24 போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்களை அரசுடைமையாக்க திட்டம்
குற்றவாளிகளுக்கு மரணதண்டனை என்கிறார் பொலிஸ் பேச்சாளர்
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் வலையமைப்புக்களின் தலைவர்களான 24 போதைப்பொருள் கடத்தல் மன்னர்கள், போதைப்பொருள் வர்த்தகம் ஊடாக உழைத்துள்ள சொத்துக்களை அரசுடைமையாக்கும் விஷேட விசாரணைகள், சி.ஐ.டி. மற்றும் பி.என்.பி. எனப்படும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரின் ஒன்றிணைந்த விசாரணைக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் நேற்று முன்தினம் மாலை கைப்பற்றப்பட்ட ஹெரோயினுடன் சேர்த்து நேற்று காலை 6.00 மணி வரையிலான காலப்பகுதிக்குள் 520 கிலோ 762 கிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் இக்காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 6651 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
“கடந்த 2018 இல் மட்டும் 732 கிலோ 129 கிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. அவை தொடர்பில் 40998 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல் இவ்வாண்டு அதாவது, 2019 இப்போது வரை (நேற்று) வரை 520 கிலோ 762 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் 6651 கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் ஒழிப்புக்காக நாம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம். சுற்றிவளைப்புக்கள், விசாரணைகள், நீதிமன்ற நடவடிக்கைகள், புனர்வாழ்வு நடவடிக்கைகள் என அந் நடவடிக்கைகள் நீண்டது. தற்போது இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் வலையமைப்புக்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் 24 பேரின் சொத்துக்களை அரசுடைமையாக்க விசாரணைகள் இடம்பெறுகின்றன. குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து இவற்றை முன்னெடுக்கின்றன.
கைப்பற்றப்படும் போதைப்பொருள் அழிக்கப்படுவதில்லையென ஒரு தோற்றப்பாடு உள்ளது. உண்மையில் அவ்வாறில்லை. இந்த பாரிய தொகை போதைப்பொருட்கள் கடந்த 5 ஆண்டுகளுக்குள் பெரும்பாலும் கைப்பற்றப்பட்டவையே. அவை குறித்த வழக்கு விசாரணைகள் இன்னும் நிலுவையில் உள்ளன. வழக்குகள் நிறைவுறும் வரை வழக்குப் பொருட்களான போதைப் பொருட்களை அழிக்க முடியாது. நீதிமன்ற உத்தரவின் பின்னரேயே அவை அழிக்கப்படும். அண்மையில் கொக்கெய்ன் அழிக்கப்பட்ட விவகாரமானது அவ்வழக்கு முடிவடைந்தது. அதில் சந்தேக நபர்கள் இருக்கவில்லை. அவை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டவை.
உண்மையில் போதைப்பொருளை அழிப்பது குறித்த நடவடிக்கையில் ஜனாதிபதியின் ஒத்துழைப்பு எமக்கு உள்ளது. எம்மை பொறுத்தவரை போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும். அப்போதே போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முடியும். என்றார்.
-Vidivelli