நாட்டிலுள்ள அரபுக்கல்லூரிகள் அனைத்தையும் வக்பு சபையின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்று மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானத்தை அரபுக்கல்லூரிகளின் ஒன்றியம் ஆதரிக்கவில்லை. அவ்வாறு பதிவு செய்யப்படுவதால் அரபுக்கல்லூரிகள் பல அசௌகரியங்களை எதிர்கொள்ளவேண்டியேற்படும் என அரபுக்கல்லூரிகள் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் எஸ்.ஏ.எம். ஜவ்பர் தெரிவித்தார்.
நாட்டில் இயங்கி வரும் அரபுக்கல்லூரிகள் அனைத்தும் வக்பு சபையின் கீழ் பதிவுசெய்யப்பட வேண்டும் எனும் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமின் தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் “வக்பு சபையின் செயற்பாடுகள் நீண்ட கால தாமதத்தையே ஏற்படுத்துகின்றது.
வக்பு சபையில் உடனடித்தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலையுள்ளது. அரபுக் கல்லூரிகள் வக்பு சபையில் பதிவு செய்யப்படுவதன் மூலம் அவற்றின் செயற்பாடுகளில் காலதாமதத்தையே ஏற்படுத்தும்.
புதிதாக ஆரம்பிக்கப்படும் மத்ரஸாக்கள் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வளங்களுடன் ஆரம்பிக்கப்படவேண்டும் என்பதில் அரபுக்கல்லூரிகள் ஒன்றியம் உறுதியாக இருக்கிறது. 200 இற்கும் மேற்பட்ட அரபுக்கல்லூரிகள், ஒன்றியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அரபுக்கல்லூரிகளின் கல்வி நடவடிக்கைகளை ஒன்றியம் தொடர்ந்தும் கண்காணித்து வருகிறது. அத்தோடு அவற்றின் தரத்தினை மேம்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது.
அரபுக் கல்லூரிகள் ஒழுக்க விழுமியங்களுடன் கூடிய இஸ்லாமிய வரம்புக்குள் மாணவர்களை உருவாக்குகிறது.
இதேவேளை, அரபுக்கல்லூரிகளின் செயற்பாடுகள் குறித்து சமூகத்தைச் சேர்ந்த சிலர் தவறான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தரக்குறைவாக விமர்சிக்கிறார்கள். ஒரு சில மத்ரஸாக்கள், அரபுக்கல்லூரிகளின் குறைகளை முன்நிறுத்தி அனைத்து அரபுக்கல்லூரிகளையும் தரக்குறைவாக மதிப்பிடுவதை அரபுக்கல்லூரிகள் ஒன்றியம் கண்டிக்கிறது.
அரபுக்கல்லூரிகளின் வளர்ச்சிக்கு சமூகம் தொடர்ந்தும் ஆதரவுகளை வழங்க வேண்டும் அவற்றின் வளச்சிக்கு தடையாக ஒரு போதும் இருக்கக் கூடாது என்றார்.
-Vidivelli