ஓமான் விபத்தில் 4 இலங்கையர் மரணம்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், இரு மகள்களுடன் மற்றொரு சிறுவனும் பலி; அக்கரைப்பற்று, பொத்துவிலைச் சேர்ந்தவர்கள்
ஓமான் நாட்டில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கோர விபத்தொன்றின்போது அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவரும், பொத்துவில் பிரதேசத்தினைச் சேர்ந்த சிறுவர் ஒருவரும் மரணித்துள்ளனர். மேலும் இருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஓமான் நாட்டின் அல்-ஜபல் அல்-அஹ்தார் என்னும் மலைப் பகுதியினை அண்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்திலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் மூவர் சிறுவர்களாவர். இச்சம்பவம் சனிக்கிழமை நண்பகல் 12.49 மணிக்கு இடம்பெற்றதாக ரோயல் ஓமான் பொலிஸாரை மேற்கோள்காட்டி ‘ரைம்ஸ் ஒப் ஓமான்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ”ஓமானின் ஜபல் அல்–அஹ்தார் மலைப் பிரதேசத்தில் வாகனம் ஒன்று நிலையான பொருள் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் கடுமையான காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள்” என்றும் அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ் விபத்தில் அக்கரைப்பற்று-01, அல்-பாத்திமியா வீதியினைச் சேர்ந்த முகம்மது அபூபக்கர் காமிலா என்னும் 40 வயதுடைய பெண்ணும் அவரது மகள்களான 14 வயதுடைய எஸ்.நவால், ஒன்பது வயதுடைய எஸ்.அபாப் ஆகியோருமே உயிரிழந்த ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்களாவர். இச்சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவரான கணக்காளர் எஸ்.எம்.சக்கி மற்றும் அவரது மற்றொரு புதல்வரான அமூத் ஆகியோர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இவர்களோடு பயணித்த பொத்துவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட மற்றுமொரு குடும்பத்தைச் சேர்ந்த முஹம்மத் முஅஸ்ஸம் பாதிக் எனும் 6 வயது சிறுவனும் இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
விடுமுறை தினத்தினை கழிக்கும் வகையில் அல்–ஜபல் அல்–அஹ்தர் பிரதேசத்திற்கு ஐந்து குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பல வாகனங்களில் ஒன்றாக பயணித்துக் கொண்டிருந்த வேளையிலேயே இக்கோர விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 15 வருட காலமாக மத்திய கிழக்கு நாடுகளில் கணக்காளராக கடமையாற்றி வரும் எஸ்.எம்.சக்கி, தனது குடும்பத்தவர்களுடன் ஓமான் மஸ்கட் பிரதேசத்தில் வசித்து வருகின்றார். கடந்த ஆறு மாத காலத்திற்கு முன்னர் இலங்கை நாட்டுக்கு தனது குடும்பத்தவர்களுடன் வருகை தந்து மீளவும் ஓமான் நாட்டுக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை இன்றைய தினம் ஓமான் நாட்டில் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.
-Vidivelli