இந்திய கட்டுப்பாட்டு காஷ்மீரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு மோதலில் மூன்று கிளர்ச்சிப் படையினர், நான்கு இந்திய இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவர் உட்பட குறைந்தது 9 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானுடன் மோதல்கள் இடம்பெறுமென்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ள 42 இந்தியப் பாதுகாப்புப் படையினர் உயிரிழக்கக் காரணமாக அமைந்த தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்று சில நாட்களின் பின்னர் கடந்த திங்கட்கிழமை புல்வாமா மாவட்டத்திலுள்ள பிங்க்லான் கிராமத்தில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பிரதிப் பொலிஸ்மா அதிபரான அமித் குமாரின் காலில் துப்பாக்கி குண்டு துளைத்ததாகவும் இராணுவ பிரிகேடியர் ஒருவரும் இதன்போது காயமடைந்ததாகவும் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மூன்று வீடுகளும் ஒரு மாட்டுத் தொழுவமும் இராணுவத்தினரால் வெடித்துச் சிதறச் செய்யப்பட்டுள்ளன. அந்த வீடுகளுள் ஒன்றின் உரிமையாளரும் கிராமத்தில் கோழிக்கடையொன்றை நடத்தி வருபவருமான 30 வயதான முஷ்தாக் அஹமட் இதன்போது கொல்லப்பட்டதாக பின்கிலான் கிராமவாசிகள் தெரிவித்தனர்.
அவரது நான்கு மற்றும் மூன்று வயதான இரு பிள்ளைகளும் அவருக்கருகில் இருந்தனர்.
அவர் இராணுவத்தினால் வீட்டினுள் இருந்து வெளியே இழுத்தெடுக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனார். மற்றுமொரு சிறுவன் மீது துப்பாக்கி ரவை பாய்ந்ததில் அவருக்கு காலில் காயமேற்பட்டதென பிரதேசவாசியான குலாம் நபி தெரிவித்தார்.
கிளர்ச்சிக்காரர்களுள் இருவர் வெளிநாட்டவர்கள் எனவும் ஒருவர் உள்நாட்டவர் எனவும் பொலிஸார் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளர்ச்சிக்காரர்கள் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஜாயிஷ் – இ – மொஹம்மட் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி வியாழக்கிழமையன்று மத்திய ரிசேவ் பொலிஸ் படையினரை ஏற்றிச் சென்ற பஸ் வண்டியொன்றின் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரினை காஷ்மீர் கிளர்ச்சிக்காரர்கள் கொண்டு சென்று மோதினர். இதனையடுத்து பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஜாயிஷ் -இ -மொஹம்மட் அமைப்பினால் இத்தாக்குதலுக்கு உரிமை கோரப்பட்டது.
-Vidivelli