கிராமப்புற பெண்களின் கல்வி வளர்ச்சிக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மேர்கில் மொரோக்கோவிற்குச் சென்றுள்ளனர்.
12 முதல் 18 வயதிற்குட்பட்ட பெண்கள் மத்தியில் பாடசாலைக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் அழைப்பையேற்றே இளவரசர் ஹரி தம்பதிகள் மொரோக்கோவிற்கு விஜயம் செய்துள்ளனர்.
இந்த விஜயத்தின் போது பாடசாலையில் இடைவிலகலைக் குறைக்கும் வகையிலான செயற்றிட்டங்கள் மற்றும் பால்நிலைக்கல்வி தொடர்பான விடயங்கள், குறித்த மாணவர்களுடன் கலந்துரையாடப்பட்டன.
இளவரசர் ஹரி தம்பதிக்கு அட்லஸ் மலைத்தொடரில் வசிக்கும் குறித்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனின் கொடிகளை அசைத்து அவர்களுக்கு வரவேற்பளித்தனர்.
இளவரசர் ஹரி மொரோக்கோவின் தலைநகர் ரொபாட்டில் இடம்பெறும் குதிரைச்சவாரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஹரி தம்பதிகள் சிறப்பு தேவைகளுடைய குழந்தைகளுடன் இணைந்து சமையல் நிகழ்ச்சி மற்றும் இளைய தொழில் முயற்சியாளர்களுடன் சந்திப்புக்களில் கலந்து கொண்டார்கள் மேலும் இவ்விஜயத்தின் போது ரொபாட்டின் அரண்மனையில் இடம்பெறவுள்ள வரவேற்பு நிகழ்வில் மொரோக்கோ அரச குடும்பத்தினரைச் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli