தேசிய காங்கிரஸிலிருந்து விலகினார் உதுமாலெவ்வை
தலைவரின் சந்தேகப் பார்வையே விலகலுக்கு காரணம் எனத் தெரிவித்து 19 பக்கங்கள் கொண்ட கடிதத்தையும் அனுப்பினார்
(எம்.ஏ.றமீஸ், ரீ.கே.ரஹ்மதுல்லா)
தேசிய காங்கிரஸ் கட்சியின் அங்கத்துவத்திலிருந்தும், அக்கட்சியின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் தான் முற்று முழுதாக விலகிக் கொள்வதோடு, இக்கட்சியின் பெயரால் தான் மேற்கொண்டு வந்த அனைத்து நடவடிக்கைளை விட்டும் நீங்கிக் கொள்வதாகவும் இவ்விடயம் தொடர்பில் பத்தொன்பது பக்கங்கள் அடங்கிய கடிதமொன்றை தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண முன்பள்ளிக் கல்விப் பணியகத்தின் தவிசாளருமான எம்.எஸ்.உதுமாலெவ்வை தெரிவித்தார்.
தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவுடன் இணைந்து, அக்கட்சி ஆரம்பித்தது முதல் கடந்த இருபது வருட காலமாக தேசிய காங்கிரஸ் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பக்க பலமாக இருந்து செயற்பட்டவரும் அக்கட்சியின் முன்னாள் பிரதித் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெவ்வை கடந்த 2019.02.20ஆம் திகதி முதல் தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து தான் விலகிக் கொள்வதை தமது ஆதரவாளர்கள் மத்தியில் தெரியப்படுத்தும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட கூட்டம் நேற்றுமுன்தினம் (20) இரவு அட்டாளைச்சேனை றகுமானியாபாத் பிரதேசத்தில் உள்ள தனது மக்கள் பணிமனையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பல நூற்றுக்கணக்கான தேசிய காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், மறைந்த பெருந்தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் உடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை வளர்த்தெடுப்பதில் பாரிய பங்களிப்புக்களைச் செய்து பயணித்துக் கொண்டிருந்த வேளையில், அக்கட்சியின் தலைவரின் மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட சில முரண்பாடுகள் காரணமாக அக்கட்சியில் இருந்து வெளியேறி மக்கள் நலனை மையப்படுத்திய தேசிய காங்கிரஸ் என்னும் கட்சியினை ஆரம்பிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அதாஉல்லாவுடன் இணைந்து பல்வேறு அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டு அவருக்கு விசுவாசமாக செயற்பட்டு வந்தேன்.
தேசிய காங்கிரஸ் கட்சி ஆரம்பித்தது முதல் பல ஆண்டுகள் நான் அக்கட்சியின் தலைமைக்கு நூறு சதவீத விசுவாசத்தினை வழங்கிச் செயற்பட்டு வந்தேன். எனது இதயசுத்தியுடனான செயற்பாட்டை மதித்து எமது அட்டாளைச்சேனைப் பிரதேசத்திற்கு அரசியல் அதிகாரமொன்றை வழங்கியது மட்டுமல்லாமல் கிழக்கு மாகாண அமைச்சர் பதவியினை நான் இரண்டு முறை வகிப்பதற்கும் அத்தலைமை உறுதுணையாய் இருந்ததை நான் மறந்து விடவில்லை.
தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கும் எமக்குமிடையிலான அதீத விசுவாசம்தான் இற்றைவரை பல தியாகங்களைப் புரிய வைத்து அக்கட்சியினை வளர்த்தெடுக்கப் பக்கபலமாய் அமைந்தது. ஆனால் இக் கட்சியின் தலைவர் அண்மைக் காலமாக என்மீது சந்தேகப்பார்வை கொள்கின்றார். அவரது இச்சந்தேகப் பார்வையே இக்கட்சியிலிருந்து நான் முற்றுமுழுதாக விலகுவதற்கு பிரதான காரணமாகும்.
இத்தனை காலம்வரை சுயாதீனமாக இயங்கி வந்த அக்கட்சியின் தலைமை புதிதாய் கட்சியோடு இணைந்து கொண்ட சுயநலம் மிக்க கூலிப்படையின் கதைகளுக்கு காது சாய்த்து என்மீது சந்தேகம் கொள்ள முற்படுகின்றது. நான் முப்பது மில்லியன் ரூபா பணத்தினை அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடமிருந்து பெற்றதாகவும், நான் கட்சி மாறவுள்ளதாகவும் தேசிய காங்கிரஸ் தலைவர் மக்கள் மத்தியில் தெரிவித்து வருகின்றார்.
தேசிய காங்கரஸ் கட்சியில் உள்ள சிரேஷ்டமானவர்களை தூக்கி வீசினால் தமக்கு உயரிய அந்தஸ்து கிடைத்து விடும் என்ற நப்பாசையில் பொய்யாகப்புனையப்பட்ட கூலிப்படைகளின் கதைகளை நம்பிக்கொண்டு வஞ்சகமில்லா என்மீது அபாண்டமான பழியினைச் சுமத்தி தேசிய காங்கிரஸ் கட்சித் தலைமை என்மீது சேறு பூச விழைகின்றது. இத்தனை காலமும் இருந்து வந்த நம்பிக்கை தற்போது அத்தலைமைக்கு இல்லாமல் போன பிறகு அக்கட்சியில் தொடர்ந்தும் இருப்பதில் பயனில்லை என்பதாலேயே அக்கட்சியில் இருந்து முழுமையாக நான் இராஜினாமாச் செய்துள்ளேன்.
எனக்கு அரசியல் அதிகாரம் வழங்கி இரண்டு முறை மாகாண அமைச்சர் பதவியினை தேசிய காங்கிரஸ் பெற்றுத் தந்ததுபோல், அக்கட்சியின் தலைவர் அதாஉல்லாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைப்பதற்கும், மத்திய அரசின் அமைச்சுப் பதவி அவருக்கு கிடைப்பதற்கும் நானும் எம்மவர்களும் காத்திரமான பங்களிப்புக்களை அவருக்குச் செய்திருக்கின்றோம்.
முஸ்லிம் கூட்டமைப்பின் தேவை பற்றி எம்மவர்களால் உணரப்பட்டபோது அக்கருத்துக்கு நானும் உடன்பட்டு நமது மக்களின் நன்மையினை மையப்படுத்தி இவ்விடயம் பற்றி தேசிய காங்கிரஸ் தலைவரிடம் இக்கூட்டமைப்பில் நமது கட்சியும் இணைந்து செயற்படுவதன் அவசியத்தினை அவரிடம் கூறுகின்றபோதெல்லாம் அக்கருத்தினை ஏளனம் செய்யக்கூடியவராகவும் மாற்றுக் கட்சிக்காரர்களை மலினம் செய்பவருமாகவும் இருந்ததோடு பணத்திற்காக கூட்டமைப்புப் பற்றி பேசுகின்றேன் என என்மீது அவதூறுகளை மக்கள் மத்தியில் இத்தலைமை பரப்பியது.
கூட்டமைப்பு விடயத்தினை நான் தொடர்ச்சியாக தேசிய காங்கிரஸ் தலைமையிடம் கூறிவரும்போது அதை எடுத்தெறிந்து பேசியவர், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நான்கு முறை மாற்றுக் கட்சிக்காரர்களை தனது கிழக்கு வாசலுக்கு அழைப்பித்து கூட்டமைப்புப் பற்றி பேசியிருக்கின்றார். ஆனால் ஒருமுறையேனும் எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. எனக்குத் தெரியாமலேயே அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெற்றமை மிகுந்த வேதனையினை ஏற்படுத்தியது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது உயிரைக்கூட துச்சமென நினைத்து பல தியாகங்கள் புரிந்து பல செல்வாக்குக் கட்சிகளின் கோட்டைகளுக்குள்ளும் நாம் வெற்றி பெற்று உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சி அமைப்பதற்கு நூறு சதவீத வாய்ப்பு எமக்கிருந்தும் தேசிய காங்கிரஸ் கட்சித் தலைமை அவ்வாய்ப்புக்களை வேண்டுமென்றே விட்டுக்கொடுத்து ஆட்சி அமைப்பிற்கான எமது கனவினை கைநழுவ விட்டது.
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்கப்பட்டால் எனது கைகள் ஓங்கி விடும் என்ற கண்ணோக்கிலேயே அத்தலைமைமை மாற்றுக் கட்சிகளுக்கு வேண்டுமென்றே ஆட்சியினை அமைக்கும் சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்தது. அந்தவகையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அட்டாளைச்சேனை, இறக்காமம், பொத்துவில் மற்றும் நிந்தவூர் ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பினை இத்தலைமை வேண்டுமென்றே விட்டுக் கொடுத்தது.
எமது தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து முக்கியமானவர்கள் எல்லோரும் விலகிச் செல்வதாலும், இக்கட்சியின் செல்வாக்கு நலிவடைந்து செல்வதாலும் நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் அல்லது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்றவற்றுடன் இணைந்து செயற்பட்டால் நமது கட்சியின் செல்வாக்கினை அதிகரித்துக் கொள்ள முடியும் என்ற நிலைப்பாட்டினை தே.கா. தலைமைக்கு எடுத்துக் கூறும்போதெல்லாம் ஏளனம் செய்வதில் நின்று அத்தலைமை விலக மறுக்கவில்லை.
தேசிய காங்கிரஸ் கட்சி வீழ்ச்சிப் பாதையில் செல்ல ஆரம்பிக்கும் போதெல்லாம் பல்வேறு தேசிய கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும் அக்கட்சியின்பால் என்னை ஈர்த்தெடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால் பணத்திற்காகவும். பதவிக்காகவும் சோரம்போகாமல் கொள்கையின்பால் உறுதியாய் இருந்ததற்கு இத்தலைமை எனக்கு பாரிய வெகுமானத்தினைத் தந்திருக்கின்றது.
தேசிய காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவினால் அண்மைக்காலமாக எனக்கெதிரான செய்திகளை இணைத்தளங்களில் பரப்பியபோது அவற்றுக்கு எவ்வித எதிர்ப்பினையும் தெரிவிக்காமல் அவரது ஆசியுடனேயே அச்செயற்பாட்டுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை நான் பின்னாட்களில் அறியக்கூடியதாக இருந்தது.
தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கிருக்கும் சில அதிகாரங்களைக் கொண்டு என் ஆதரவாளர்களையும் குறிப்பாக அட்டாளைச்சேனை பிரதேசத்தவர்களையும் அவர் பழிவாங்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.
இக்கட்சியில் இருந்து நான் விலகுவற்கு இவ்வாறான பல்வேறு விடயங்களை அடுக்கிக் கொண்டு போக முடியும். நான் கடந்த காலத்தில் வகித்த பதவிகள் மூலம் முழுக்க முழுக்க மக்கள் நலனை மாத்திரமே கருத்திற் கொண்டு சேவை செய்ததை நாட்டு மக்கள் அனைவரும் நன்றிவர்.
மக்களுக்காக செயற்பட்ட என்னை மக்கள் மத்தியில் அவதூறாகப் பேசுவதற்கும் பொய்யான வீண் பழியினை சுமத்துவற்கும் நாம் ஒருபோதும் இடமளிக்க முடியாது. நூறு சதவீத விசுவாசத்துடன் உழைத்த எனக்கு தேசிய காங்கிரஸ் கட்சித் தலைமை தந்த பரிசினை எண்ணிப்பார்க்கின்றபோது மிகுந்த மன வேதனையளிக்கின்றது.
சோடிக்கப்பட்ட புனை கதைகளுக்கு உயிர் கொடுத்த தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமையின் பின்னால் இனியும் பயணிக்க முடியாது என்பதற்காகவே கடந்த செப்படம்பர் மாதம் நான் வகித்த பதவிகளிலிருந்து இராஜினாமாச் செய்தேன். தற்போது அக்கட்சியின் அனைத்து பொறுப்பிலிருந்தும் அதன் அங்கத்துவத்திலிருந்தும் அக்கட்சியின் அனைத்து செயற்பாடுகளிலிருந்தும் நான் முற்று முழுதாக விலகிக் கொள்கின்றேன் என்றார்.
-Vidivelli