மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு உள்ள ஒரே தடை அரசியல்வாதிகளாவர். தேர்தலை நடாத்துவதற்கு அரசியல் ரீதியான தீர்வொன்றே தேவை. அரசியல்வாதிகள் சரியான தீர்மானம் ஒன்றுக்கு வருவார்கள் என்றால் எந்தச் சந்தர்ப்பத்திலும் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டி ஆரச்சி தெரிவித்தார். மாகாணசபை தேர்தல் தொடர்ந்து காலதாமதப்படுத்தப்படுவது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
மாகாணசபைத் தேர்தல் புதிய தேர்தல் முறையின் கீழ் நடாத்தப்பட வேண்டுமென்றால் எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவின் அறிக்கை வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டிருக்க வேண்டும். புதிய முறையில் தேர்தல் நடாத்தப்படுவதற்கு இதுவே தடையாக உள்ளது. இந்நிலையில் பழைய முறைமையின் கீழ் தேர்தல் நடாத்தப்பட வேண்டுமென்றால் பாராளுமன்றத்தில் இதற்கென சட்டமொன்று அங்கீகரித்துக் கொள்ளப்பட வேண்டும். அவ்வாறென்றால் எதுவித தடைகளுமின்றி பழைய முறையில் தேர்தல் நடாத்தப்படலாம்.
பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடாத்துவதற்கே எல்லோரும் விரும்புகின்றனர். அதனால் 2/3 பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் அதற்கான சட்டத்தை அங்கீகரித்துக் கொள்ளமுடியும். ஐக்கிய தேசியக் கட்சி மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டுமென தொடர்ச்சியாகக் கூறிவருகிறது. ஜனாதிபதியும், எதிர்க்கட்சியினரும் தேர்தல் நடாத்தப்பட வேண்டுமென மேடைகளில் தெரிவித்து வருகிறார்கள் என்றாலும் இவர்கள் மாகாணசபைத் தேர்தலை விரைவுபடுத்துவதாகத் தெரியவில்லை. அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள். ஒருசாரார் முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்கிறார்கள். மற்றுமொருசாரார் மாகாணசபைத் தேர்தலொன்றே முதலில் நடத்தப்பட வேண்டும் என்கிறார்கள்.
ஓய்வுபெற்றுச் செல்ல வேண்டிய அரசியல்வாதிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள். அவர்கள் சட்டமியற்றும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களாக இல்லை. தேர்தல்களுக்கான கால அட்டவணையொன்று எமது நாட்டில் இருக்கிறது. மாகாணசபைகளின் தேர்தல்கள் ஒரே நாளில் ஒன்றாக நடத்தப்படவேண்டும் என்றார்.
-Vidivelli