294.5 கிலோகிராம் ஹெரோயின் சிக்கியது

கொள்ளுப்பிட்டியில் மீட்பு; 350 கோடி ரூபா பெறுமதி என மதிப்பீடு

0 637

இலங்கை வரலாற்றில் கைப்பற்றப்பட்ட அதிக தொகை ஹெரோயின், நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைவாக அப்பிரிவினரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படை­யி­னரும் இணைந்து கொள்­ளுப்­பிட்டி நவீன சந்தை கட்­டிடத் தொகு­தியின் வாகனத் தரிப்­பி­ட­மொன்றில் முன்­னெ­டுத்த விசேட சுற்றி வளைப்­பி­லேயே இப்­போதைப் பொருள் சிக்­கி­யது.

இதன்­போது சுமார் 353.388 கோடி ரூபா பெறு­ம­தி­யான 294 கிலோ 490 கிராம்  ஹெரோயின்  கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. அத்­துடன் குறித்த போதைப்­பொ­ருளை வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்­காக அங்கு கொண்­டு­வந்த இரு சந்­தேக நபர்­க­ளையும், அவர்கள் செலுத்தி வந்த இரு வேன்­க­ளையும் பொலிஸார் கைது செய்­தனர்.

இந்­நி­லையில் குறித்த இரு சந்­தேக நபர்­க­ளையும் 7 நாட்கள் தடுப்புக் காவலில் தடுத்­து­வைத்து, குறித்த போதைப்­பொருள் தொடர்பில் மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க கோட்டை நீதிவான் நீதி­மன்றம் அனு­மதி வழங்­கி­யுள்­ள­தாக பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

இந்த சம்­பவம் தொடர்பில் மேலும் அறிய முடி­வ­தா­வது,

பொலிஸ் போதைப்­பொருள் தடுப்புப் பிரி­வினர் முன்­னெ­டுத்த விசேட விசா­ர­ணை­யொன்றில் சிறப்புத் தக­வ­லொன்று வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அந்த தக­வல்கள் மற்றும் மேல­தி­க­மாக பொலி­ஸா­ருக்கு கிடைக்­கப்­பெற்ற தக­வல்­க­ளின்­படி, போதைப்­பொருள் தடுப்புப் பிரி­வி­னரும் பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யி­னரும் இணைந்து கொள்­ளுப்­பிட்டி பகு­தியில் உள்ள நவீன சந்தை கட்­டிடத் தொகு­தி­யொன்றின் வாகன தரிப்­பி­டத்தில் விசேட சுற்றி வளைப்பை முன்­னெ­டுத்­தனர். இதன்­போது அந்த வாகனத் தரிப்­பி­டத்­துக்கு வந்த 3511, 7416 ஆகிய இலக்­கங்­களைக் கொண்ட இரு வேன்கள் தொடர்பில் பொலிஸார் சுற்றி வளைப்பை முன்­னெ­டுத்­தனர். இதன்­போதே அந்த வேன்­க­ளி­லி­ருந்து போதைப் பொருளும் அதனை செலுத்தி வந்த இரு­வரும் கைது செய்­யப்­பட்­டனர்.

இது­தொ­டர்பில் பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர நேற்று பொலிஸ் போதைப்­பொருள் தடுப்புப் பிரிவில் நடாத்­திய விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கூறி­ய­தா­வது,

‘ இலங்கை வர­லாற்றில் கைப்­பற்­றப்­பட்ட மிகப்­பெ­ரிய தொகை ஹெரோ­யினைக் கைப்­பற்ற போதைப் பொருள் தடுப்புப் பிரி­வி­ன­ருக்கும் பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யி­ன­ருக்கும் முடி­யு­மா­கி­யுள்­ளது. இவ்­விரு பொலிஸ் பிரி­வி­னரும் இணைந்து முன்­னெ­டுத்த பொலிஸ் நட­வ­டிக்­கையில் இந்த ஹெரோயின் தொகை கைப்­பற்­றப்­பட்­டது. நேற்று (நேற்று முன் தினம்) மாலை கொள்­ளுப்­பிட்டி நவீன சந்தை கட்­டிடத் தொகு­தி­யொன்றில்,  வர்த்­தக நட­வ­டிக்­கைக்­காக கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே இந்த ஹெரோயின் கைப்­பற்­றப்­பட்­டது. இரு வேன்­களில் பாரிய பொதிகள் தலா 5 வீதம் 10 பொதி­களில் இந்த ஹெரோயின் இருந்­தது.  அந்த 10 பொதி­களில் 272 சிறிய பொதிகள் உள்­ள­டக்­கப்பட்­டி­ருந்­தன.  ஒரு வேனில் 5 பொதி­களில் 163 கிலோ 356 கிராம் ஹெரோயின் இருந்­தது. மற்­றைய வேனில் 131 கிலோ 134 கிராம் ஹெரோயின் இருந்­தது.

இந்தப் பொதி­களில் இருந்த ஹெரோ­யினின் நிறை 294 கிலோ 490 கிரா­மாகும்.

கைதான இரு­வரில் ஒருவர் 43 வய­தான பாணந்­துறை- – கெஸல்­வத்தை – சரிக்­க­முல்­லையைச் சேர்ந்த மொஹம்மட் பசீர் மொஹம்மட் அஜ்மீர் ஆவார். மற்­றை­யவர் 32 வய­தான பாணந்­துறை -– கெஸல்­வத்தை பகு­தியைச் சேர்ந்த மொஹம்மட் ரிழா அஹமட் ருஸ்னி என்­ப­வ­ராவார்.  இவர்கள் இரு­வரும் வந்த அந்த இரு வேன்­களும் பொலிஸ் பொறுப்பில் எடுக்­கப்­பட்­டுள்­ளன.

இவர்­க­ளுக்கு இந்த ஹெரோயின் எப்­படிக் கிடைத்­தது, எங்­கி­ருந்து கிடைத்­தது உள்­ளிட்ட இந்த போதைப்­பொருள் வலை­ய­மைப்பை கண்­ட­றிய பொலிஸ் போதைப்­பொருள் தடுப்புப் பிரி­வினர் தடுப்புக் காவல் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்’ என்றார்.

பொலிஸ் போதைப்­பொருள் தடுப்புப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லத்தீப் மற்றும் போதைப்­பொருள் தடுப்புப் பிரிவு பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்­ஜீவ மெத­வத்த மற்றும் பி.என்.பி. பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் சமிந்த தன­பால ஆகி­யோரின் நேரடிக் கட்­டுப்­பாட்டில் போதைப்­பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஹிரி­யா­தெ­னிய தலை­மை­யி­லான குழு­வினர்  கைதான இரு­வ­ரி­டமும் விஷேட விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தனர்.

இதன்­போது குறித்த கைதான இரு­வரும், தாம் வேனை செலுத்தி வந்­த­வர்கள் மட்­டுமே எனவும், தமக்கு  கொடுக்­கப்பட்ட வேலை, அந்த வேனைச் செலுத்­தி­வந்து அந்த வாகன தரிப்­பி­டத்தில் நிறுத்­தி­விட்டு அதன் சாவி­யைக்­கூட அங்­கேயே கைவிட்­டு­விட்டு செல்ல வேண்டும் என்­பது மட்­டுமே என தெரி­வித்­துள்­ளனர்.

எனினும், பொலிஸார் அவ்­வி­ரு­வ­ரையும் நேற்று கோட்டை பதில் நீதிவான் லோச்­சனா அபே­விக்­ரம முன்­னி­லையில் ஆஜர் செய்து மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக 7 நாள் தடுப்புக் காவல் உத்­த­ரவைப் பெற்­றுக்­கொண்­டனர்.

பொலி­ஸாரின் ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில், இந்த போதைப் பொரு­ளா­னது, துபாயில் தற்­போது கைது செய்­யப்­பட்­டுள்ள மாகந்­துரே மதூஷின் எதிர் குழு­வொன்­றினால் இலங்­கைக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­தா­கவும், பாகிஸ்­தா­னி­லி­ருந்து அது இலங்­கைக்கு கடல் மார்க்­க­மாக கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­தா­கவும் போதைப்­பொருள் தடுப்புப் பிரிவின் விசா­ர­ணை­களில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் உள­வுத்­துறை தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. மதூஷ் அபு­தா­பியில் கைதாக அமீ­ரக பொலி­ஸா­ருக்கும் அது தொடர்பில் இலங்கை பொலி­ஸா­ருக்கும் தகவல் கொடுத்த முக்­கிய பாதாள, போதைப்­பொருள் வலை­ய­மைப்பு கும்­பலின்  ஒரு­வரே இந்த போதைப்­பொ­ருளை டுபாயில் இருந்­த­வாறு இலங்­கைக்கு அனுப்­பி­யுள்­ள­தாக பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர். இந்­நி­லையில் மேல­திக விசா­ர­ணை­களை போதைப்­பொருள் தடுப்புப் பிரி­வினர் ஆரம்பித்துள்ளனர்.

இதனிடையே நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளை பார்வையிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு விஜயம் செய்தார். பதில் பொலிஸ்மா அதிபர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மற்றும் அதிரடிப்படை கட்டளைத் தளபதி எம்.ஆர். லத்தீப் ஆகியோருடன் அவர் அங்கு சென்றார். இதன்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பணிப்பாளரும் உடனிருந்தார்.   இச்சுற்றி வளைப்பில் பங்கேற்றோரை ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.