இந்திய – பாகிஸ்தான் முறுகல் ஆரோக்கியமானதல்ல

0 832

உலகிலேயே மிகவும் இராணுவமயமான மண்டலங்களில் ஒன்று காஷ்மீராகும். அணு ஆயுத நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் மிகவும் கொந்தளிப்பான பகுதியாக இது இருந்து வருகிறது. இந்த பிரதேசத்தில் நிகழ்ந்துள்ள வன்முறை இதன் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

கடந்த வாரம் புல்வாமா மாவட்டத்தில் இந்திய படைப்பிரிவுகள் மீது பல தசாப்தங்களில் காணாத மிகவும் மோசமான தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சண்டையில் 50 இந்திய படையினர் கொல்லப்பட்டனர்.

கடந்த பத்தாண்டுகளில் இந்த பிரதேசத்தில் நிகழ்ந்த உயிரிழப்பின் எண்ணிக்கையை விட இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கையே அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

2018 ஆம் ஆண்டு பொது மக்கள், பாதுகாப்பு படைப்பிரிவுகள் மற்றும் தீவிரவாதிகள் உட்பட 500 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

சுதந்திரம் அடைந்தது முதல் காஷ்மீர், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்து வருகிறது. சீனா ஒரு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் நடைபெற்ற தற்கொலை தாக்குதலில் 40 இந்திய சிப்பாய்கள் உயிரிழந்தமை, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைகள் ஆகியவை, விரைவில் இந்திய பாகிஸ்தான் உறவில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையை தகர்த்துள்ளன.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கி வருகின்ற தீவிரவாதக் குழுக்களை இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவின் சில நகரங்களில் பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. கோபமடைந்த கும்பல்கள் காஷ்மீர் மாணவர்களையும், வணிகர்களையும் இலக்கு வைத்து தாக்கியுள்ளன. இந்தியச் சிறை ஒன்றில் பாகிஸ்தான் கைதி ஒருவர் இந்திய கைதிகளால் கொல்லப்பட்டுள்ளார்.  பாகிஸ்தானுக்கு செல்கின்ற நதி நீரை நிறுத்திவிட இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாக பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  ”இந்தியா எங்களைத் தாக்கினால், நாங்களும் பதிலடி கொடுப்போம். காஷ்மீர், புல்வாமா தாக்குதல் குறித்து எந்தவிதமான உறுதியான ஆதாரங்களும் இன்றி இந்திய அரசு எங்கள் மீது  குற்றம் சாட்டுகிறது.  இது குறித்து இந்திய அரசு தெளிவான, உறுதியான ஆதாரங்களை வழங்கினால் நாங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க தயாராகவுள்ளோம்”  எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இரு நாடுகளும் காஷ்மீர் விவகாரத்தில் ஒன்றுடன் ஒன்று முரண்பட்ட கொள்கைகளைக் கொண்டுள்ளன. இது பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை கடுமையாகப் பாதித்துள்ளது.  இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளாகும். இந்த நாடுகளுக்கு இடையே ஏற்படும் எந்தவொரு புதியதொரு மோதலும் புதிய கோணத்தை எடுக்கும்.

1947 மற்றும் 1965களில் இரண்டு போர்கள் நடந்துள்ளன. பல ஆயுத நடவடிக்கைகள், இராணுவம் மற்றும் பொது மக்கள் மீது எண்ணிக்கையற்ற தாக்குதல்கள் மற்றும் அண்டை நாடுகளோடு பதற்றம் அதிகரிப்பு எனும் கசப்பான அனுபவங்கள் நம் முன் உள்ளன.  இதன் விளைவாக, பிராந்தியத்தின் பொருளாதாரம் வலுவற்றதாக உள்ளது. வேலைவாய்ப்பில்லா திண்டாட்டம் அதிகரிப்பு மற்றும் அரசியல் ஸ்திரமின்மையால் இரு நாடுகளும் அல்லல்பட்டு வருகின்றன.

எனவேதான் இந்த விடயத்தில் இரு நாடுகளும் பேச்சவார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர போருக்கு முனையக் கூடாது. புல்வாமா தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டறிந்து தண்டிக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று இந்தியாவின் நடவடிக்கைகளும் காஷ்மீர் மக்களையோ பாகிஸ்தான் மக்களையோ பாதிப்பதாக அமையக் கூடாது என வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.