மோசமான வாழ்க்கை நிலைக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சூடான் ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர் சர்ச்சைக்குரிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தை பிற்போடுமாறு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதோடு மத்திய அரசாங்கத்தினையும் கலைத்து ஒரு வருட காலத்திற்கு அவசரகால நிலையையும் பிரகடனப்படுத்தியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்ட அவரது உரையில் 2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மீண்டுமொரு பதவிக்காலத்திற்காகப் போட்டியிடுவதற்கு அவரை அனுமதிக்கும் சர்ச்சைக்குரிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தை பிற்போடுமாறு பாராளுமன்றத்தைக் கோரினார்.
ஒமர் அல்-பஷீர் காபந்து நிருவாகத்தை அமைத்துள்ளதோடு, இராணுவ அதிகாரிகளை புதிய மாநில ஆளுநர்களாகவும் நியமித்துள்ளார்.
30 ஆண்டுகளுக்கு முன்னர் பதவிக்கு வந்ததிலிருந்து முதன்முறையாக பாரிய மக்கள் ஆர்ப்பாட்டங்களை ஒமர் அல்-பஷீர் சந்தித்து வருகிறார்.
சூடான் ஜனாதிபதி 2020 இல் மீண்டும் பதவிக்கு வருவதற்காக தேர்தலில் போட்டியிடமாட்டார் எனவும், நாடுமுழுவதும் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக அவர் பதவி விலகுவார் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக சூடானிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பணிப்பாளர் சலாஹ் அப்துல்லாஹ் தெரிவித்திருந்தார்.
அனைத்துக் கட்சிகளையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைக்கும் எனது கோரிக்கையினை நான் நிறுத்திக்கொள்ளப் போவதில்லை எனவும் 75 வயதான ஒமர் அல்-பஷீர் தெரிவித்தார்.
சுமார் மூன்று தசாப்த காலமாக பதவியிலிருக்கும் பஷீர் பதவி விலகவேண்டும் எனக் கோரி கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி தொடக்கம் நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்கி தினமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை பஷீரின் அறிவித்தல் வெளியாகியுள்ளது.
-Vidivelli