- எம்.ஐ. அன்வர் (ஸலபி)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் நெறிப்படுத்தலின் கீழ் “போதையிலிருந்து விடுதலையான தேசம்” நிகழ்ச்சித்திட்டம் பல்வேறு கட்டங்களாக கடந்த ஜனவரி மாதம் நாடுதழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டது. இதற்கமைய 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணி நிகழ்ச்சி திட்டங்களின் கீழ் மாவட்ட, பிரதேச செயலாளர் மட்டங்கள் மற்றும் கிராம சேவகர் பிரிவுகள் மூலம் குறித்த போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். தவிர பேண்தகு பாடசாலை நிகழ்ச்சி திட்டங்களின் மூலமும் அறநெறிப் பாடசாலைகள் மூலமும் நாடு தழுவியரீதியில் போதை ஒழிப்பு நிகழ்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த ஜனவரி மாதம் இறுதி வாரம் முழுவதும் நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் ஐந்து நாட்களாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு வேலைத்திட்டங்களின் மூலம் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் பாவனைக்கெதிரான பாரிய எதிர்ப்பலையொன்று உருவாகியிருப்பதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த தெளிவுகளும் விழிப்புணர்வுகளும் சென்றடைந்துள்ளமையை காணமுடிகிறது.
இலங்கையில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் அதிகளவிலான போதைப் பொருள்கள் பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து கொண்டுவரப்படுவதாகவும் ஆபத்தான போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரசபையின் (National Dangerous Drugs Control Board) அறிக்கை தெரிவிக்கின்றது.
அதிகூடிய போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட ஆண்டாக கடந்த 2018 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது. கடந்த வருடம் முழுவதும் ஏறத்தாழ 738 கிலோ 560 கிராம் நிறையுள்ள போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் 2013 ஆம் ஆண்டே அதிகூடிய போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட ஆண்டாக பேசப்பட்டுவந்தது. அவ்வாண்டில் 350 கிலோ 554 கிராம் அளவே அதிகூடிய நிறையாக பதிவாகியிருந்தது.
கடந்தாண்டில் போதைப்பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட 40870 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் 60% ஆனோர் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள், 39% ஆனோர் 20 வயதை நெருங்கியவர்களாவர். கடந்தாண்டு அதிகூடிய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட ஆண்டாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. 2018 டிசம்பர் 31 ஆம் திகதி போதைப்பொருள் தடுப்பு பிரிவின் திடீர் சுற்றிவளைப்பின் போதே கொழும்பு, தெஹிவளை இரு மாடி வீடொன்றிலிருந்து பதுக்கிவைக்கப்பட்ட நிலையில் சுமார் 40 கோடி ரூபா பெறுமதியான 32 கிலோ எடையுள்ள போதைத்தூள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் பிரகாரம் இலங்கையில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போதைப் பொருளுக்கு நிரந்தரமாக அடிமையாகியுள்ளதாக தேசிய போதைத் தடுப்பு சபை எச்சரித்துள்ளது. குறிப்பாக, இளைஞர்களிடையே இப்பாவைனை சடுதியாக அதிகரித்திருப்பதை அது சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஒருசில வருடங்களில் சிறுவர்களிடத்தில் குறைந்திருந்த போதைப்பொருள் பாவனை மீண்டும் நாட்டில் தலைதூக்கி வருவதாகவும் புகைத்தல் மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.
போதைவஸ்துக்கு அடிமையானவர்கள் 50% திருமணமாகாத இளைஞர்களாவர். இவர்களுள் பலர் பல்கலைக்கழகம், உயர்தர, சாதாரணதர மாணவர்களாவர். 45% திருமணமானவர்கள். இதில் 50% முதல் 69% ஆனவர்கள் பாடசாலை மாணவர்கள் என சுகாதார அமைச்சின் அறிக்கை குறிப்பிடுகிறது. உலக அளவில் சுமார் 140 மில்லியன் மதுப்பிரியர்கள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது. மதுப்பாவனையை பொறுத்தவரையில் உலக அரங்கில் இலங்கைக்கு 4 ஆவது இடம் கிடைத்திருக்கிறது. இலங்கையில் தனிமனித மது பாவனை 4 லீற்றராக மதிப்பிடப்பட்டுள்ளது.
சமூக வறுமையுடன் கூடிய அவல வாழ்க்கையை மறக்க குடி ஒரு தீர்வாகக் கையாளப்படுகின்றது. குடி சமூகப் பிரச்சினைக்கு வடிகாலாகின்றது. இதன் விளைவாக நகர்புற குடிசைப் பகுதிகளில் 43 சதவீதமானவர்கள் மதுவுக்கு அடிமையாகிவிட்டனர். பெருந்தோட்டப் பகுதிகளில் இது 55 சதவீதமாக உள்ளது. பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களில் 18 சதவீதம் பேர் மதுவுக்கு அடிமையாக உள்ளனர். இது தவிர இதற்காக அவர்கள் சராசரியாக செலவழிக்கும் பணம் நாளொன்றுக்கு 950 – -1000 ரூபா என்று மதிப்படப்பட்டுள்ளது.
இலங்கையின் மொத்தக் குற்றச் செயல்களில் 38 சதவீதமானவை மது பாவனையால் ஏற்படுகின்றது. அதாவது, போதையினால் ஏற்படுகின்றது. கடந்தாண்டில் நடந்த மொத்த வாகன விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 2800 ஆகும். இதில் 90 சதவீதமானவை மதுவினால் நடந்துள்ளது. ஒட்டு மொத்தத்தில் கொலை, பாலியல் வன்முறை, விபசாரம் போன்ற சமூகவிரோத குற்றச்செயல்கள் போதைப்பொருள் பாவனையால் ஏற்படுகிறது.
போதைப்பொருள் பாவனையில் இலங்கையில் முதலாம் இடமாக கொழும்பு மாவட்டம் காணப்படுகின்றது. இது 71% ஆக காணப்படுகின்றது. இரண்டாவதாக கம்பஹா மாவட்டம் உள்ளது. இது 22% ஆக காணப்படுகின்றது. மேல் மாகாணமே முதலிடத்தில் காணப்படுகின்றது. 600,000 இற்கு மேற்பட்டவர்கள் கஞ்சா பாவிப்பவர்களாக உள்ளனர். தவிர நாட்டில் கடந்த ஆண்டுகளில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது.
தென்னிலங்கையில் பாதாள உலகத்தின் செயற்பாடுகள் மற்றும் கொழும்பு மற்றும் புறநகர்ப் பிரதேசமெங்கும் போதைப்பொருள் பாவனை காரணமாக சமூகம் பேரழிவைச் சந்திக்கும் நிலையே காணப்படுகிறது. ஹெரோயின், கொக்கெய்ன் போன்ற சர்வதேச போதைவஸ்துகள் தாராளமாக புழக்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. போதைப்பொருளுக்கு அடிமையாகும் இளைஞர்கள் தமக்கு அவற்றை வாங்குவதற்கு பணம் கிட்டாத போது திருட்டுச் சம்பவங்களிலும், கொள்ளைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். சில சந்தர்ப்பங்களில் அதற்காக கொலை வெறியர்களாக மாறும் நிலைகூட ஏற்படுகின்றது.
தென்னிலங்கையைப் போன்று வட- கிழக்கிலும் போதைப் பொருள் பாவனை கூடிக் கொண்டே போகின்றது. அதுவும் இளம் பருவத்தினரே அதிகமாக போதைக்கு அடிமையாகி வருகின்றனர். கிழக்கில் மறைமுகமாக இடம்பெற்று வந்த போதைப்பொருள் பாவனை இன்று வெளிப்படையாகவே இடம்பெற்றுவருவதாக பரவலாக குற்றம்சாட்டப்பட்டு வருகின்றது. முக்கியமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் மாவா, கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. மற்றொரு அதிர்ச்சி தரும் தகவல் சில பாடசாலை மாணவிகளும் ‘மாவா’ போதை பாவனையில் சிக்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
தலைநகரிலும் கிராமப் புறங்களிலும் முக்கியமாக பிரசித்தி பெற்ற பாடசாலைகளுக்கு அண்மித்த இடங்களில் மறைமுகமான விதத்தில் மாணவர்களுக்கு போதைவஸ்து விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் நகரம், கிராமம், வீதிக்கு வீதியென சகல இடங்களிலும் போல் இன்று போதைப் பொருட்கள் கிடைக்கக் கூடிய நிலையையே காணமுடிகிறது.
பொதுவாக இலங்கையில் ஹெரோயின், கஞ்சா, அபின், மர்ஜுவானா ஆகிய நான்கு போதைதரும் பொருட்களே பாவனையிலுள்ளன. இலங்கையில் 12 சதவீதமான போதைப் பொருள் பாவனையாளர்கள் ஊசி மூலமே போதையேற்றுவதாக அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. இவர்கள் குடும்பப் பிரச்சினை, கல்வியில் தோல்வியடைதல், வேலையின்மை, காதல் தோல்வி மற்றும் கூடாத சகவாசம் போன்ற பல காரணங்களுக்காக இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில் திறந்த பொருளாதாரக் கொள்கை, உல்லாசப் பயணிகளின் வருகை போன்ற காரணிகளால் நவீன போதைப் பொருட்கள் நாட்டினுள் பிரவேசிக்க ஆரம்பித்துள்ளன. இந்த போதைப்பொருட்கள் கடந்தாண்டுகளில் இலங்கையில் அதிகளவில் பரவ ஆரம்பித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் ஹெரோயின் 1 முதல் 3 மில்லியன் ரூபா பெறுமதியானது. இதில் 2 கிராமை சுமார் 500 பேர் பாவித்து போதை ஏற்றிக்கொள்ள முடியுமாம். வெளிநாடுகளில் வருடாந்தம் இலட்சக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டு தண்டனைக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.
உலக போதைப்பொருள் பாவனையாளர்கள் தொடர்பான அறிக்கையின் புள்ளிவிபரப்படி உலகில் 2 கோடி பேர் ஹெரோயின் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் உள்ளனராம். புதிதாக அப்பாவனைக்கு அடிமைப்படாமல் இளம் சமுதாயத்தை பாதுகாப்பது என்ற நோக்கிலே அரசாங்கங்கள் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. என்றபோதும் இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்டங்களைப் பொறுத்தவரை இப்பாவனையை தடுத்து நிறுத்தப் போதுமானதாக இல்லையெனக் குற்றம் சாட்டப்படுகிறது. எனவே இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமாகிறது.
போதைப்பொருள் பாவனை சிறுபராயத்திலேயே ஏற்பட்டு விடுவதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும். குறிப்பாக அவர்கள் தனிமையை விரும்பினால், அடிக்கடி பணம் கேட்டால், படிப்பில் நாட்டம் குறைந்தால், நடத்தைகளில் மாற்றம் தெரிந்தால், வழக்கத்திற்கு மாறாக நடவடிக்கை தென்படுமாயின் அவர்களை சற்றுக் கூர்ந்து அவதானிப்பது சிறந்தது.
முக்கியமாக இன்றைய இளம் சமுதாயத்தினர் இணையதளத்தை தங்கள் உலகமாகக் கருதி வாழ்வதால் அடிக்கடி அவர்கள் பார்க்கும் இணைய தளங்கள் குறித்து பெற்றோர் விழிப்புடன் இருக்கவேண்டும். இவற்றைத்தவிர சிறுவயதிலிருந்தே கற்றலில் அதிக நாட்டத்தை ஏற்படுத்தல், பத்திரிகை வாசித்தல், விளையாடுதல், இறைவழிபாடு செய்தல் போன்ற பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுத்தல் சிறந்தது. இதன் மூலம் எங்கள் குழந்தைகளை நாமே பாதுகாத்துக் கொள்ளலாம்.
மாறாக, அவர்கள் யாராயினும் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டார்கள் எனின் மருத்துவர்களினதும் உள வளத்துணையாளர்களினதும் ஆலோசனைப்படி செயலாற்றுவது அவர்களை அதிலிருந்து புனர்வாழ்வு அளிப்பதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்கும். இது அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிச் செல்லாமல் இருக்கவும் வழியமைக்கும்.
மேற்கத்திய நாடுகளில் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை தற்போது சதவிகிதத்தின் அடிப்படையில் குறையத் தொடங்கியுள்ள நிலையில் ஆசிய நாடுகளில் போதைப்பொருளுக்கு அடிமையானோரின் வீதம் அதிகமாகிக் கொண்டே செல்கின்றமை துரதிஷ்டமானதாகும். இதற்குக் காரணம் மேலைத்தேய நாடுகளில் ஏற்பட்டுள்ளதைப் போன்ற விழிப்புணர்வுகள் நம் நாடுகளில் இல்லாமல் போனமையாகும்.
புகைத்தல் பாவனைக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பது போன்று போதைப் பொருள் பாவனையையும் தடுக்கச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். இருக்கும் சட்டத்தை கடுமையாக்குவதன் அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பாதிக்கவல்ல இந்த போதைப் பொருளை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் அனைத்தும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக போதைப் பொருள் கடத்தலுக்காக சில நாடுகள் மரண தண்டனையையும் அமுல்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையில் மது பாவனையை குறைக்க முற்படும் திணைக்களங்களாக இலங்கை பொலிஸ் திணைக்களம், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு, மதுவரித் திணைக்களம், சிறைச்சாலைகள், சுங்கவரித் திணைக்களங்கள், அரச திணைக்களங்கள் காணப்படுகின்றன. இதேபோல் இலங்கையில் போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்காக பிரத்தியேகமாக போதைத் தடுப்பு பணியகம் செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாளைய தலைவர்களாக, துறைசார் நிபுணர்களாக, சமூகத்தையும் தேசத்தையும் நல்வழிப்படுத்தும் முன்னோடிகளாக மாறவுள்ள இன்றைய மாணவர்கள் போதைவஸ்து மாபியாக்களின் கோரப்பிடியில் சிக்குண்டு தமது வளமான எதிர்காலத்தை நாசமாக்கிகொண்டிருப்பதை அவதானிக்கமுடிகிறது. ஆறுமணி நேர அற்ப சந்தோஷத்திற்காக தங்கள் வாழ்க்கையை பணயம் வைக்கும் இளைய சமுதாயத்தினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை மீட்பது அனைவரதும் கடமையாகும்.
பொலிஸார், பொது மக்கள் தொடர்பு செயற்பாட்டுத் திட்டத்தின் மூலம் நாடு தழுவிய நடவடிக்கைகளை மேற்கொண்டு சமுதாயச் சீரழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். தவறினால் எமது தேசத்தினதும், சமுதாயத்தினதும் எதிர்காலம் பேரழிவுக்குள் தள்ளப்பட்டதாகவே அமைந்து விடும்.
-Vidivelli