புதிய நகல்­யாப்பு சமஷ்­டியை பிரே­ரிக்­கி­றதா?

0 672
  • வை. எல். எஸ். ஹமீட் 

மாகா­ண­ச­பை­க­ளுக்கு பொலிஸ் அதி­காரம்

முதலாம், இரண்டாம் பாகங்­களில் புதிய நகல்­யாப்பில் முழு­மை­யான சமஷ்டி பிரே­ரிக்­க­ப்பட்­டி­ருக்­கி­றது,. அதா­வது, மாகா­ண­ச­பை­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­களில் மத்­திய அரசு சுய­மாகத் தலை­யிட முடி­யா­தென்றும் மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­களில் ஏதா­வது திருத்தம் செய்­ய­வேண்­டு­மானால் 2/3 ஆல் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பும் வேண்டும்.

அவை தொடர்­பாக மத்­திய அரசு ஏதா­வது சட்­ட­மாக்க விரும்­பினால் அனைத்து மாகா­ண­ச­பை­களும் சம்­ம­திக்க வேண்டும்.  ஒரு மாகா­ண­சபை சம்­ம­திக்­கா­விட்­டாலும் 2/3 ஆல் சர்­வ­ஜ­ன­வாக்­கெ­டுப்பும் வேண்டும். அவ்­வாறு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பும் நடாத்தி சட்­ட­மாக்­கி­னாலும் அதன்பின் அதே­வி­டயம் தொடர்­பாக மாகா­ண­சபை ஒரு சட்டம் கொண்­டு­வந்தால் அந்த மாகா­ணத்தில் மாகா­ண­ச­பையின் சட்­டம்தான் செல்­லு­ப­டி­யாகும். மத்­திய அரசின் சட்­ட­மல்ல; என்­பதைப் பார்த்தோம்.

அதா­வது, புதிய நகல்­யாப்பில் மாகாண சபை­க­ளுக்கு வழங்கப் பிரே­ரிக்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­களின் முன்னால் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பே பெறு­ம­தி­யற்­ற­தா­கின்­றது. மக்கள் ஆணைக்கே மதிப்­பில்லை என்­கின்ற அளவு சமஷ்டி அதி­காரம் அதா­வது, 100% மேலான சமஷ்டி அதி­காரம் வழங்­கப்­படப் பிரே­ரிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. மறு­வார்த்­தையில் கூறு­வ­தாக இருந்தால் மத்­திய அர­சாங்கம் என்­ன­வென்றும் கேட்­க­மு­டி­யாத ஒன்­பது அர­சாங்­கங்கள் உரு­வா­கப்­போ­கின்­றன.

இந்­தி­யா­வில்­கூட முழு­மை­யான சமஷ்டி இல்லை. இதன்­பொருள் தமிழ்­மக்கள் ஒரு அர­சாங்­கத்­தி­னால்­கூட (மத்­திய அர­சாங்கம்) தாங்கள் ஆளப்­ப­டு­வ­தற்கு தயா­ரில்லை; தங்­களைத் தாங்­களே ஆள­வேண்டும் என்­று­கேட்­கின்­றார்கள். அவர்­களைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக அதி­காரம் கொடுப்­பதன் விளை­வாக முஸ்­லிம்கள் எட்டு, மிகவும் பலம்­வாய்ந்த மத்­திய அரசின் கட்­டுப்­பாட்­டிற்­கப்பால் சுதந்­தி­ர­மாக செயற்­ப­டக்­கூ­டிய அர­சாங்­க­ங்களின்கீழ் ஆளப்­படப் போகின்­றார்கள். (கிழக்கு தொடர்­பாக பின்னர் வரு­கின்றேன்)

ஒரே­யொரு அர­சாங்­கத்­தின்கீழ் (மத்­திய அர­சாங்கம்) அதுவும் நமது பல­மான முட்­டுக்­களில் தங்­கி­யி­ருக்­கின்ற அர­சாங்­கத்­தின்­கீ­ழேயே எங்­க­ளுக்கு ஆயிரம் பிரச்­சி­னைகள்.

அளுத்­க­மயில் அடிக்­கி­றார்கள், திக­னயில் அடிக்­கி­றார்கள், கிந்­தோட்­டையில் அடிக்­கி­றார்கள். உழ்­ஹிய்யா கொடுப்­பதில் குழப்பம் விளை­விக்­கி­றார்கள். ஹலால் உண்­ப­தற்கே பிரச்­சினை. முஸ்­லிம்கள் அறி­யாத்­த­ன­மாக ஏதா­வது தூபியில் நின்று படம் எடுத்து ஒரு வரு­டத்­தின்பின் அது முக­நூலில் பதி­வேற்­றப்­பட்­டாலும் சட்டம் பாய்­கி­றது. ஆனால் அவர்­களும் ஏறு­கி­றார்கள். படம் எடுக்­கி­றார்கள். அவை முக­நூல்­களில் உலா­வ­ரு­கி­றது. அதன்­பி­ரதி சம்­பந்­தப்­பட்ட அமைச்­ச­ருக்கும் அனுப்­பி­வைக்­கப்­ப­டு­கி­ன்றன. ஆனால் சட்டம் அங்கு செயற்­ப­டு­வ­தில்லை. முஸ்­லிம்கள் ஏறி­ய­போது ஆக்­ரோ­ஷ­மாக பேசிய அமைச்சர் இங்கு வாய்­தி­றக்க மாட்டார். இவ்­வாறு பிரச்­சினை, பிரச்­சினை என்று பிரச்­சி­னைப்­பட்­டியல் நீள்­கின்­றது.

தீர்­வுப்­பட்­டியல் பூச்­சி­யத்­தி­லேயே இருக்­கி­றது. நமக்கு 21 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள். அவர்­க­ளுக்குள் சக்­தி­வாய்ந்த அமைச்­சர்கள், ராஜாங்க அமைச்­சர்கள், பிர­தி­ய­மைச்­சர்கள்; இவற்­றிற்­குமேல் எங்­க­ளுக்குத் தேசி­யத்­த­லை­வர்­களே இருக்­கி­றார்கள். ஆனாலும் ஒரு அர­சாங்­கத்தின் கீழேயே இது நமது நிலை.

இந்த சூழ்­நி­லை­யில்தான் அவர்கள் ஒரு அர­சாங்­கத்­தா­லேயே ஆளப்­ப­டத்­த­யா­ரில்­லா­த­போது நம்மை மேலும் எட்டு அர­சாங்கங்கள் ஆள­வேண்டும் என்­கி­றார்கள். இந்தப் பின்­ன­ணி­யில்தான் மாகா­ணங்­க­ளுக்­கான பொலிஸ் அதி­காரம் ஆரா­யப்­ப­ட­வேண்டும்.

பொலிஸ் சேவை இதன் பிர­தான அம்­சங்கள்

இரு பிரிவு

  1. ஸ்ரீலங்கா தேசிய பொலிஸ்
  2. ஸ்ரீலங்கா மாகாண பொலிஸ் (ஷரத்து- 254)

சட்டம், ஒழுங்கு சீர்­கு­லைதல்

சட்டம் ஒழுங்கு சீர்­கு­லைந்­துள்ள ஒரு சூழ்­நி­லையில் மாகாண பொலிஸால் அதனை கையாளக் கூடி­யதென்று முத­ல­மைச்சர் கருதும் பட்­சத்தில் மத்­திய பொலி­சாரின் உத­வியை நாடலாம். அவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் பொலிஸ்மா அதிபர் மேல­திக பொலி­சாரை அனுப்­பி­வைக்க வேண்டும். (ஷரத்து – 286)

இங்கு புரிந்­து­கொள்ள வேண்­டி­யது: அவ்­வாறு மேல­தி­க­மாக அனுப்­பப்­படும் பொலி­ஸாரும் மாகாண நிர்­வா­கத்தின் கட்­டுப்­பாட்­டி­லேயே செயற்­ப­டுவர்.

முத­ல­மைச்சர் எப்­போது மேல­திக பொலி­சாரைக் கோருவார்? மாகாணப் பொலி­சா­ரினால் நிலை­மையைக் கையாள முடி­யா­தென  அவர் கரு­தும்­போது. நிலை­மையைக் கையா­ள­மு­டிய சூழ்­நிலை எவ்­வாறு எழும்? அங்கு பாரிய சொத்­தி­ழப்­புக்கள் ஏற்­ப­ட­வேண்டும்; சில­வேளை உயி­ரி­ழப்­புக்கள்; இவ்­வா­றான சூழ்­நி­லையின் பின்­னர்தான் “கையாள முடி­யாத சூழ்­நிலை” என்ற முடி­வுக்கு வரலாம்.

அதா­வது, மேல­திக பொலிசார் வரு­வ­தற்கு “பாரிய இழப்­புக்­களை” முஸ்­லிம்கள்/ சிறு­பான்­மைகள் சந்­திக்க வேண்டும். வரு­கின்ற பொலி­ஸாரும் மாகாண அர­சின்­கீழ்தான் செயற்­ப­டு­வார்கள்.

பொலிசார் உறு­திப்­ப­டுத்­து­வார்­களா?

இலங்­கையில் எந்­த­வொரு இனக்­க­ல­வ­ரமும் பொலி­சாரால் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட வர­லா­றில்லை. மாறாக, பொலி­சாரால் இனக்­க­ல­வரம் முற்­றி­ய­துதான் வர­லா­றாகும். அது 1979இலி­ருந்து 1983இல் உச்­சம்­தொட்ட தமி­ழ­ருக்­கெ­தி­ரான இனக்­க­ல­வ­ர­மாக இருந்­தாலும் சரிதான். 1982 காலி- முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான கல­வ­ர­மும்தான், அளுத்­கம, திக­ன­போன்ற இனக்­க­ல­வ­ரங்­க­ளும்தான்.

இக்­க­ல­வ­ர­வ­ரங்கள் ஈற்றில் முப்­ப­டை­களின் துணை­யு­டன்தான் தாம­தித்­தா­யினும் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. அதே­போன்­றுதான் இப்­பி­ர­தே­சங்­களில் அவ்­வப்­போது சிறிய சிறிய சம்­ப­வங்கள் ஏற்­பட்டு பதற்­ற­நிலை தோன்­றும்­போ­தெல்லாம் முன்­னெச்­ச­ரிக்­கை­யாக முப்­ப­டை­யி­னரில் ஏதோ­வொரு பிரி­வி­னரை கட­மையில் ஈடு­ப­டுத்­தித்தான் நிலைமை பாது­காக்­கப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் தேசிய பொலி­சா­ரைக்­கூட முத­ல­மைச்சர் கோரி­னால்தான் அனுப்­ப­மு­டியும் என்ற நிலையில் முப்­ப­டை­யி­னரை அனுப்­ப­மு­டி­யுமா?

இந்­திய அனு­பவம்

இந்­தி­யாவில் முழு­மை­யான சமஷ்டி இல்லை என மேலே பார்த்தோம். இந்­தி­யாவில் மேற்­கு­வங்க மாநி­லத்தின் முத­ல­மைச்சர் மம்தா பானர்ஜி ஆளும் பி.ஜே.பிஇற்கு எதி­ரா­னவர். சில மாதங்­க­ளுக்­குமுன் பி.ஜே.பியின் தலைவர் அமித்ஷா தலை­மையில் பல மாநி­லங்­களில் இரத யாத்­திரை சென்­றார்கள். அவர்கள் மேற்­கு­வங்­கத்­திலும் செல்லத் திட்­ட­மிட்­டார்கள். முத­ல­மைச்சர் மம்தா அனு­மதி மறுத்­து­விட்டார். இறு­தியில் இந்­திய மத்­திய ஆளுங்­கட்­சியின் தலை­வ­ருக்கே ரத யாத்­திரை செல்ல முடி­ய­வில்லை. முத­ல­மைச்­சரின் அதி­காரம் இது. மட்­டு­மல்ல,

இந்­தி­யாவின் மிகப்­பெ­ரிய மாநிலம் உத்­த­ர­பி­ர­தேசம். அதன் முத­ல­மைச்சர் யோகி ஆதித்­யநாத் இரண்­டொரு மாதங்­க­ளுக்­குமுன் மேற்­கு­வங்­கத்­திற்கு வர­வி­ருந்­த­பொ­ழுது அவ­ரது ஹெலி­கொப்டர் இறங்­கு­வ­தற்கு மம்தா பானர்ஜி அனு­மதி மறுத்­து­விட்டார். இறு­தியில் அவரால் வர­மு­டி­ய­வில்லை.

அதே மேற்­கு­வங்க மாநி­லத்தில் பாரிய ஊழல் நிகழ்ந்­தி­ருப்­ப­தாக மத்­திய புல­னாய்வு நிறு­வ­ன­மான CBI உச்ச நீதி­மன்ற உத்­த­ரவின் பேரில் விசா­ரணை நடாத்திக் கொண்­டி­ருக்­கின்­றது. கடந்த இரண்டு வாரங்­க­ளுக்­குமுன் கொல்­கட்டா பொலிஸ் ஆணை­யா­ளரை கைது­செய்­வ­தற்­காக சுமார் 40, CBI அதி­கா­ரிகள் கொல்­கட்டா வந்­தி­ருந்­தார்கள். இந்த CBI நேர­டி­யாக பிர­தமர் நரேந்­திர மோடி­யின்கீழ் இயங்­கு­கின்ற மிகவும் அதி­கா­ர­மிக்க ஒரு நிறு­வ­ன­மாகும்.

அந்த அதி­கா­ரிகள் பொலிஸ் ஆணை­யா­ளரின் அலு­வ­ல­கத்­திற்குள் நுழைந்­த­போது அனை­வரும் கைது செய்­யப்­பட்­டார்கள். பொலிஸ் அதி­காரம் மாநி­லத்­திற்கு வழங்­கப்­ப­டு­கின்­ற­போது நடப்­ப­வை­களைப் பாருங்கள்.

தமிழ்­நாடு

முன்னாள் முத­ல­மைச்சர் ஜெய­ல­லிதா முதல் தடவை முத­ல­மைச்­ச­ராக வந்து அடுத்த தடவை  கரு­ணா­நிதி முத­ல­மைச்­ச­ராக வந்தார். அப்­போது ஜெய­ல­லிதா சொத்­துக்­கு­விப்பு வழக்கில் கைது­செய்­யப்­பட்டார். அடுத்த தடவை அவர் மீண்டும் முத­ல­மைச்­ச­ரானார். கரு­ணா­நி­தியைக் கைது­செய்ய பொலிசார் அவ­ரது வீடு சென்­றனர்.

அது மத்­தியில் தி.மு.க. துணை­யுடன் காங்­கிரஸ் ஆட்சி செய்த காலம். பொலிசார் சென்­ற­போது காங்­கிரஸ் கட்­சியைச் சேர்ந்த மிகவும் செல்­வாக்­கு­மிக்க மத்­திய அரசின் கபினட் அமைச்­ச­ரான  சிதம்­பரம் மற்றும் தி.மு.கவைச் சேர்ந்த மத்­திய பிர­தி­ய­மைச்சர் ஒரு­வரும் (முர­சொலி மாறன் என நினைக்­கிறேன்) அங்கு இருந்தார்.

அவர்கள் பொலி­சா­ரிடம் கரு­ணா­நிதி கைது செய்­யப்­ப­டு­வ­தற்­கெ­தி­ராக எதையோ பேசி­யி­ருக்­கி­றார்கள். உட­ன­டி­யாக கரு­ணா­நி­தி­யுடன் சேர்த்து மத்­திய அரசின் அமைச்­சர்கள் இரு­வரும் கைது­செய்­யப்­பட்­டனர்.

சிந்­தித்துப் பாருங்கள். முழு­மை­யான சமஷ்­டி­யில்­லா­த­போதே மாநில பொலிஸ் அதி­காரம் இவ்­வ­ளவு தூரம் பாவிக்­கப்­பட முடி­யு­மானால் முழு­மை­யான சமஷ்­டியும் பொலிஸ் அதி­கா­ரமும் நமது மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கின்­ற­போது நமது நிலையை, குறிப்­பாக கிழக்­கிற்கு வெளியே வாழ்­கின்ற முஸ்­லிம்­களின் நிலையை யோசித்துப் பாருங்கள். நமது அமைச்­சர்­களும் கல­வர சம­யங்­களில் ஏதா­வது பேசப்­போனால் உள்ளே தூக்­கிப்­போ­டப்­பட மாட்­டார்கள் என்­ப­தற்கு என்ன உத்­த­ர­வாதம்? அவ்­வா­றான ஒரு சூழ்­நிலை இருந்தால் நம் அமைச்­சர்கள் அந்தப் பக்கம் தலையும் காட்­ட­மாட்­டார்கள். சட்­டிக்குள் போட்ட கறி மாதிரி மக்கள் அனு­ப­விக்க வேண்­டி­ய­துதான்.

இப்­பொ­ழுதே எங்கு, எப்­பொ­ழுது எந்­தக்­கடை தீப்­பி­டிக்கும் என்று தெரி­யாது! எந்த நிமிடம் எங்கு கல­வரம் வெடிக்கும் என்று தெரி­யாது!! ஒரு ஜனா­தி­பதி இன­வா­தி­யானல் ஐந்து வரு­டங்கள் காத்­தி­ருந்து அவரை மாற்ற முயல்­கிறோம். கிழக்கை விடுத்­தாலும் எட்டு முத­ல­மைச்­சர்கள் இன­வா­தி­க­ளானால் நம் நிலை என்ன?

முத­ல­மைச்­சர்­களை நீக்கும் சக்­தியும் நமக்­கில்லை. ஏனெனில் நாம் சிதறி வாழ்­வதால் மாகா­ணங்­களில் நமது அர­சியல் பலம் மிகவும் குறைவு. மியன்மார் முஸ்­லிம்­க­ளுக்­கா­வது அருகே பங்­க­ளாதேஷ் இருந்­தது. நமக்கு வங்­காள விரி­குடா தான் இருக்­கி­றது. நமது நிலை என்ன?

மாற்றுத் தீர்வு

இதற்கு மாற்­றுத்­தீர்­வாக வட அயர்­லாந்தில் இருப்­ப­து­போன்ற Community Policing முறையைக் கொண்டுவரலாம். அதாவது, ஒவ்வொரு பிரதேசத்திலும் இன விகிதாசாரத்திற்கேற்ப பொலிசார் நியமிக்கப்படுதல். அவ்வாறாயின் வட மாகாணத்தில் 95% தமிழ் பொலிசார் மற்றும் DIG வரையான தமிழ் உயரதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். அது போதாதா?

அவர்களுக்கு உத்தரவு விடுக்கின்ற அரசியல் அதிகாரமும் அவர்களுக்கு வேண்டும் என்பதற்காக இன்னுமொரு சமூகம் தன் எதிர்காலத்தையே தொலைக்க முடியுமா?

அவ்வாறு உத்தரவு விடுக்கின்ற அதிகாரம் வேண்டுமாயின் கனடாவின் டொரண்டோ மாநிலத்தில் இருப்பதுபோன்று Municipal Policing ஐ வட மாகாணத்திற்கு மட்டும் அல்லது வட கிழக்கிற்கு பொருத்தமான திருத்தங்களுடன் அறிமுகப்படுத்தலாம். அதாவது, ஒவ்வொரு உள்ளூராட்சி பிரிவுகளுக்கும் உள்ளூராட்சி சபைத் தலைவரின் தலைமையில் ஒரு குழு இருக்கும். அவர்கள் பொலிசாரின் கடமைகளை மேற்பார்வை செய்கின்ற, சில உத்தரவுகளை வழங்குகின்ற அதிகாரம் அவர்களுக்கு இருக்கின்றது.

இவ்வாறு எத்தனையோ மாற்றுத்தீர்வுகள் இருக்கின்றன. இவை எதைப்பற்றியும் சிந்திக்காமல் ஒரு சமூகம் தன்னைத்தானே ஆளுவதற்காக இன்னுமொரு சமூகம் பலிகொடுக்கப்பட பிரேரிக்கப்பட்டிருக்கின்றதே! இதனை ஏற்றுக்கொள்ள முடியுமா? சிந்தியுங்கள்
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.