- எம்.எம்.ஏ.ஸமட்
அரசியல் கட்சிகள் முதல் குடும்ப இல்லங்கள் வரை முரண்பாடுகள் கூர்மையடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது. தலைவர்கள், உறுப்பினர்கள், ஆசிரியர் மாணவர், கணவன் மனைவி, பெற்றோர் பிள்ளைகள், மேல்நிலை அதிகாரிகள் கீழ் நிலை ஊழியர்கள் என பல்வேறு தரப்புக்கள் மற்றும் மட்டங்களுக்கிடையில் ஏற்படும் கருத்து, கொள்கை முரண்பாடுகள் ஒவ்வொரு தரப்புக்களுக்கிடையிலும், பிளவுகளும், பிரச்சினைகளும் தலைதூக்க காரணமாக அமைந்துவிடுவதையும் அதனால் பல விளைவுகள் நடந்தேறுவதையும் தற்காலத்தில் காணக் கூடியதாகவுள்ளன.
குறிப்பாக குடும்ப இல்லங்களில் நிகழ்கின்ற முரண்பாடுகள் விவாகரத்து மற்றும் தற்கொலை, தற்கொலைகளுக்கான முயற்சிகள் என்பவற்றை உருவாக்குவதையும் அதனால் குடும்பங்கள் சூனியமாவதையும் தற்காலத்தில் இடம்பெறும் சம்பவங்களை அவதானிக்கின்றபோது விளங்கிக்கொள்ள முடிகிறது.
இவற்றிற்குக் காரணம் என்னவென்பது ஆராயப்பட வேண்டியதோடு, முரண்பாடுகள் ஏற்படாமல் வாழ்வதற்கான வழிகாட்டல்களும் ஆற்றுப்படுத்தல்களும் வழங்கப்படுவது காலத்தின் கட்டாயமாகவுள்ளது. பொதுவாக கணவன் மனைவிகளுக்கிடையில் ஏற்படுகின்ற முரண்பாடுகள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதிப்பதோடு அக்குடும்பத்தை சின்னாபின்னமாக்கிவிடுகிறது.
தற்காலத்தில் பிள்ளைகள் வழிதவறிச் செல்வதற்கு பிரதான காரணமாக இருப்பது குடும்பப் பின்னணியெனக் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியிருக்கும் மாகந்துர மதூஷ் கூட ஒரு போதைப் பொருள் மாபியாவாகவும் பல்வேறு குற்றச்செயல்களின் பிதாவாகவும் மாறுவதற்குக் காரணம் அவனது குடும்பப் பின்னணி என்பதை அவனது வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது கற்றுக்கொள்ளக் கூடியதாகவுள்ளது.
இதனால், குடும்பங்கள் மத்தியில் ஆற்றுப்படுத்தல் அவசியமாகவுள்ளதோடு திருமணத்திற்கு முன்னும் பின்னும் ஆற்றுப்படுத்தல் வழங்கப்படுவது கட்டாயமென உணரப்படுவது காலத்தின் தேவை என்பதோடு, குடும்பங்களுக்கிடையில் முரண்பாடுகள் கூர்மையடைவதையும் தவிர்க்கக் கூடியதாக அமையும்.
திருமணமும் சமகாலமும்
திருமணம் பல்லாண்டு காலப்பயிர் என்பார்கள். இந்தப் பல்லாண்டு காலப்பயிர் வாடாமல் வளமாக வளர வேண்டுமானால் அது நல்ல போசணையுடன் வளர்க்கப்பட வேண்டும். முன்னைய காலங்களைவிட இந்நவீன யுகத்தில் சிறு சிறு விடயங்களுக்காக முரண்பட்டு விவாகரத்துக் கோரி பல்லாண்டுகால திருமண பந்தத்தை முறித்துக்கொள்ள ஆணும் பெண்ணும் அவசரப்படுகின்றனர். இருப்பினும், எத்தகைய விடயங்களை ஆணும் பெண்ணும் அறிந்து கொள்வதன் மூலம் திருமண வாழ்க்கையை முரண்பாடுகளின்றி வெற்றிகரமாக்கலாம் என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.
திருமணம் என்பது வயதுவந்த ஓர் ஆணும் பெண்ணும் தன்னுள் ஏற்படுத்திக்கொள்ளும் சட்டபூர்வமான இணைப்பாகும். திருமணபந்தத்தில் இணையும் தம்பதியினர் புதிய வாழ்க்கையை ஆரம்பித்து புதுக்குடும்பமொன்றை உருவாக்கத் தன்னை தயார்படுத்திக்கொள்வது கடமையாகும். திருமண பந்தத்தின் முக்கிய குறிக்கோளாகத் திகழ்வது குடும்பமொன்றை உருவாக்குதலாகும். ரிங் லாட்னர் என்பவர் குறிப்பிடும் போது, “நீ எந்தக் குடும்பத்தில் பிறந்தாய் என்பது முக்கியமல்ல, எப்படிப்பட்ட குடும்பத்தை உருவாக்கப் போகிறாய் என்பதே முக்கியமானது.”
திருமண வாழ்வு பல உயர்ந்த இலக்குகளையும் நோக்கங்களையும் கொண்டுள்ளது. மனஅமைதி, பாலூக்கத்தேவை, மறு உற்பத்தி, சமூகப்பாதுகாப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு மூப்பின்போது உதவி, நட்புத் தேவை, பெயரையும் பொருளையும் விட்டுச் செல்லல் என்ற இலக்குடன் திருமணங்கள் அமையவேண்டும். அந்த இலக்குகளை அடைவதற்காக கணவனும் மனைவியும் உழைக்க வேண்டும்.
திருமணம் செய்வதை அனைத்து மதங்களும் ஊக்குவிக்கின்றன. ஏனெனில், திருமணம் வாழ்க்கையின் இன்றியமையாத தேவைகளுள் ஒன்றாகக் காணப்படுகின்றது. திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக நடாத்திச்செல்ல ஒருவரையொருவர் புரிந்துகொள்வது அவசியமாகும். அத்தோடு பரபரப்பும் பயமும் பதற்றமும் நிறைந்த சமூக வாழ்வில் பிரச்சினைகளும் சிக்கல்களும் ஏற்படுவது இயல்பானதே. அவற்றிலிருந்து விடுபட்டு சற்று ஆறுதல்பெற மனிதனுக்கு மிக நெருங்கிய துணையொன்று அவசியம். திருமண வாழ்க்கையின் மூலம் ஒருவருக்கு உடல், உள, சமூக ரீதியான தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. குடும்ப வாழ்வில் மன அமைதியே உண்மையான இலக்காகும்.
கணவனிடம் மனைவியும், மனைவியிடம் கணவனும் மன அமைதியையும் ஆறுதலையும் பெறவேண்டும் என்பதற்காகவே திருமண பந்தம் வரலாற்றின் எல்லாக்கால கட்டங்களிலும் அனுசரிக்கப்பட்டு வந்துள்ளது. பாலூக்கத்தேவை வாழ்நாள் முழுவதும் நீடித்து நிற்பதில்லை. அது இளமைக்கால உளக்கிளர்ச்சிகளினால் உந்தப்படுவது. ஆனால் மன ஆறுதலும் அமைதியும் வாழ்க்கை முழுவதும் தேவையானது. நிம்மதி, மகிழ்ச்சி, உளத்திருப்தி, மன அமைதி என்பன எல்லா மனிதர்களும் எப்போதும் தேடிக்கொண்டிருப்பவை. தனது இரகசியங்களை, துன்பங்களை, இன்பங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் மனம்விட்டுப் பேசி சுமையை இறக்கிவைப்பதற்கும் மணவாழ்வு களம் அமைக்கின்றது. எனவே, குடும்ப வாழ்வின் உண்மையான இலக்கு இந்த உள அமைதியே.
பாலூக்கத்தேவையும் மனித இயல்புகளில் ஒன்று. மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் உரியது. தீர்க்கதரிசிகள், தத்துவஞானிகள், துறவிகள். ஆத்மஞானிகள் யாருமே இதற்கு விதிவிலக்கல்ல.
கட்டிளமைப்பருவத்திலிருந்து முன்முதுமை வரை மனிதனில் சுரக்கும் ஹோர்மோன்கள் பாலூக்கத்தை தருகின்றன. மனிதன் எதிர்ப்பால் கவர்ச்சிக்கு உள்ளாகின்றான். மனித உடலின் அடிப்படைத் தேவைகளில் பசியும் காம உணர்வும் முக்கியமானவை. இந்த உணர்வுத் தேவையை நாகரிகமான முறையில் பூர்த்தி செய்வதற்கான ஓர் ஏற்பாடாக திருமண வாழ்வு அமைந்துள்ளது. மிருகங்கள் போன்று கட்டற்றவகையில் மனிதன் இவ்வுணர்வை ஈடுசெய்ய முற்பட்டால் பெரும் சமூக சீர்குலைவு ஏற்படும். அதுதான் தற்போது மேற்குலக நாடுகளை வியாபித்து குடும்ப உறவுகள் சிதைந்து போயுள்ளன.
பாலூக்கத்தை நிறைவு செய்யும்போது இரு தேவைகள் இயல்பாக நிறைவேற்றப்படுகின்றன. பாலுணர்வுத் தேவை முழுமைபெறுவதோடு அதன் மற்றொரு விளைவாக மகப்பேறு அல்லது மறு உற்பத்தி நடைபெறுகின்றது. மனித நாகரிகத்தின் சிற்பிகளும் சமூகத்தை வழிநடத்தும் தலைமைகளும் எதிர்காலத்திற்குத் தேவை. மகவூக்கமும் அதன் பேறான குழந்தைப் பிறப்பும் எதிர்கால மனித சமூக இருப்புக்கு இன்றியமையாதவை.
மணவாழ்வும் குடும்ப அமைப்பும் தீமைகளிலிருந்து சமூகத்தை பாதுகாப்பதற்கான ஒரு காப்பரணாகும். பாலூக்கத்தை ஒழுங்குபடுத்தப்படாத வகையில் அல்லது மனம்போன போக்கில் ஈடுசெய்ய முற்பட்டால் அறமும், ஒழுக்கமும் கேள்விக்குள்ளாகிவிடும். சமூகம் கீழ்த்தரமான நிலையிலிருந்து தன்னை விடுவித்து உயர் இலக்குகளை நோக்கிப் பயணிக்க வேண்டுமாயின் அங்கு உயர்ந்த இலட்சியங்கள் வேண்டும். மிருக உணர்வுகள் நெறிப்படுத்தப்பட வேண்டும்.
அந்த உணர்ச்சிகள் நெறிப்படுத்தப்படாமலும் இவ்வுணர்ச்சிகளுக்கு இயற்கைக்கு முரணாக செயற்பட முனையும்போதே அநாகரிக, இழிநிலைகள் உருவாகி மனித நாகரிகத்தையே புதைகுழிக்குத் தள்ளுகிறது. குடும்ப வாழ்க்கை இன்பகரமாக அமைய வேண்டுமாயின் திருமணம் முடிப்பதற்கு முன்னரும் திருமணம் முடிந்த பின்னரும் குடும்ப வாழ்க்கையின் வெற்றிக்கான உளவளத்துணையை பெற்றுக்கொள்வது இன்றியமையாதது.
உளவியலும் குடும்ப வாழ்வியலும்
ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்கள் உடல்ரீதியில் பலவீனமானவர்கள். பெண்களை சமூகத் தீமையிலிருந்து பாதுகாத்து அவர்களின் கற்புக்கும் இருப்புக்கும் உத்தரவாதமளிக்க வேண்டுமாயின் அவர்களுக்கோர் ஆண் துணை அவசியம். இதில் பெண்களின் பொருளாதாரம், பாதுகாப்பு, மகவூக்கம் என்பனவும் உறுதி செய்யப்படுகின்றது. அத்தோடு திருமணத்தால் முதுமையாதலின்போது ஆறுதல் கிடைக்கின்றது. உடல் ரீதியிலும் உள ரீதியிலும் மூப்படைந்தவர்களை பராமரிப்பது மிக அவசியம். ஏரிக் எரிக்சன், “மூப்பில் ஏற்படும் உடல் பலவீனத்தை விட உளப் போராட்டம் தீவிரமானது” என்கிறார்.
மூன்று வகையான முதியோர் ஒப்பீட்டுரீதியில் தீவிர உளப்பாதிப்புக்கு உள்ளாவதாக எரிக்சன் குறிப்பிடுகிறார். திருமணம் முடிக்காத நிலையில் முதுமை அடைந்தவர், பிள்ளைப்பேறு அற்ற முதியோர், வயதுமுதிர்ந்த காலத்தில் பிள்ளைகளைப் பிரிந்து வாழ்பவர்கள் என்பதே அந்த மூன்று வகையினராகும். எல்லா மனிதர்களுக்கும் நட்பு தேவையானது. மிக நெருங்கிய நண்பர் ஒருவர் தேவை. நீடித்த நட்புக்கு திருமணம் நல்லதோர் களம். புத்தியுள்ள பெண்ணே தனது கணவனின் நெருங்கிய நண்பனாக இருக்க முடியும். கணவனது நெருங்கிய நண்பனாக அவரது மனைவியே இருக்க முடியும். திருமண பந்தத்தில் இணைகின்ற இருவர் பரஸ்பரம் பக்கத்தில் இருக்கக்கூடிய நண்பர்களாக வாழ்நாள் முழுவதும் நீடிக்கலாம். இத்தகைய நட்பு குடும்ப வாழ்வில் மட்டுமே சாத்தியமாகும்.
இவை மட்டுமன்றி, திருமணமானது உடல் ஆரோக்கியத்தில் பெரும்பங்கு வகிக்கின்றது. மனிதனின் உடல், உளத் தேவைகள் திருமணத்தின் மூலம் நிறைவேற்றப்படுவதானது உடலை ஆரோக்கியத்துக்கு இட்டுச்செல்கின்றது. அத்தோடு, பாலியல் உறவானது இதயக்கோளாறுகளிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கு உதவுவதாக நவீன விஞ்ஞானம் குறிப்பிடுகின்றது. அதுமட்டுமன்றி, இன்னும் பல உடலியல் சார்ந்த நோய்களிலிருந்து தவிர்த்துக்கொள்ள திருமண பந்தம் வழிவகுக்கின்றது. திருமண வாழ்வில் ஏற்படும் சண்டைகள், சச்சரவுகளை தவிர்த்து ஒருவருடன் ஒருவர் கலந்து சந்தோசமாக வாழவேண்டுமெனில், கணவனும் மனைவியும் தனது கடமைகளையும் பொறுப்புக்களையும் உணர்ந்து செயற்பட வேண்டும்.
கணவன், மனைவியாக வாழ்வைத் தொடங்கியதன் பின்னர் அன்பும் பாசமுமே அவர்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தும். இருவருக்கும் இடையிலான தொடர்பாடல், அதற்குப் பயன்படுத்தும் வார்த்தைகள், அன்பான அரவணைப்பு என்பன அந்த உறவின் சுமுகநிலையைத் தீர்மானிக்கும். மிக முக்கியமாக, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளல் வெற்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வின் அத்திவாரமாகும்.
ஏனெனில், இது மகிழ்ச்சியைத் தரும் விடயம் மட்டுமன்றி பிரச்சினைகளைத் தவிர்க்கவும் உள்ள வழியாகும். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாதபோது மகிழ்ச்சியும் சந்தோசமும் மறைந்துவிடும். மட்டுமன்றி, வாழ்க்கை முரண்பாடுகளாலும் மோதல்களாலும் சிதைந்துபோகும். திருமணம் முடித்து தசாப்தங்கள் கடந்தும் ஒருவரை ஒருவர் முழுமையாகப் புரிந்துகொள்ளாத கணவனும் மனைவியும் இருக்கத்தான் செய்கின்றனர். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமலேயே வாழ்நாள் முழுவதையும் கடத்துகின்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த நிலை சமூகங்களிலிருந்து மாறவேண்டும் வெற்றிகரமான திருமண வாழ்க்கை புரிந்துணர்வுடன் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
உளவளத்துணையும் முரண்பாடுகள் தவிர்த்தலும்
உண்மையில் கணவனும் மனைவியும் பரஸ்பரம் புரிந்துகொள்ள வேண்டிய விடயங்களை அறிந்துகொள்ள வேணடும். அவற்றை பின்வருமாறு அடையாளப்படுத்தலாம்.
பெறுமானங்கள், மனவெழுச்சிகள், பால் வேறுபாடுகள், எதிர்பார்ப்புகள், உரிமைகள், கடமைகள், பலங்கள், பலவீனங்கள் என்பவற்றை அறிந்துகொண்டால் திருமண வாழ்கையை வெற்றிகரமாக்க முடியும்.
ஒவ்வொருவரும் நிகழ்வுகள், சம்பவங்கள் என்பவற்றுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஒருவருக்கு ஒருவர் வேறுபடுகின்றது. எல்லோரும் ஒரேவகையான பெறுமானங்களை கொண்டிருப்பதில்லை. ஒருவருக்கு வாசிப்பும் ஆய்வும் முதன்மையான பெறுமானமாக இருக்க மற்றொருவருக்கு சமூக சேவையோ சமையலில் புதுப்புது வகையை செய்து பார்ப்பதோ உயர் பெறுமானத்துக்குரியதாக இருக்கலாம். பெறுமானங்களில் எதுசரி, எது பிழையென தீர்ப்புக் கூறுவதைவிட அடுத்தவர்களின் பெறுமானங்களை அங்கீகரிப்பதே முரண்பாடுகளை தவிர்ப்பதற்கான வழி. ஒருவரின் பெறுமானத்தை மற்றவர் புரிந்துகொள்ளும்போது தான் மகிழ்ச்சியான குடும்பவாழ்வு சாத்தியமாகும்.
மனவெழுச்சிகளிலும் மனிதனுக்கு மனிதன் வேறுபட்டவன். ஒவ்வொருவரிலும் மனவெழுச்சிகள் வெவ்வேறு அளவில் செயற்படுகின்றன. மனவெழுச்சிகள் மனித வாழ்வின் ஆதார சுருதிகள். அவை அவசியமானதும்கூட. ஒருவர் தீர்மானங்களை மேற்கொள்ளும் போதும் மற்றவருடனான உறவின் எல்லையை வகுக்கும்போதும் தொடர்பாடலின் போதும் மனவெழுச்சிகள் பங்குகொள்கின்றன. மனவெழுச்சிகள் எல்லா மனிதர்களிடமும் ஒரேயளவில் காணப்படுவதில்லை. அதன் அளவும் தாக்கமும் வேறுபடுகின்றன.
மனவெழுச்சிகளை முகாமை செய்யத் தெரியாத போது தம்பதியினரிடையே தேவையற்ற பிரச்சினைகள் எழ வாய்ப்புள்ளது. எனவே, எதிர்மறையான மனவெழுச்சிகளைத் தோற்றுவிக்கும் சூழ்நிலைகளைத் தவிர்க்க வேண்டும். மனவெழுச்சிகளை ஆரோக்கியமாகவும் அறிவுபூர்வமாகவும் கையாளத் தெரிந்திருத்தல் வேண்டும். ஏனெனில் கட்டுக்கடங்காத ஒரு கோடி உணர்ச்சியே நிரந்தர விவாகரத்துக்கு இட்டுச்செல்கிறது.
ஆண், பெண் இருவரும் மனிதர்களாக இருப்பினும் இருவரது உடல்கட்டமைப்பும் இயல்புகளும் வித்தியாசமானது. பெண்கள் அதிகமாக உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு உட்படுவர். பெண்களின் இந்த இயல்புகளையும் உடற்குறை நிறைகளையும் ஆணும் பெண்ணும் புரிந்துகொள்ளல் வேண்டும். இது அவரவர் பணியை சரியாகச் செய்வதற்கும் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் துணையாக இருக்கும்.
குடும்ப வாழ்விலேயே ஆணும் பெண்ணும் இயல்பாகத் தேடும் ஒற்றுமையும் சந்தோசமும் ஈடேறுகின்றது. மகிழ்ச்சியான மணவாழ்வைத் தீர்மானிக்கும் பிரதான காரணி இருவரது எதிர்பார்ப்புகளும் பரஸ்பரம் நிறைவேற்றப்படுவதே. எதிர்பார்ப்புகள் ஒருவரது இயல்பு, பெறுமானங்கள், சூழ்நிலைகள், மனவெழுச்சிகளைப் பொறுத்து வேறுபடலாம்.
பொதுவாக அன்பு, ஆதரவு, பாதுகாப்பு, வலிமை போன்றவற்றை மனைவி கணவனிடம் எதிர்பார்க்கின்றாள். கணவன் மனைவியிடம் அன்பு, மென்மை, ஈடுபாடு போன்றவற்றை எதிர்பார்க்கின்றான். இந்த எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் முடிவடையும்போது முரண்பாடுகள் முகம் காட்டத் தொடங்குகின்றன. இதுவே மனக்கசப்புக்கும் மகிழ்ச்சியற்ற குடும்ப வாழ்வுக்கும் காரணமாகிவிடும்.
தம்பதியினர் தமது கடமைகளைப் புரிந்துகொண்டு செயற்படும்போதே மகிழ்ச்சியான குடும்பவாழ்வை உறுதி செய்யலாம். ஒருவர் தனது கடமைகளைப் புறக்கணிப்பதும் உரிமைகளை அனுபவிப்பதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருப்பதும் குடும்பத்தகராறுகளை ஏற்படுத்தும். எனவே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளல் என்பதில் தமது கடமைகளையும் உரிமைகளையும் புரிந்துகொள்ளல் என்பது முக்கியமானது.
ஒருவர் அடுத்தவரின் பலங்கள், பலவீனங்களை விளங்கியிருப்பதும் சமாளிப்புடன் கூடிய, விட்டுக் கொடுப்புடன் கூடிய குடும்ப வாழ்க்கைக்கு அவசியமாகும். எல்லா மனிதர்களிடமும் பலங்கள் உள்ளன. பலவீனங்களும் உள்ளன. பலவீனம் இல்லாத எந்த மனிதனும் இந்த உலகில் இல்லை. பொதுவாக பலவீனங்களும் ஆளுக்காள் வேறுபடுகின்றன. பலங்களைப் புரிந்துகொள்ளும்போது தம்பதியினர் மென்மேலும் அவற்றை வளர்த்துக்கொள்ள பரஸ்பரம் ஒத்துழைக்கலாம், உதவலாம், ஆலோசனை வழங்கலாம். குறைந்தபட்சம் தடைக்கல்லாக இருக்காமல் அவை வளர்வதற்கு விலகி இடம் கொடுக்கலாம். பலவீனங்களைப் புரிந்துகொள்ளும்போது அவற்றை இயலுமானவரை குறைத்துக் கொள்வதற்கு ஒருவருக்கொருவர் உதவி செய்யலாம். முடியாதபோது சகிப்புத்தன்மையுடனும் விட்டுக்கொடுப்புடனும் நடந்து கொள்ளலாம். பொறுமையைக் கையாளலாம். எனவே தம்பதியினர் தம்மிடமுள்ள பலங்கள், பலவீனங்களை பரஸ்பம் புரிந்துகொள்ளல் போன்ற மேற்படி கூறப்பட்ட வியடங்களை குடும்ப வாழ்க்கையில் கணவனும் மனைவியும் கடைப்பிடிக்கின்றபோது முரண்பாடுகள் கூர்மையடையாது தவிர்க்கப்படுவதோடு குடும்ப வாழ்க்கையில் வசந்தம் பிறக்கவும் வழி பிறக்கும்.
-Vidivelli