பீடி இலை, மிளகு இறக்­கு­மதி, ஏற்­று­ம­தி­யூ­டாக பாரிய வரி மோசடி: கைதான பிர­தான சந்­தேக நப­ருக்கு 25ஆம் திகதி வரை விளக்­க­ம­றியல்

0 629

சுமார் 5 கோடியே 70 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான 12 தொன் பீடி இலையை நாட்­டுக்குக் கொண்­டு­வந்து நாலரை கோடி ரூபா­வுக்கும் அதி­க­மான  வரி­ மோ­சடி செய்த குற்­றச்­சாட்டின் பேரில் கைது  செய்­யப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்ட நபரை, பிணையை இரத்துச் செய்து எதிர்­வரும் 25 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதி­மன்றம் நேற்று முன்­தினம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது. அத்­துடன் வியட்நாம் மற்றும் பிரே­சிலில் இருந்து 1445 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான கறுப்பு மிள­கினை இறக்­கு­மதி செய்து, இலங்கை -– இந்­திய வர்த்­தக உடன்­ப­டிக்கை பிர­காரம் உள்­நாட்டு விவ­சா­யி­க­ளுக்கு கொடுக்­க­ப்படும் வரி விலக்கை மோச­டி­யாகப் பயன்­ப­டுத்தி இந்­தி­யா­வுக்கு அவற்றை ஏற்­று­மதி செய்த விவ­கா­ரத்­திலும், குறித்த நபரின் பிணையை இரத்­து­செய்த நீதி­மன்றம் அதிலும் அவரை எதிர்­வரும் 25 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்­டது. கொழும்பு 12, டாம் வீதியைச் சேர்ந்த  நூர்தீன் பைசல் அஹமட் எனும் சந்­தேக நப­ரையே இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்க  கொழும்பு மேல­திக நீதிவான்  லோச்­சனா அபே­விக்­ரம  உத்­த­ர­விட்டார்.

கடந்த 2018 டிசம்பர் 3 ஆம் திகதி பங்­க­ளா­தே­ஷி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்­ட­தாகக் கூறப்­படும் பீடி இலைகள் அடங்­கிய 40 அடி கொள்­கலன் தொடர்பில் சந்­தே­க­நபர் கொழும்பு – கோட்டை நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு அருகில் வைத்து  கடந்த 15 ஆம் திகதி கைது செய்­யப்­பட்டார். இந்த விவ­கா­ரத்தில் ஏற்­க­னவே 5 சந்­தேக நபர்கள் சுங்க மத்­திய விசா­ரணைப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர். ஜபார்தீன் மொஹம்மட் அசார்தீன்,  ரி.எம். றிஸ்வான் (வத்­தளை மாந­கர சபை உறுப்­பினர், முன்னாள் உப தலைவர்), நிஸங்க ஆரச்­சி­லாகே அனுஷ்க நிஸங்க,  சுரங்க துஷித்த குமார மற்றும் ரி.எம்.எம்.மஹ்ரூப் ஆகி­யோரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர். குறித்த பீடி இலைகள் அடங்­கிய கொள்­கலன் சுங்­கத்­தி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்டு வத்­தளை பகு­திக்கு எடுத்துச் செல்­லப்­பட்ட நிலையில் அதனை துரத்திச் சென்று சுங்கப் பிரி­வினர்  கைப்­பற்­றினர்.

இந்­நி­லையில் அவர்­க­ளிடம் முன்­னெ­டுத்த விசா­ர­ணைகள், அவர்­க­ளி­ட­மி­ருந்து மீட்­கப்­பட்ட இலத்­தி­ர­னியல் சாத­னங்­க­ளி­லி­ருந்து 6 ஆவது சந்­தேக நப­ரான பிர­தான சந்­தேக நபர்  நூர்தீன் அஹமட் பைசல் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.  இந்­நி­லையில் அவரை பல தடவை விசா­ர­ணை­க­ளுக்­காக சுங்க மத்­திய விசா­ரணைப் பிரி­வினர் அழைத்தும் அவர் வருகை தரா­ததால், அவர் தொடர்பில் மத்­திய விசா­ரணைப் பிரி­வினர் இர­க­சி­ய­மாக தகவல் திரட்­டி­யுள்­ளனர். அதன்­ப­டியே கடந்த 15 ஆம் திகதி, குறித்த சந்­தேக நபர் கோட்டை பகு­தி­யி­லுள்ள பள்­ளி­வாசல் ஒன்றில் தொழு­கையை நிறை­வேற்­றிய பின்னர் வெளியே வந்து தனது காரில் ஏற முற்­பட்ட போது சுங்க மத்­திய விசா­ரணைப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டார்.  இதன்­போது காரி­லி­ருந்து சுங்கத் திணைக்­க­ளத்­துடன் தொடர்­பு­பட்ட பல முக்­கிய இர­க­சிய ஆவ­ணங்­களும் மீட்­கப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லையில் கைது செய்­யப்­பட்ட சந்­தே­க­நபர் நூர்தீன் அஹமட் பைசல் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் கடந்த 16 ஆம் திகதி பிணையில் விடு­விக்­கப்­பட்டார். இந்­நி­லையில் நேற்­றுமுன் தினம்  இது­கு­றித்து சுங்க அதி­கா­ரிகள் மன்­றுக்கு வாதங்­களை முன்­வைத்­தனர். சுங்க  சட்­டத்தின் 127(அ) அத்­தி­யாயம் பிர­காரம் ஒரு மில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட வரி மோசடி தொடர்பில் பிணை வழங்கும்  அதி­காரம் நீதிவான் நீதி­மன்­றுக்கு இல்­லை­யென அவர்கள் சுட்­டிக்­காட்­டினர். அத்­துடன் சந்­தேக நபர் வெளியே இருப்­பது விசா­ர­ணை­க­ளுக்குப் பாதிப்­பெ­னவும் சுங்க மத்­திய விசா­ரணைப் பிரி­வினர் நீதி­வா­னுக்கு  கூறினர்.

எனினும் இதன்­போது சந்­தேக நபர் சார்பில் ஆஜ­ரான  ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனில் சில்வா,  பிணை குறித்து அப்­போ­தி­ருந்த தகவல்­களை மைய­ப்ப­டுத்­தியே நீதிவான் உத்­த­ரவு கொடுத்­துள்­ள­தா­கவும் அதனை மாற்ற எந்த அதி­கா­ரமும் இல்லை எனவும் வாதிட்டார். எனினும் நீதிவான் லோச்­சனா அபே­விக்­ரம, 16 ஆம் திகதி பதில் நீதி­வானின் கட­மை­யின்­போது சிறு தவ­றுதல் கார­ண­மாக பிணை வழங்­கப்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்டி பிணையை ரத்­துச் ­செய்து சந்­தேக நபரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்டார்.

சந்­தேக நபர் பங்­க­ளா­தே­ஷி­லி­ருந்து ஆடை­களை இறக்­கு­மதி செய்து அவற்றை இத்­தா­லிக்கு அனுப்பும் தோர­ணையில் பீடி இலை­களை நாட்­டுக்குள் கொண்­டு­வந்து வரி மோச­டியில் ஈடு­பட்­டுள்ளார். இதன்­பின்னர் சந்­தேக நபர் பீடி இலை­க­ளுடன் கொள்­க­லனை சுங்­கத்­தி­லி­ருந்து வெளியே கொண்­டு­வர முயற்­சித்­த­போது கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

இது தொடர்பில் இடம்­பெற்ற நீண்ட விசா­ர­ணை­களில் சந்­தேக நப­ருக்கு உத­விய இரு சுங்க அதி­கா­ரிகள் கட்­டாய விடு­மு­றையில் அனுப்­பப்­பட்­டுள்­ள­தாக சுங்கப் பிரி­வினர் நேற்றுமுன்தினம் நீதி­மன்­றுக்கு தெரி­வித்­தனர்.

இத­னி­டையே இதே சந்­தேக நபர் வியட்நாம் மற்றும் பிரே­சிலில் இருந்து கறுப்பு மிளகை இறக்­கு­மதி செய்து அதனை இலங்கை மிள­கெனக் காட்டி, வரி­வி­லக்கு பெற்று இந்­தி­யா­வுக்கு ஏற்றுமதி செய்வதன் ஊடாகவும் வரிமோசடியில் ஈடுபட்டுள்ளதாக சுங்கப் பிரிவினரின் மற்றொரு வழக்கும் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. 1445 மில்லியன் ரூபா பெறுமதியான மிளகு இவ்வாறு மோசடியாக வரி விலக்கின் அடிப்படையில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவினர் கூறுகின்றனர்.  அது தொடர்பிலும் சந்தேக நபர் பிணையிலிருந்த நிலையில் அதுவும் இரத்துச் செய்யப்பட்டு  எதிர்வரும் 25 ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் லோச்சனா அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.