இந்த வருடத்துக்குள் மெளலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்படவேண்டும். அதற்காக அரசாங்கத்துக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என்று நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள உடுகொட அரபா மகாவித்தியாலயத்துக்கு குவைத் நாட்டு தனவந்தரின் நிதி உதவியில் கட்டப்பட்டு அன்பளிப்பு செய்யப்பட்ட புதிய பாடசாலை கட்டிடத் திறப்புவிழா நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பலவருடங்களாக இழுபறியில் இருக்கும் மெளலவி ஆசிரியர் நியமனத்தை விரைவில் வழங்ககுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த மீலாத்தின நிகழ்வில் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இன்னும் அந்த நியமனங்கள் வழங்கப்படாமல் இருக்கின்றன. 600 மெளலவி ஆசிரியர் நியமனங்கள் இந்த வருடத்துக்குள் வழங்கப்படவேண்டும். அதற்காக பிரதமருக்கும் அரசாங்கத்துக்கும் நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்.
அத்துடன் மெளலவி ஆசிரியர் நியமனமானது கடந்த வருட இறுதியில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தபோதும் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் குழப்ப நிலை காரணமாக இந்த வேலைத்திட்டங்கள் கைவிடப்பட்டிருந்தன. அதனால் தற்போது அரசாங்கம் இதுதொடர்பான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கின்றோம்.
நாட்டின் மூவினங்களைச் சேர்ந்த மாணவர்களை சமஅளவில் சேர்த்துக்கொண்டு இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் “ஒற்றுமை பாடசாலை” திட்டத்தை நாடுதழுவிய ரீதியில் நகர்ப்புறங்களில் அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன ரீதியான பாடசாலைகளுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் காணப்படுன்ற நிலையில், இத்திட்டம் சகல தரப்பினருக்கும் வெற்றியளிக்குமென எதிர்பார்க்கின்றோம்.
மேலும் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எந்த பாடத்துறையை தெரிவுசெய்தால் எந்த தொழில் துறைக்கு செல்லலாம் என்ற அடிப்படை தெளிவில்லாமல் இருக்கின்றனர். அது தொடர்பான வழிகாட்டல்கள் மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டும். அதனால் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சை முடிந்ததும் மாவட்ட ரீதியில் வலயக்கல்வி அதிகாரிகளுடன் இணைந்து மாணவர்களுக்கு தொழில் கல்வியை பெற்றுக்கொடுப்பதற்கான வழிகாட்டல் வேலைத்திட்டம் ஒன்றை மகாபொல புலமைப்பரிசில் நிதியத்தினூடாக மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.
மேலும் அதிகமான பாடசாலைகளில் வளப்பற்றாக்குறைகள் இருந்து வருகின்றன. அரசாங்கத்திடமிருந்து கட்டிடங்களை பெற்றுக்கொள்வது பாரிய சிரமமாக இருந்துவருகின்றது. இவ்வாறான நிலையில் இந்த பாடசாலைக்கு குவைத் நாட்டு தனவந்தர் ஒருவர் முன்வந்து இந்த கட்டிடத்தை நிர்மாணித்துக்கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. அத்துடன் எனது அமைச்சினால் சிறுவர் விளையாட்டு பூங்கா மற்றும் குடிநீர் தொகுதியொன்றை இந்தப் பாடசாலைக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார். பாடசாலை அதிபர் எம்.ஏ.எம். அலீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பெளசி, அல்ஹிமா நிறுவனத்தின் செயலாளர் நூறுல்லாஹ், பாடசாலை நிர்வாகத்தினர், பழையமாணவர், ஆசிரியர்கள், ஊர்மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
-Vidivelli