இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பில் அரசியல் இலாபம் கருதி செயற்படவேண்டாம். இது எமது எதிர்கால சந்ததியினரின் போஷாக்கு தொடர்பான பிரச்சினையாகும்.நாட்டின் அனைத்து விடயங்களையும் அரசியலாக்குவதாலே எமது நாடு முன்னேற முடியாமலிருக்கின்றது என சுகாதாரம், போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பில் நாட்டில் எழுந்திருக்கும் சந்தேகங்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு நேற்று அரசாங்க ஊடக திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இறக்குமதி செய்யும் பால்மாவை நிறுத்தவேண்டுமென சிலர் தெரிவிக்கின்றனர். இறக்குமதி செய்வதை நிறுத்தலாம். ஆனால் அதற்கு மாற்றுவழி என்னவென்று தெரிவிக்கவேண்டும். சிறுவர்களுக்கு போஷாக்காகவே பால்மா கொடுக்கப்படுகின்றது. நிறுத்தினால் போஷாக்குக்கு என்ன செய்வது? இலங்கையில் அனைத்து விடயங்களையும் அரசியலாக்குகின்றனர். இலங்கையின் முதலாவது அபிவிருத்தி திட்டத்துக்கும் அரசியல் காரணமாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதேபோன்று அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் மேற்கொள்ளப்படும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டங்கள் இடம்பெற்றன. எனக்கும் குண்டெறிந்தார்கள். ஆனால் எனக்கு குண்டெறிந்தவர் பின்னர் மாகாணசபையில் உறுப்பினராக அமர்ந்துகொண்டார். இவ்வாறான மோசமான அரசியலே நாட்டில் இருக்கின்றது. எந்த எதிர்ப்பு வந்தபோதும் நாங்கள் அன்று உண்மை நிலைமையை தெரிவித்தோம். தற்போதும் இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பில் உண்மையான நிலைப்பாட்டையே தெரிவிக்கின்றோம்.
மேலும் எமக்கு தேர்தலில் வாக்கு கிடைத்தாலும் இல்லாவிட்டாலும் யாருக்கும் அடிபணிந்து நாங்கள் செயற்படமாட்டோம். அதனால் இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பில் யாரும் அரசியல் இலாபம் கருதி செயற்படவேண்டாம். இது எமது எதிர்கால சந்ததியினரின் போஷாக்கு தொடர்பான பிரச்சினையாகும்.
மேலும் பால்மா இறக்குமதி செய்வதா இல்லையா என்பது அரசியல் ரீதியில் தீர்மானம் எடுக்கலாம். ஆனால் இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் உள்ளடங்கும் விடயங்களை ஆராய்ந்து பரீசிலித்து எடுக்கப்படும் நடவடிக்கையானது விஞ்ஞான ரீதியிலான தீர்மானமாகும். எவருடைய தேவைக்காகவும் எடுக்கப்படும் ஆய்வல்ல. அத்துடன் இறக்குமதி செய்யப்படும் பால்மாவை நிறுத்தவேண்டும் என்றால், அதற்கு மாற்று நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்ளவேண்டும். சிறுவர்களின் போஷாக்குக்கு பால்மா கொடுக்கப்படுகின்றது. எமது நாட்டில் திரவப்பால் உற்பத்திசெய்யப்படுவது 10வீதமாகும். ஏனைய 90 வீதத்தை எப்படி நிவர்த்திசெய்வது?
அதனால் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் தரம் தொடர்பில் நாங்கள் பொறுப்பேற்கின்றோம். எமது ஆய்வுகளில் எந்தப் பால்மா தொடர்பாகவும் பிரச்சினை ஏற்படவில்லை. அவ்வாறு பிரச்சினை இருந்தால் அதனை மறைக்க எங்களுக்கு எந்த தேவையும் இல்லை. அத்துடன் எமது நாட்டில் அனைத்து விடயங்களையும் அரசியலாக்க முற்படுவதால்தான் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசியல் இலாபத்துக்காக விமர்சிப்பவர்கள் எமது எதிர்கால சந்ததியினர் தொடர்பாக சிந்தித்து செயற்படவேண்டும் என்றார்.
-Vidivelli