19 மீது அரசாங்கம் துஷ்பிரயோகம்
அரசியலமைப்பு பேரவையில் அரசியல் தலையீடு என்றும் சாடுகிறார் ஜனாதிபதி
அரசியலமைப்பு பேரவை முழுமையான அரசியல் தலையீட்டில் மட்டுமே செயற்பட்டு வருகின்றது. நிறைவேற்று அதிகாரத்தையும், அரசியலமைப்பினையும், நீதிமன்றத்தையும் முழுமையாகக் கட்டுப்படுத்தும் வகையிலேயே அரசியலமைப்பு பேரவை செயற்படுகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நான் உருவாக்கிய புனிதமான குழந்தையான 19 ஆம் திருத்தத்தை இந்த அரசங்கம் துஷ்பிரயோகித்துவிட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு பேரவை மீதான விவாதத்தில் உரையாற்றிய ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
எம்மால் உருவாக்கப்பட்ட எமது உண்மையான குழந்தையான 19 ஆம் திருத்த சட்டம் குறித்து விவாதிக்கின்றோம். நான் இதற்கு முன்னர் அரசியலமைப்பு பேரவை குறித்து சபையில் உரையாற்றிய விடயங்கள் தொடர்பில் சபாநாயகரும் பிரதமரும் பதில் கூறியிருந்தீர்கள். அதேபோல் இந்தப் பிரச்சினையில் நான் கொண்டுள்ள நிலைப்பாடு குறித்து ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தவறான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இதற்கு முன்னர் நான் முன்வைத்துள்ள கருத்துக்கள் குறித்து எழுந்துள்ள விமர்சனங்களை நான் நிராகரிக்கின்றேன். பிரதமரும், அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களில் நீதியரசர் நியமனத்தில் நான் எதிர்ப்பை வெளிபடுத்துகின்றேன் என்ற கருத்தினையே முன்வைக்கின்றனர். ஆனால் இவர்களின் நியமனத்தில் எந்த முரண்பாடும் இல்லை, அதிருப்தியும் இல்லை. எனினும் என்மீதான தவறான கருத்துக்களை நாட்டுக்கு முன்வைத்து என்னை பலவீனப்படுத்த எடுக்கும் முயற்சியாகவே உணர்கின்றேன்.
கடந்த 2015 ஜனாதிபதி தேர்தலில் நாம் அனைவரும் இணைந்து தேர்தல் பிரகடனம் ஒன்றினை வெளியிட்டோம். அதற்கு கைச்சாத்திட்ட நபர்கள் யார் என்பது இங்குள்ள அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட 49 அமைப்புகள் கைச்சாத்திட்டன. இதில் பிரதானமானது தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் நல்லாட்சியின் கொள்கையில் அதனுடன் தொடர்புபட்ட காரணிகள் உள்வாங்கப்பட்டன. அதேபோல் தேர்தல் பிரகடனத்தின் பிரகாரம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கமைய 19 ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டது. நான் ஜனாதிபதியாகத் தெரிவானதுடன் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை கொண்டுவருவது என்ற உடன்படிக்கை இருந்தது. அதேபோல் பல்வேறு காரணிகளை இணைக்கப்பாட்டுடன் செய்துகொண்டோம். பொதுத் தேர்தல் வரையில் இந்த சபையில் நாற்பதற்கும் சற்று அதிகமான உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் 142 உறுப்பினர்கள் இருந்தனர். இதில் 122 பேர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர். ஜனாதிபதி தேர்தலில் தெரிவாகி மூன்று வாரத்தில் கட்சியின் தலைமையை நான் எடுத்தவுடன் பாராளுமன்றத்தில் ஆளும், எதிர்க்கட்சி பேதமின்றி செயற்பட எமக்கு இந்த சபையில் ஒரு குறிப்பிட்ட காலத்தை பெற்றுக்கொடுத்தனர். சகல கட்சிகளும் சில மாதகாலமாக ஒத்துழைப்பு வழங்கின. அந்த ஒத்துழைப்பின்படியே 19 ஆம் திருத்தத்தை கொண்டுவந்தோம். அந்த ஒத்துழைப்பின் படியே 215 உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர். அதற்கமைய கொண்டுவரப்பட்ட 19 ஆம் திருத்தம் பிரதான வாக்குறுதியாகும்.
மேலும் என்னால் உருவாக்கப்பட்ட புனிதமான குழந்தையே 19 ஆம் திருத்தம். பல எதிர்பார்ப்புகளுடன் இந்தக் குழந்தையை நான் உருவாக்கினேன். இவ்வாறு எனது புனிதமான குழந்தையை காப்பாற்ற விஜயதாச ராஜபக் ஷ தனியாகப் போராடினார் என்பதை நான் மறக்கவில்லை. 19 ஆம் திருத்தம் குறித்து சபையில் எழுப்பப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் தனியாக முகங்கொடுத்து கேள்விகளுக்கு பதில்களை கொடுத்தார். எனினும் அவ்வாறு பெற்றெடுத்த குழந்தை ஒரு கள்ளனாக அல்லது அங்கவீனமாக பிறந்துவிட்டது. இன்று ஓர் ஊடகம் அதனை தெளிவாக எழுதியுள்ளது. ஓர் அங்கவீன குழந்தை என்ற கருத்தினை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். அநாவசிய தலையீடுகள் ஏற்பட்ட காரணத்தினால் இன்று 19 ஆம் திருத்தம் தவறிவிட்டது என்பதே உண்மையாகும்.
19 ஆம் திருத்தத்தின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை பாராளுமன்றத்திற்கும் சுயாதீன ஆணைக்குழுவிற்கும் கொடுக்கவே தீர்மானிக்கப்பட்டது. எமது சமூகத்தில் தானம் கொடுப்பது வழமையான ஒன்றாகும். யுத்தத்தில் எமது இராணுவத்தை தானம் கொடுத்தோம். ஆனால் அதிகாரத்தை தானம் செய்தவர்கள் என உலகத்தில் அவ்வாறு உள்ளனரா என தெரியாது. ஆனால் அதிகாரத்திற்கு வந்து அதிகாரத்தை தானம் கொடுத்த ஒரு நபர் நானாகவே இருப்பேன் என நினைகின்றேன். இந்த யுகத்தில் எந்தவொரு தலைவரும் செய்யாத ஒன்றை நான் இந்த ஆட்சிக்காக செய்துள்ளேன். ஆனால் 19 ஆம் திருத்தம் என்ற அந்தப் புனிதமான குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. 19 ஆம் திருத்தத்தில் அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழு அமைத்தோம். இதன் தன்மைகள் குறித்து 19 ஆம் திருத்தத்தில் தெளிவாக உள்ளன. ஆனால் அதனை நாம் நடைமுறைப்படுத்தவில்லை. மாகாணசபை முறைமை, அதனை எவ்வாறு கையாள்வது, எவ்வாறு பலப்படுத்துவது என்ற எந்தவொரு நகர்வையும் எவரும் முன்னெடுக்கவில்லை. மாகணசபை சாதகமா, பாதகமா என்ற காரணியைக்கூட எம்மால் கணிக்க முடியாதுள்ளது. 85 வீதம் மாகாணசபை நடத்துவதற்கும் 15 வீதம் அபிவிருத்திக்கும் நிதி ஒதுக்கப்படும் நிலைமை உள்ளது. அதேபோல் எனது மனசாட்சிக்கு அமையவே நான் உரையாற்றி வருகின்றேன். எமது கையால் ஒரு தவறு நடந்தால் அந்த தவறை நாம் நிவர்த்தி செய்ய வேண்டும். சுயாதீன ஆணைக்குழுக்களை நான் எப்போதும் குற்றம் சுமத்தவில்லை. சுயாதீன ஆணைக்குழு ஒரு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறான ஒரு கட்டுப்பாடு இல்லை என்றே நான் கூறினேன். பாதாள உலக கோஷ்டிகள், குடுக்காரர், கொள்ளையர் ஆகியோரை வெலிக்கடையில் இருந்து அங்குனுகொலபலஸ்ஸ சிறைக்கு அனுப்பினால் அதனை எதிர்த்து மனித உரிமை ஆணைக்குழு எம்மிடம் கேள்வி எழுப்புகின்றது. மனித உரிமை ஆணைக்குழு குடுக்காரர், கொள்ளையரை பாதுகாக்கவா உள்ளது. 21 மில்லியன் மக்களின் மனித உரிமை முக்கியமா அல்லது கொள்ளைகாரர், குடுக்காரார்களின் மனித உரிமை முக்கியமா என்ற கேள்வியை மனித உரிமை ஆணைக்குழுவிடம் கேட்க வேண்டும்.
சர்வதேச நாடுகளும் இன்று எமது மனித உரிமை குறித்தே பேசுகின்றன. அமெரிக்கா, அங்கு குற்றவாளிகளை மனித உரிமை பாதுகாக்கும் வகையிலா செயற்படுகின்றது. அவர்களின் சிறைகளை பார்த்தால் தெரியும். இவர்கள் எமக்கு மனித உரிமைகளை கற்பிக்க வருகின்றனர். இதைத்தான் நான் அன்றும் சுட்டிக்காட்டினேன். நான் அவ்வாறு கூறிய பின்னர் பலர் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அதேபோல் நீதியரசர் நியமனத்தில் நான் முரண்படுவதாகக் கூறுகின்றனர். நியமிக்கப்பட்ட நபர்கள் தொடர்பில் நான் குற்றம் சுமத்தவில்லை. அவர்களை குறித்து எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. ஆனால் நிராகரிக்கப்பட்ட நபர்கள் என்னை சந்தித்து பேசுகையில் கூறும் சில காரணிகளையே நான் கூறினேன். நிராகரிக்கப்பட்ட நபர்கள் தாம் ஏன் நிராகரிக்கப்பட்டோம் என்ற காரணியை தெரிந்துகொள்ள உரிமை உண்டு. 19 ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்ட போது இப்போதைய சபாநாயகர் கரு ஜயசூரிய அப்போது அமைச்சராக உரையாற்றிய காரணி. “மைத்திரி பிரகடனத்தை கையில் எடுத்துக்கொண்டு சந்தி சந்தியாக சென்று மக்கள் வரம் கேட்டோம். அரசியல் தலையீடு இல்லாத பொலிஸ், அரச சேவையை உருவாக்க வேண்டும். இதையே நாம் மக்களுக்கு கூறினோம். அதனையே நாம் அனைவருக்கும் கூறினோம். ஆகவே அதனை உருவாக்கவே நாம் இன்று முன்வந்துள்ளோம்” என நீங்கள் கூறியது எனக்கு இப்போது நினைவுக்கு வருகின்றது. நீங்கள் அன்று கூறிய காரணிகள் குறித்து இன்று குற்றம் சுமத்தப்படுகின்றது. அரசியலமைப்பு பேரவை அரசியல் மயமாக்கப்பட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவிட்டது. சபாநாயகர் அவர்களே, வேலியே பயிரை மேய்ந்தால் நிலைமை என்னவாகும்.
சிரேஷ்ட தன்மையை மட்டும் கருத்தில் கொள்ளாது அவர்களின் தகுதி, சுயாதீனத்தன்மை, திறமை என்ற காரணிகளை கருத்தில் கொள்வோம் என கூறினீர்கள். இதில் பிரச்சினை என்னவென்றால், நிராகரிக்கப்பட்ட நபர்கள் ஏன் தகுதியற்றவர் என்ற காரணியை தெரிவிக்க வேண்டும் என்பதேயாகும். இன்று 14 பேர் என் பின்னால் வந்து முறையிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்களை ஏன் நிராகரித்தனர் என்னிடம் கேட்கின்றனர். ஆகவே இந்தக் காரணி ஒரு கேள்வியாகவே உள்ளது. அதேபோல் எனக்குமா இதனை அறிந்துகொள்ள முடியாது? சபாநாயகர் என்ற வகையில் நீங்களோ அல்லது நீதியரசரோ ஏன் எனக்கு அறிவிக்கவில்லை. ஆகவே இந்த காரணிகளை அவதானிக்கையில் அரசியலமைப்பு பேரவைக்கு ஜனாதிபதியை மீறி செயற்பட முடியாது. ஆனால் அரசியலமைப்பு, நிறைவேற்று அதிகாரம், நீதிமன்றம் ஆகிய மூன்றும் அரசியலமைப்பு சபையினால் கட்டுப்படுத்தப்படுகின்றது..
மூன்று மாதத்திற்கு ஒருமுறை அறிக்கை கிடைக்க வேண்டும், அறிக்கை கிடைக்கின்றது. ஆனால் நிராகரிக்கப்பட்ட பெயர்களுக்கான காரணம் எனக்கு கிடைக்கவில்லை. சட்டமா அதிபர் நியமனம், பொலிஸ்மா அதிபர் நியமனம் என்பவற்றில் சுயாதீனம் இல்லை. அல்லது சில தலையீடுகள் உள்ளன. இவ்வாறு நியமிக்கப்பட்ட நபர்கள் குறித்து நாட்டில் பாரிய பிரச்சினை ஒன்று உள்ளது. இதில் அரசியலமைப்பு மீறல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதேபோல் அரசியலமைப்பு பேரவையின் கடமை, பொறுப்புக்களை கையாள சட்டதிட்டங்களை உருவாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது, அந்த சட்டதிட்டங்கள் வர்த்தமானிக்கு விடப்பட்டு பாராளுமன்றத்தில் சபைப்படுத்த வேண்டும் என்ற காரணிகள் உள்ளன. இதனை செய்துள்ளதா என்பது பாரிய கேள்வியாகும். ஆகவே இதுவே அரசியலமைப்பு பேரவையில் அரசியல் தலையீடுகள் ஏற்பட்டுள்ளன என்பதற்கு நல்ல அடையாளமாகும். நியமித்த நீதியரசர் எவரையும் நான் இலக்குவைத்து எந்தக் கருத்தினையும் முன்வைக்கவில்லை. என்னையும் நீதிச் சேவையையும் முரண்படவைக்கும் சூழ்ச்சியே இது. எனது கேள்வி நிராகரிக்கப்பட்ட வர்களுக்கான காரணம் என்ன என்பதேயாகும். இந்த கருத்தினை முன்வைத்தது உங்களை இலக்கு வைத்தோ அரசாங்கத்தை முன்வைத்தோ அல்ல. நாம் சரியான பாதையில் செல்லாவிட்டால் நெருக்கடியில் வீழ்வோம். ஆகவே எமது குழந்தையான 19 ஆம் திருத்தத்தை காப்பாற்ற வேண்டும். பாராளுமன்றம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதில் என்ன தீர்மானம் எடுக்குமோ அதனை நான் முழுமையாக ஏற்றுக்கொள்வேன் என்றார்.
-Vidivelli