‘அரசியல்வாதிகள் மாத்திரமல்ல சமயத்தலைவர்களும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கொகெய்ன் பாவனை செய்யும் முஸ்லிம் சமயத்தலைவர்களான லெப்பேமாரும் இருக்கின்றனர். அவர்கள் பள்ளிவாசல்களிலிருந்தும் துரத்தியடிக்கப்பட வேண்டும். கொகெய்ன் மற்றும் போதைப்பொருள் பாவனை செய்யும் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 24 பேரின் விபரங்களை சபாநாயகரிடமும், சி.ஐ.டியினரிடமும் கையளித்திருக்கிறேன்’ என பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
மாதிவெலயிலுள்ள இராஜாங்க அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திபொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். நேற்று முன்தினம் நடைபெற்ற இச்சந்திப்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, ‘பௌத்த மதகுரு ஒருவர் களுபோவில வைத்தியசாலை கழிவறையில் கொகெய்ன் பாவனையில் ஈடுபட்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர்கள், இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை, உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களும் போதைப்பொருள் பாவனை செய்பவர்கள் மத்தியில் இருக்கின்றார்கள். அத்தோடு உயர்பதவி வகிப்பவர்களும் இதில் அடங்கியுள்ளார்கள். விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படுமென்பதால் அவ்வாறானவர்களின் பெயர்களை என்னால் பகிரங்கப்படுத்த முடியாது.
கொகெய்ன் உட்பட 11 போதைப்பொருட்கள் பாவனை செய்யப்பட்டுள்ளதா என கண்டறியும் இரத்தப் பரிசோதனையை மேற்கொள்வதற்கு 4200 ரூபா தேவைப்படும். நான் விரைவில் எனது இரத்தப் பரிசோதனை அறிக்கையை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பேன். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது இரத்தப் பரிசோதனை அறிக்கையை சபாநாயகரிடம் கையளிக்க வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள்.
கொகெய்ன் பாவனை இந்தளவுக்கு அதிகரிப்பதற்கு அரசியல்வாதிகளின் தொடர்பே காரணமாக இருக்க வேண்டும்.
போதைப்பொருளை ஒழிப்பதற்கு ஜனாதிபதி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழுமையான பங்களிப்பினை வழங்குவேன்.
தோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பிரபல பாராளுமன்ற உ-றுப்பினர் கொகெய்ன் பாவனையாளராவார். அவரை ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரஷ்ய பெண்களுடன் காண முடியும். மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்களே போதைப் பொருளிலிருந்தும் தவிர்ந்திருக்கிறார்கள்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியிலுள்ள சிலர் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டு கொழும்பில் மாடி வீடுகளுக்குச் சொந்தக்காரர் களாகவும் இருக்கிறார்கள் என்றார்.
-Vidivelli