்துவ என அழைக்கப்படும் தொகுதியே முன்பு அக்குறணை என அழைக்கப்பட்டிருந்தது.
1972 ஆம் ஆண்டின் குடியரசு யாப்பிலும்கூட இந்த முறை நடைமுறையில் இருக்கவே செய்தது. 1978 ஆம் ஆண்டுக்குப் பின் விகிதாசாரத் தேர்தலுக்குப் பின்பே தொகுதிமுறை இல்லாமலாக்கப்பட்டதால் பல அங்கத்துவத் தொகுதிகளும் இல்லாமற்போயின.
அக்குரணையில் முஸ்லிம்களின் தொகை குறைவு என்பதற்காகவே அது இரட்டை அங்கத்தவர் தொகுதியாக ஆக்கப்பட்டது. மட்டக்களப்பிலும் முஸ்லிம்கள் குறைவு அதனால்தான் அதுவும் இரட்டை எம்.பி.க்கள் உள்ள தொகுதியாக ஆக்கப்பட்டது. மூதூர் தொகுதியும் இதே காரணத்துக்காக இரட்டை எம்.பி.க்களுக்கான தொகுதியாக ஆக்கப்பட்டது. முஸ்லிம்களுக்காகவே புத்தளம் தொகுதியும் கல்முனைத் தொகுதியும் உருவாக்கப்பட்டன.
முன்பு பொத்துவில் எனும் தொகுதியும் நிந்தவூர் எனும் தொகுதியும் வெவ்வேறாக இருந்தன. பின்னர் இரண்டையும் இணைத்தே இரட்டை எம்.பி.க்களுக்கான தொகுதியாக பொத்துவில் எல்லை உருவாக்கப்பட்டது. சம்மாந்துறையும் இதனோடு இணைக்கப்பட்டிருந்தது. தமிழ் மக்கள் தொகுதி நிர்ணயக் கமிஷனுக்குச் சமர்ப்பித்த மகஜர்களையும் வாக்குமூலங்களையும் சீர்தூக்கிப்பார்த்தே தமிழருக்கும் அங்கு எம்.பி. கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆக, 1972 ஆம் ஆண்டின் குடியரசு யாப்பிலும் கூட சோல்பரியாப்பின் இந்த தொகுதி அமைப்பு முறை அப்படியே இருந்தது. அதனால்தான் 1977 ஆம் ஆண்டு பொத்துவில் தொகுதியில் ஒரு தமிழ் எம்.பி. தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
ஆக முஸ்லிம்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப நியாயமான பிரதிநிதித்துவத்தை வழங்குவதெனில் விஷேட ஏற்பாடுகள் செய்தே ஆகவேண்டும். காரணம் முஸ்லிம்கள் நாடுமுழுக்க சிதறலாக வாழ்வதால் எந்தவொரு தொகுதியிலும் தனித்து நின்று எம்.பி.யாக ஆவதென்பது முஸ்லிம்களுக்கு சற்று சிரமம் என்பதினாலேயாகும்.
உண்மையில் தனித்துவத் தலைவர் அஷ்ரபிடம் இருந்த விழிப்புணர்வு இப்போது எல்லோரிடமும் இல்லாமலேயே போயிருக்கிறது. விகிதாசாரத் தேர்தல் முறையிலிருந்த 12% வீத வெட்டுப் புள்ளியை பிரேமதாசவிடம் கூறி 5% வீதமாகக் குறைக்கச்செய்து அவர் சிறுபான்மைகளின் தனித்துவப் பிரதிநிதித்துவங்களுக்கு வகை செய்திருந்தார் அல்லவா? இதன் மூலமே பாராளுமன்றத்தில் முஸ்லிம் சமூகத்தின் குரலாக பெருந்தேசியக் கட்சிகள் ஒலிப்பதை அவர் தடுத்து விட்டார். அவரது இறப்புக்குப்பின் இப்போது பெருந்தேசியக் கட்சிகள் அவரது வழிவாறுகளை முகவர்களாக்கித்தமது குரல்களையே பேசவைக்கின்றன. இதைத்தற்காலிக முன்னெடுப்பாக்கிக்கொண்டு முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை அடியோடு குறைக்கும் செயற்பாட்டையே முழுமையான திட்டமாக்கியிருக்கின்றது.
பெறுமதியான வசதி, வாய்ப்புகளை வழங்குவதன் மூலமும் மதிப்புள்ள அமைச்சுக்களைக் கொடுப்பதன் மூலமும் முஸ்லிம் சமூகத்தை கட்டுக்குள் வைத்திருக்கலாம் எனும் உண்மை பெரும் தேசியக் கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும். இவ்விடயத்தில் கடந்தகால அனுபவம் அவற்றுக்கு நிறையவே உண்டு.
- 1948 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் இலங்கைக்கு டொமினியன் சுதந்திரம் வழங்குகையில் முஸ்லிம்கள் எந்த நிபந்தனையும் விதிக்காமல் சிங்களத் தலைவர்களையே சார்ந்து நின்றமை.
- அரச மொழி சிங்களம் மட்டும் எனும் சட்டம் கொண்டு வரப்பட்ட போது முஸ்லிம்கள் தாய்மொழி தமிழானபோதும் அதை ஆதரித்து வாக்களித்தமை.
- அரசு பக்கமே சார்ந்து நின்று தனியார் பாடசாலைத் தமக்குக் கிடைத்த கல்விஅமைச்சு மூலம் சுவீகரித்தமை
- தமக்கு கிடைத்த கல்விஅமைச்சு மூலம் தரப்படுத்தல் முறையைக் கொண்டு வந்து சிறுபான்மைகளின் கல்வி வளர்ச்சியை முடக்கியமை.
- 1972 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பௌத்த சாசன முன்னுரிமை யாப்பில் காப்பீடான 29 ஆம் ஷரத்தை நீக்கியபோது எதிர்க்காமை.
தற்போது முஸ்லிம்கள் அனுபவித்துவரும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் காதிகோட், வக்புசபை, விவாக விவாகரத்து சொத்துரிமை யாவும் அதில் அடங்கும். அவற்றில் கைவைத்தால் முஸ்லிம் சமூகம் எதிர்க்கும் என்பதாலேயே அவை விட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. மீண்டும் அது போன்ற ஒரு ஷரத்தை கொண்டு வந்தாலன்றி அவற்றுக்கு எதிர்காலத்தில் எத்தகைய உத்தரவாதமும் இருக்காது.
மேலேழுந்த வாரியாகப் பார்த்தால் அவற்றின் மூலம் முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது போல் தெரியும். அவை சலுகைகளாகவே விட்டுவைக்கப்பட்டிருக்கின்றன. விரும்பினால் பாராளுமன்றப் பெரும்பான்மையால் அவற்றை இரத்தாக்கவும் முடியும். காரணம் சோல்பரியின் 29 ஆம் சிறுபான்மைக் காப்பீட்டு ஷரத்தைப் போல் தற்போதைய யாப்பில் இல்லை.
சிறுபான்மைக் காப்பீட்டு ஷரத்தை மட்டுமல்ல அதைக் காப்பீடு செய்யவும் கூட தனியாக வேறொரு ஷரத்தை கொண்டுவந்தாக வேண்டும். ஏனெனில் சோல்பரி யாப்பில் 29 ஆம் ஷரத்துக்கும் காப்பீடு இல்லாமலிருந்தது. முன்பு யாப்பு மாற்றப்பட்டதன் மூலமே அது நீக்கப்பட்டதல்லவா? புதிய யாப்பில் சிறுபான்மைக் காப்பீட்டை இடம் பெறச்செய்வதோடு எதிர்காலத்தில் எந்த யாப்பு இயற்றுகையிலும் இது இடம் பெறாவிட்டால் செல்லாது எனும் ஷரத்தும் இடம்பெறச் செய்ய வேண்டும். இதற்கான பொருட்கோடல் உயர்நீதிமன்றத்திடமே தங்கியிருக்க வேண்டும். ஏனெனில் பாராளுமன்றப் பெரும்பான்மையும் சர்வஜன வாக்கெடுப்புத் தீர்வும் சிறுபான்மைகளின் அடிப்படை உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் என எதிர்பார்க்க முடியாது.
ஒரு கோட்டை சிறியதாக்குவதாயின் அதற்குப் பக்கத்தில் பெரியகோட்டை வரைந்தால் முன்பிருந்த கோடு சிறியதாகிவிடும். பேரினக் குடியேற்றவாதிகள் சிறுபான்மைகள் திரளாக வாழும் பகுதிகளில் இதைக்கையாளலாம் அந்த வகையில் சிறுபான்மையினரை அந்த அந்தப் பகுதிகளில் மேலும் சிறுபான்மையினராக்கித் தமது ஆளுமைக்குட்படுத்திக்கொள்ளலாம். பேரினவாதிகள் தமது பிரதிநிதித்துவத்தை மேலும் அதிகரித்துக்கொள்ளலாம். எம். பிக்களின் தொகையில் மேலும் இருபதைக் கூட்டப் போகிறார்கள். எல்லை நிர்ணயம், அகழ்வாராய்ச்சி, புராதன இடம், என்றெல்லாம் கூறிக்கொண்டு, கண்ட இடமெல்லாம் சிலைகளை நிறுவிக்கொண்டு, ஊர்களின் பெயரையும் கிராமங்களின் பெயர்களையும் மாற்றிக்கொண்டு, பெரும்பான்மையினர் நிஜ பூமி, பூமி புத்திரர்கள் எனவும் முழுநாட்டு சுய நிர்ணயத்துக்கும் இறைமைக்கும் உரிமை கோரிக்கொண்டால் என்ன செய்வது? முஸ்லிம்கள் தமது இருப்பையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பையும், மார்க்க விழுமியத்தையும் பேணுவதற்குக் கருத்து முரண்பாடுகளையும் தனித்தனி நிகழ்ச்சிநிரல்களையும் கைவிட்டுவிட்டு சமூகரீதியில் ஒன்றிணைய வேண்டும். இலங்கை முஸ்லிம்களுக்கு இடரேதும் விளைந்தால் சமூக உறைவிடமாக ஒரு பிரதேசம் இருந்தே ஆகவேண்டும். இது தனி நாடோ பிரிவினையோ அல்ல. இது பேரினங்களுக்கும் மத்தியில் இலங்கைவாழ் முஸ்லிம் சமூகம் தனது பாதுகாப்பான இருப்பையும், வாழ்வாதாரத்தையும், வரலாற்றையும் சுயநிர்ணயத்தையும், கூட்டு இறைமையையும் தக்கவைத்துக்கொள்வதற்காகவேயாகும். பின்வரும் விடயங்களைச் சற்று அவதானியுங்கள்.
- எல்லை நிர்ணயம் மூலம் சிறுபான்மைகள் திரளாக வாழும் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டு பெரும்பான்மை வாழும் பகுதிகளோடு இணைக்கப்படுகின்றன.
- புராதன அகழ்வாராய்ச்சி மூலம் சிறுபான்மைகள் வாழும் பகுதிகள் உரித்தாக்கப் படுகின்றன.
- சிலை வைப்புக்கள் மூலமும் சிறுபான்மைகள் வாழும் பகுதிகள் அபகரிக்கப் படுகின்றன.
- தெருப்பெயர்களும் ஊர்ப்பெயர்களும் நகரப் பெயர்களும் மாற்றப்படுகின்றன.
- முடிக்குரிய அரச காணிகளில் சிறுபான்மைகளுக்கு உரிய விகிதாசாரப் பகிர்வு இல்லை.
- கிராம எழுச்சி மற்றும் வீடமைப்புத் திட்டங்களில் விகிதாசாரப் பங்கீடு இல்லை.
- கிழக்கைத் தவிர ஏனைய மாகாணங்களில் ஏனைய சமூகங்களின் மத்தியில் சிறு சிறு தொகையினராக முஸ்லிம்கள் சிதறி வாழுகிறார்கள்.
- முஸ்லிம்கள் வாழ்வாதாரத் தேவைகளுக்காகக் கடந்து செல்ல வேண்டியுள்ளதோடு சுயபாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டியுள்ளது. எல்லாத்தேவைகளுக்கும் பிறசமூகங்களைச் சார்ந்தே நிற்கவேண்டியுமுள்ளது.
- பாதுகாப்புத் துறையில் 100 வீதம் பெரும்பான்மையினரே இருப்பதால் விகிதாசாரப் பகிர்வு இல்லாதிருக்கிறது.
- யாப்பு பேரின வடிவில் இருப்பதோடு பெரும்பான்மையினரிடம் பூமி புத்திரக் கொள்கையும் காணப்படுகிறது.
- திட்டமிட்ட பெரும்பான்மைச் சமூகக் குடியேற்றங்களால் சிறுபான்மைகள் மேலும் சிறுபான்மைகளாகி விடுகிறார்கள்.
- அரச ஊழியர்களும், அரச அதிகாரிகளும், உள்ளூராட்சி நிருவாகங்களில் பெரும்பான்மைச் சமூகத்தினராகவே அமைவதால் நாடு முழுக்க பேரின ஆதிக்கம் வலுக்க வழியேற்படுகிறது.
எனவே, கிழக்கில் இலங்கை முஸ்லிம்களின் உறைவிடமாக முஸ்லிம் பகுதிகளை இணைத்து நிலத்தொடர்பற்ற முறையில் தனித்துவத் தலைவர் அஷ்ரப் கோரிய முஸ்லிம் அதிகார அலகைப் பெறாவிட்டால் நாளடைவில் முஸ்லிம்கள் சீரணிக்கப்படுவார்கள்.
-Vidivelli