இம்மாத ஆரம்பத்தில் இந்தியப் படையினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதிலும் காஷ்மீர் மக்களுக்கு எதிராக மோற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்கள் மற்றும் கும்பல்களால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களிலிருந்து அவர்களுக்கு பாதுகாப்பளிக்குமாறு இந்திய உச்ச நீதிமன்றம் அதிகாரிகளைப் பணித்துள்ளது.
இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள 10 மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் அறிவித்தல் வழங்கியுள்ளதாக என்.டி.ரி.வி. தெரிவித்துள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு இந்திய அரசாங்கம் பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியுள்ள நிலையில் இஸ்லாமாபாத் அதனை மறுத்துள்ளது.
அதனை நிரூபிக்க முடியுமாயின் நடவடிக்கைகளை எடுக்குமாறு பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலுள்ள பல்வேறு கல்லூரிகளிலிருந்து ஏராளமான காஷ்மீர் மாணவர்கள் விலக்கப்பட்டுள்ளதோடு, சில கல்லூரிகள் காஷ்மீர் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள் என அறிவித்துள்ள நிலையில், தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீரைச் சேர்ந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தப்படவில்லை என கடந்த வியாழக்கிழமை அதிகாரிகள் மறுத்திருந்தனர்.
குற்றம் சுமத்தப்படுவது போன்று காஷ்மீர் மாணவர்கள் எவ்வித பாதிப்பினையும் எதிர்நோக்கவில்லை.
புல்வாமா தாக்குதல் தொடர்பில் நாட்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.
ஆனால் எந்த காஷ்மீர் மாணவரும் தாக்குதலின் பின்னர் பாதிப்புக்களை எதிர்நோக்கவில்லை என இந்தியாவின் மனிதவள அபிவிருத்தி யூனியன் அமைச்சர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்ததாக பிரஸ் ட்ரஸ்ட் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேக்ஹாலயாவின் ஆளுநர் ததாகத்தா ரோய் காஷ்மீர் பொருட்களை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
அவரது கூற்று பல்வேறு அரசியல் மட்டங்களிலும் விமர்சனங்களைத் தோற்றுவித்ததோடு, ரோய் தான்தோன்றித்தனமாக தனது அரசியலமைப்பு ரீதியான பதவியைத் துஷ்பிரயோகம் செய்வதாக அரசியல் வாதிகள் விமர்சித்திருந்தனர்.
இதனிடையே கும்ப லொன்று காஷ்மீர் மாணவர்களை தாக்கும் காணொலியொன்று சமூகவலைத் தளங் களில் வேகமாகப் பரவி வருகின்றது.
-vidivelli