பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ்
மனித வாழ்வின் ஆதாரம் இயற்கைதான். நாம் தாயின் வயிற்றில் இருக்கும்போதே இயற்கையின் தேவை ஆரம்பமாகி விடுகின்றது. சுத்தமான காற்று, சுத்தமான நீர், சுத்தமான சுற்றாடல். நிலமும் நீரும் வனமும் வன ஜீவராசிகளும் காற்றும் சுத்தமான வளிமண்டலமும் இன்றி மனித வாழ்வு சாத்தியமில்லை.
எறும்புகள், தேனீக்கள், மீன்கள், ஆடு மாடுகள், காட்டு விலங்குகள் நிலத்தின் பசுமை, பூச்சிகள், புழுக்கள், குளங்கள், நீர்நிலைகள் இவற்றிற்கு மத்தியில்தான் சாதகமான உயிர்வாழ்வை இயற்கை வடிவமைத்துள்ளது. கொழும்பு, சென்னை போன்ற நகரங்களின் கதைகளில் சில மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் புத்தளம், புத்தளம் மாவட்டம் போன்ற இயற்கைச் சூழல் என்ற இயல்பான சுற்றாடல் வரம்புகளுக்குள் நிறுவப்பட்டுள்ள பிரதேசங்களின் உயிர்நாடி இச்சுற்றாடல் ஒழுங்குகள்தான். அவற்றைச் சீரழிப்பது அங்கு வாழும் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும்.
இலங்கையின் ஒரு மாவட்டத்தின் இயற்கை வளம் அனைத்து மாவட்டங்களுக்கும் பயன் தருவதாகும். முழுநாட்டிற்குமான இயற்கையின் கொடை அது. சிங்கராஜவனம் அந்தப்பகுதிக்கு மட்டும் சொந்தமானதல்ல முழு உலகுக்குமான இயற்கையின் கொடை. புத்தளத்துக்கும் ஒரு சிங்கராஜவனம் இருக்கிறது.
வண்ணாத்திவில்லுவையும், கரைத்தீவையும், சேராக்குழியையும் கடந்து சற்றுத் தூரம் சென்றால் புத்தளம் மாவட்டத்தின் சிங்கராஜவனத்தை அடைந்து விடலாம். ஈழப்போரின்போது வெளியேற்றப்பட்ட வடபுல மக்கள் 30 வருடங்களின் பின்னர் ஊர் திரும்பியபோது அவர்களின் மீள்குடியேற்றம் தடுக்கப்பட்டது. காடழிப்பு ஒரு காரணமாகக் காட்டப்பட்டது. நீங்கள் எங்காவது குடியேறுங்கள். உங்கள் ஊர் என்பது பழையகதை. இது இப்போது காடு. காடு இயற்கையின் அருஞ்செல்வம். அதில் கைவைக்கக்கூடாதென அரசாங்கத்தின் சில தரப்பினரும் கறுப்பு ஊடகத்தினரும் கூச்சலிட்டனர். காட்டின் காதலர்களாக (போலிக்) கண்ணீர் வடித்தனர். இன்று சுமார் 300 ஏக்கர் காடு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. பாரிய குழிகள் தோண்டப்பட்டுள்ளன. பேசுவதற்கு யாருமில்லை. கறுப்பு ஊடகங்கள் செயலிழந்துள்ளன. உள்ளூர் அரசியல் தூங்கிவழிகிறது. வெற்றுப் பேச்சுக்கள் வானைப் பிளக்கின்றன.
“மாசற்ற புத்தளம்” (Clean Puttalam) என்ற பதாகையின் கீழ் மக்கள் அணிதிரண்டுள்ளனர். பசுமையான, புத்தளம் எமக்கும் எமது அடுத்த சந்ததிகளுக்கும் அது வேண்டும். அதை விட்டுத்தர மாட்டோம். என்பதுதான் அவர்களின் அடிநாதக் கருத்து. பொது நல நோக்குள்ள நல்ல இளைஞர்கள் வனிதையர்கள் ஒன்று கூடிச் செயலாற்றும் சமூகநல மக்கள் இயக்கம் அது. அரசியல்வாதிகள் தூங்கும்போது மக்கள் விழித்துக்கொள்கின்றார்கள்.
குடிமைச்சமூக எதிர்ப்பு (Civil Resistance) என்பதை நோக்கி மக்கள் நகர்ந்துள்ளனர். தான்தோன்றித்தனமான அநீதியான அரசின் செயல்களை தட்டிக்கேட்க ஒரு சாதாரண குடிமகனுக்கு உள்ள உரிமையைத் தமது இலட்சியமாகக் கொண்டு அவர்கள் இயங்குகிறார்கள். அவ்விளைஞர்களின் மனதில் பதிந்துள்ள இலட்சிய வாசகம் “மாசற்ற புத்தளம்”. முழு மாவட்டத்திற்குமான பொறுப்பில் இருந்து எல்லா மக்களையும் இணைத்து அவர்கள் செயற்படுகிறார்கள். இது ஒற்றுமையின் தருணம்.
கல்பிட்டி, கரைத்தீவு, நாவல்காடு வண்ணாத்திவில்லு, ஆணைமடு, தலவில, கட்டைக்காடு, மதுரங்குளி, கடையாமோட்டை, மாம்புரி, பள்ளிவாசல் துறை போன்ற எல்லா ஊர் மக்களினதும் பௌத்த, கிறிஸ்தவ, இந்து, இஸ்லாம் என்ற எல்லா இன மக்களையும் மொழிகளில் கூட பேதமின்றி அனைத்துத் தரப்பினரையும் எல்லா அரசியல் வாதிகளையும் ஒன்றிணைத்துச் செயற்பட வேண்டிய நேரம் இது.
“மாசற்ற புத்தளம்” என்பது புத்தளம் மாவட்டத்தை அரக்கர்களின் பிடியிலிருந்து பாதுகாத்து மக்களை நோயின்றி வாழவைக்கும் புனிதப்பணியாக மாறியுள்ளது. அரசியல் இதற்குத் தேவை. ஆனால் அது அரசியல் காய்நகர்த்தும் அரங்கம் அல்ல. அரசியல் காய்நகர்த்தல்களின் இறுதிக்கட்ட ஆட்டத்தின்போதுதான் நுரைச்சோலை அனல்மின் திட்டம் வெற்றிவாகை சூடியது.
ஆனால், அரசியல் சாணக்கியகாரர்களின் அரசியல் துருப்புகளால் புத்தளம் மீட்சிபெறும் என்ற கடைசி ஆசை புத்தளம் மக்களின் உள்ளங்களில் ஊசலாடிக் கொண்டிருப்பதை நாமறிவோம்.
இயற்கை வளத்தை அநியாயமாக அழித்து சுற்றாடலைச் சீர்குலைப்பதற்கு யார் முயன்றாலும் அவர் மனுக்குலத்தின் எதிரியே. முன்னர், வில்பத்து காட்டுக்காக அவலக் குரல் எழுப்பிய நாட்டுத்தலைவர்கள் புத்தளத்தின் சிங்கராஜவனம் சின்னாபின்னம் செய்யப்பட்டு வரும் அநீதியை அங்கீகரிப்பது தேசத்தின் தலைவிதியாகும்.
அரசியல் தலைவர்கள் அற்ற புத்தளத்தின் வெறுமை நிலையை மக்கள் இன்று தற்காத்து வருகிறார்கள். இளைஞர்களின் தியாக உணர்வுகளுக்கு மக்கள் மதிப்பளிக்கிறார்கள். ஒரு எறும்புக்குக்கூட அநியாயம் இழைக்காது, ஜனநாயகப் பெறுமானங்களுக்கு மதிப்பளித்து நடத்தும் இவ்விளைஞர்களின் போராட்டம் வெற்றிபெறவேண்டும்.
சந்தர்ப்பவாத அரசியலுக்கு அடிபணியாத, உள்நோக்கங்களுடன் செயற்படாத ஜனநாயக ரீதியான போராட்டங்களை உலகம் ஆர்வத்துடன் வரவேற்கிறது. குடி மக்களின் இயல்பான துயர் வெளியீடுகளுக்கும் அநீதிக்கு எதிரான போராட்டங் களுக்கும் ஜெனிவா வரை ஒரு செல்வாக்கு இருக்கிறது.
குடிமக்களின் முறையீடுகளைச் சொந்த நாடே நிராகரிக்கும்போது எழும் சோதனையும் விரக்தியும் ஆபத்தானதாகும். சாத்வீகத்திலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்ட மக்களின் நியாயமான எளிமையான கோரிக்கைகளை அலட்சியப்படுத்துவது ஜனநாயகவாதிகளின் பண்பாக இருக்கமுடியாது.
நல்லாட்சி என்பது மக்களாட்சியின் உயர்ந்த பரிமாணம். அந்த உயர்ந்த இலட்சியத்திற்கு எதிராகத்தான் அரசாங்க உயர்மட்டத் தலைவர்கள் தான்தோன்றித்தனமாகக் கருத்துகளை அள்ளி வீசுகின்றனர். மன்னர்களைப் போல் அதிகாரத் தொனியில் சத்தமிடுகின்றனர்.
இங்கு நடப்பது சுற்றாடலைப் பாதுகாக்கும் முயற்சி மட்டுமல்ல, அரசாங்கத்திட மிருந்து எந்த உதவிகளும் சலுகைகளும் இன்றி உடல் உழைப்பிலும் மீன்பிடியிலும் விவசாயத்திலும் வர்த்தகத்திலும் ஈடுபட்டிருக்கும் சுமார் 15,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் பாரிய போராட்டமாகவும் இது அமைந்துள்ளது. துரதிஷ்டவசமாக புத்தளம் குறிவைக்கப்பட்டுள்ளது.
புத்தளத்தின் சுற்றாடல் துயரத்தின் வயது அரை நூற்றாண்டைக் கடந்துவிட்டது. அந்த அழுத்தத்தின் வெளிப்பாடுதான் இன்றைய போராட்ட அலையாகும். 1970 களின் ‘தம்மன்னா’ (தற்போது ஹொல்சிம்) சீமெந்து தொழிற்சாலையுடன் இந்த வியாதி ஆரம்பமாகிறது. படித்த செல்வாக்குமிக்க அரசியல் தலைவர்கள் புத்தளத்திற்குத் தலைமை தாங்கிய காலத்தில் அது நடந்தது.
எதிர்ப்புக்கள் இருந்ததா என்று எம்மால் அறிய முடியவில்லை. சுற்றாடலை நாசம் செய்து புத்தளம் பிரதேசத்தைத் தூசிப்படலத்தால் மூழ்கடிக்கும் இராட்சத தொழிற்சாலைக்குதான் நாம் அனுமதி தருகிறோம் என்பதை மெத்தப்படித்த முன்னைய அரசியல்வாதிகள் அறியாமல் இருந்தார்களா? சீமெந்துக்கான கற்கள் தோண்டப்படும் பாரிய குழிகளால் அடுத்த அரை நூற்றாண்டுக்குள் புத்தளம் மாவட்டம் பெரும் சுற்றாடல் சிக்கல்களுக்கு முகம் கொடுக்கும் என்பதனை இவர்கள் அறியவில்லையா?
அப்போது நாங்கள் பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்கள். புத்தளத்திற்கு சீமெந்துத் தொழிற்சாலை வருவதாகவும் புத்தளம் வாழ் மக்களுக்கு 85% தொழில் வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாகவும் அங்கும் இங்குமாக செய்திகள் பரவின. அரசாங்கம் தொழில் வாய்ப்பைக் காட்டி புத்தளம் அரசியல்வாதிகளை வீழ்த்தி இருக்கவேண்டும்.
புத்தளம், குறிப்பாக புத்தளம் நகரம் இன்று ஆஸ்துமா, நுரையீரல் சார்ந்த நோய்கள் முதல் புற்றுநோய்வரை முகங்கொடுத்து வருகிறது. புத்தளம் கடல் ஏரியால் புத்தளம் பெற்றிருந்த நோய்த்தடுப்பு சுகாதாரப் பாதுகாப்பு வலயம் இன்று சின்னா பின்னமாகியுள்ளது. புத்தளம் சுற்றுச் சூழலையும் கடல் ஏரியையும் சீமெந்து ஆலை வெளியிடும் புகையும் தூசு மண்டலமும் ஆக்கிரமித்துள்ளன. நுரைச்சோலை அனல் மின் நிலையம் முழு பிராந்தியத்தையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சுண்ணாம்புக்கல் மற்றும் பல்வேறு கனிம பொருட்களுடன் மிகப்பெரிய வனாந்தரத்தையும் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நெற்செய்கைக்கான நிலப் பரப்பையும் கொண்ட அறுவாக்காடும் ஐலிமலையும் சீமெந்துத் தொழிற்சாலை, உத்தியோக வாய்ப்புக்கள் என்ற பெயரில் பன்னாட்டுக் கொம்பனிகளுக்குத் தாரை வார்க்கப்பட்டது. முதல் பிழை இங்கு தான் ஆரம்பமாகிறது. 40, 50 வருடங்களாக குழிகள் தோண்டப்பட்டு அறுவாக்காடும் ஐலி நிலப்பகுதியும் நாசம் செய்யப்பட்டன.
‘பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்’என்ற பழமொழி புத்தளத்திற்குச் சரியாகப் பொருந்துகிறது. எல்லா மாவட்டங்களினாலும் நிராகரிக்கப்பட்ட, துரத்தி அடிக்கப்பட்ட நிலக்கரி அனல்மின் நிலையத்திட்டத்தை இருகரம் நீட்டி ஏற்றுக் கொண்ட கொடுமையும் புத்தளத்தில்தான் நடந்தது. உலகம் முழுக்க நிராகரிக்கப்பட்டு உயிர்வாழ்வுக்கு ஆபத்தானது என்று நிரூபிக்கப்பட்ட காலாவதியாகிப்போன நிலக்கரி மின் திட்டம் நுரைச்சோலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.
சீமெந்துத் தொழிற்சாலை புத்தளத்திற்கு பரிசளிக்கப்பட்டபோது சுற்றாடல் பற்றிய அறிவு வளர்ந்திருக்கவில்லை என்பது உண்மைதான். நுரைச்சோலை அனல்மின் நிலைய பரிசளிப்பு நம் கண்முன்னால் நேற்று நடந்த துர்சம்பவம். அது சீமெந்துத் தொழிற்சாலையையே தூக்கிச் சாப்பிடக் கூடிய, சுகாதாரத்தை சீர்குலைத்து சுற்றாடலை பெரும் அனர்த்தத்திற்குள்ளாக்கக் கூடிய பெரிய நாசகாரத் திட்டம். அதற்கு மலர்மாலை அணிவித்து வரவேற்பளித்தவர்கள் அல்லது இக்கொடுமையை புத்தளத்தின் மீது திணித்த அந்த கனவான்கள் யார்?
நுரைச்சோலையும், மாம்புரியும், நாவக்காடும் சுற்றியுள்ள அநேக கிராமங்களும் அரசாங்கத்தின் அந்த அரிய வெகுமதியினால் சுருண்டு சுண்ணாம்பாகிக் கிடக்கின்றன. அந்த மக்களின் அடிப்படை வாழ்வாதாரமான மீன்பிடியும், விவசாயமும் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளன. நிலக்கரித் தூசும், சாம்பல் போன்ற பல்வேறு இரசாயனத்துகள்களும் சுற்றாடலை சர்வநாசம் செய்து வருகின்றன.
கடலுக்கு அனுப்பத்தகுதியற்ற கழிவும் அதிக வெப்பமும் கொண்ட உலைகளில் வெப்பமூட்டப்பட்ட நீர் கடலுக்குள்தான் பாய்ச்சப்படுகின்றன. சீமெந்துத் தொழிற்சாலை நிறுவி சுமார் 30 வருடங்களில் நுரைச்சோலைக்கு அனல் மின்சாரம் கொண்டுவரப்பட்டது. பல எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. சர்வ மதத்தலைவர்களின் ஒத்துழைப்பும் இடது சாரி சிங்களக்கட்சிகளின் ஆதரவும் கிடைத்தன. ஆனால் நடந்தது என்ன? சுற்றிவரக் கிராமங்கள், உயிரோட்ட மிக்க மக்களின் செயற்பாடுகள் வாழ்வாதாரத்தை வழங்கும் கவர்ச்சியான தொழிற்துறைகள் உள்ள அந்தப் பிரதேசம் எப்படி அனல் மின்சாரத்திற்குத் தாரைவார்க்கப்பட்டது?
சுற்றாடல் பற்றிய மக்களின் அறியாமை ஒருபுறம், எவ்விதத் தீங்குகளுமின்றி, நவீன பாதுகாப்பு முறைகளுடன் பெரிய அதிசயத்தை உங்கள் ஊருக்குத் தருவோம் என்ற அரசியல்வாதிகளின் ஏமாற்று மறுபுறம். பல்லின, பல மத மக்களுக்கிடையில் சிறந்த ஒருங்கிணைப்பு இல்லாமை போன்ற பலவீனங்களும் இருந்தது உண்மைதான். ஆனால் இத்தனைக்கு மத்தியிலும் திருப்பி அனுப்பப்பட்டுக்கொண்டிருந்த நுரைச்சோலை அனல் மின்சாரத் திட்டம் மீண்டும் புத்தளத்தில் நிலைகொண்டது எப்படி?. அரசியல் அனாதையாகியுள்ள புத்தளம் அதன் அரசியல் உணர்வுகளை இழந்து விடவில்லை. இந்தப் பிரச்சினையில் வெற்றியை நிலைநாட்ட அரசியல் ஒரு வழிமுறைதான். மக்கள் அதற்காக காத்திருப்பதும் உண்மைதான். ஆனால் இது மக்கள் போராட்டம். தியாகமும் பக்கச்சார்பற்ற போக்கும்தான் இதன் அச்சாணி. புத்தளம் மக்கள் அதில் வெற்றி கண்டு வருகிறார்கள். கிறிஸ்தவ மக்களும், தமிழ் மக்களும், பௌத்த மத தலைவர்களும் ஓர் அணியில் இணைந்த காட்சி வெற்றியின் அடையாளமாக கருத வேண்டும்.
-விடிவெள்ளி