சவூதி அரேபியாவிலுள்ள பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் அனைத்து மட்டங்களிலும் பாடவிதானத்தில் சீன மொழியினை இணைத்துக்கொள்வதற்கு கடந்த வெள்ளிக்கிழமை சீனாவும் சவூதி அரேபியாவும் இணக்கம் கண்டுள்ளன.
இரு நாடுகளுக்குமிடையே அனைத்து மட்டங்களிலுமான தந்திரோபாய ஒத்துழைப்பினை மேலும் ஆழப்படுத்துவதற்காகவும் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் நட்புறவினை வலுப்படுத்துவதற்காகவும் சீனத் தலைநகர் பீஜிங்கில் சவூதி பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மான் மற்றும் சீனாவின் உயர்மட்ட தூதுக்குழுவினருக்கும் இடையே இடம்பெற்ற உரையாடலின்போதே இந்த இணக்கம் காணப்பட்டது.
சவூதி அரேபிய சீனத் தலைமைத்துவங்களின் அபிலாசைகளை அடைந்து கொள்வதற்கான விரிவான தந்திரோபாய நட்புறவினை செயலுருப்படுத்துவதனையும், பல தசாப்தகால நட்புறவைக் கொண்ட இருதரப்பு மக்களுக்கிடையேயும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்துவதனையும் இந்நகர்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.
சீன மொழியின் அறிமுகம் சவூதி அரேபியாவிலுள்ள மாணவர்களின் கலாசாரப் பன்மைத்துவத்தினை மேம்படுத்துவதோடு, 2030 தொலைநோக்கிற்கான கல்வித்துறையின் எதிர்கால தேசிய இலக்குகளை அடைந்து கொள்வதற்கும் பங்களிப்புச் செய்யும்.
சீன மொழியைக் கற்றுக்கொள்வது இருதரப்பு மக்களுக்கும் ஒரு பாலமாக அமைவதோடு வர்த்தக மற்றும் கலாசாரப் பிணைப்புக்களுக்கு பங்களிப்பும் செய்யும்.
-Vidivelli