இன்றைய சமூகத்தைப் பொறுத்தவரையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. வெளிநாட்டுக்குச் சென்றால் அதிகமாகப் பொருளீட்டலாம், வீடு கட்டலாம் என்ற சராசரி மனித ஆசையுடனேயே எம்மவர்கள் வெளிநாட்டை நோக்கி படையெடுக்கிறார்கள். வெளிநாட்டுக்குச் செல்வதும் பொருளீட்டுவதும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல. இருந்தபோதிலும் திருமணமானவர்கள் வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்பு கருதி செல்லும்போது அவர்களுடைய பிள்ளைகளின் பாதுகாப்பு எந்தளவு உறுதிப்படுத்தப்படுகிறது என்பது தொடர்பாக விழிப்படைய வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
கடன் சுமை, குடும்ப உறவில் ஏற்படும் சிக்கல்கள் உட்பட பல்வேறு பொருளாதார பிரச்சினைகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுவதற்கு காரணங்களாக அமைகின்றன. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிக்கைகளின்படி வருடாந்தம் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு கருதி வெளிநாட்டுக்குச் செல்கின்றார்கள். இந்த எண்ணிக்கை வருடாந்தம் உயர்ந்த வண்ணமேயுள்ளது.
இவர்களுள் 56,057 இற்கும் மேற்பட்டோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்றவர்களாவர். வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்றவர்கள் தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 2017 இல் வெளியிட்ட அறிக்கைகளின்படி இலங்கையர்கள் தொடர்பாக 4617 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டிருந்தன. அவற்றுள் 364 பேர் துன்புறுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகவும் 397 பேர் இலங்கையில் உள்ள குடும்பத்தினரை தொடர்பு கொள்வதில் இன்னல்களை சந்தித்ததாகவும் 64 பேர் காணாமலாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றன. 1794 பேர் சட்டத்துக்கு முரணான குற்றச்சாட்டுகளில் சந்தேக நபர்களாக சிக்கியுள்ளதுடன் 291 மரணச்சம்பவங்களும் பதிவாகியுள்ளன. மேலும், 89 பேர் தனிமைப்படுத்தப்பட்டதுடன் 647 பேர் ஊதியம் வழங்கப்படாமல் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
வெளிநாடு செல்வதற்கு எத்தனை நியாயமான காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும் பிள்ளைகளை சிறந்த முறையில் வளர்ப்பதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு தடையாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்துகளுக்கு இடமில்லை. குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரையில் ஒரு தந்தையினுடைய வகிபாகம் இன்றியமையாத ஒன்றாகும். இன்று பெரும்பாலும் வெளிநாட்டில் உள்ளவர்கள் தந்தைமார்களாகவே உள்ளனர்.
பிள்ளைகளுடைய மனநிலையைப் பொறுத்தவரையில் வயது வந்த ஒருவரின் துணையின்றி அவர்களால் வாழ முடியாத நிலையே காணப்படுகிறது. மனப்பக்குவம் இல்லாத போது எதையும் செய்யக்கூடிய துணிச்சல் பிள்ளைகளுக்கு காணப்படுகிறது. பெற்றோருள் ஒருவரோ அல்லது இருவருமோ அருகில் இல்லாமல் சவால் மிகுந்த இந்த பருவத்தை சமாளிப்பது கடினமான ஒன்று என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
வெளிநாட்டில் நீண்ட காலம் ஒருவர் தங்கிவிடும் போது குறித்த நபர் தனிமைக்கு பழக்கப்படும் ஒரு நிலை உண்டாகி விடுகிறது. குடும்பத்துடன் அன்பைப் பகிர்ந்து கொள்ளும் நிலை படிப்படியாக தளர்வடைகிறது. புதிய சூழல் ஏற்படுத்தும் பிரதான தாக்கமே இதுவென்பது உளவியலாளர்களின் கருத்தாகும். தனிமை அனைவரையும் தவறு செய்யவே தூண்டும். மனிதனை தவறு செய்யத்தூண்டும் சக்தி தனிமைக்கு உண்டு. வெளிநாடு சென்றவர்கள் தனிமையின் தாக்கத்தால் மேற்கத்தைய கலாசாரத்தை பின்பற்றும் நிலை தோன்றுவதால் நாட்டில் உள்ள பிள்ளைகளின் எதிர்காலம் சீர்கெடுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டாகிவிடுகின்றன.
குடும்பத்தை விட்டு வெகுதூரம் செல்வதால் நண்பர்களின் செல்வாக்கு அதிகரித்து குடும்பத்தின் செல்வாக்கு குறைந்து விடுகின்றது. இதன் மூலம் சுய இன்பம், தன்னினச் சேர்க்கை போன்ற சிற்றின்ப மோகங்கள் ஒரு மனிதனை குடும்ப வாழ்க்கையில் இருந்தும் தூரமாக்கி விடுகின்றது.
பிள்ளைகள் சிறந்த முறையில் வளர்வதற்கு தாயினுடைய அன்பும் தந்தையுடைய அரவணைப்பும் அவசியமாகும். இருவருள் ஒருவரேனும் கலாசார ரீதியாக சீர்குலைவது ஏதாவது ஒரு வகையில் பிள்ளையை பாதிக்கும். அந்தவகையில் தந்தை வெளிநாட்டில் இருக்கும் பட்சத்தில் வீட்டில் உள்ள பிள்ளைகளின் ஒழுக்க விடயங்களை கண்காணிப்பது இலகுவான காரியமல்ல. மேலும் இதன்போது பதின்ம வயதினர் போதைப் பொருள் பாவனைக்கு உட்படவும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவும் வாய்ப்புள்ளது.
இலங்கையர்கள் பல்வேறு நாடுகளில் வேலைவாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். உலக நாடுகளை எடுத்துக் கொண்டால் கத்தார், சவூதி, ஜப்பான், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் இலங்கையர்கள் வேலை செய்கிறார்கள். வருடாந்தம் இலட்சக்கணக்கான இலங்கையர்களின் மனித வலுவினை பிறிதொரு நாடே பெற்றுக்கொள்கிறது. இது இலங்கை அரசின் கையாலாகாத தன்மையை எடுத்துக் காட்டுகின்றது. நம் நாட்டவர்களின் மனித சக்தி நமக்குத்தான் கிடைக்க வேண்டும். எம்மவர்களின் மனித வலுவினை பிற நாட்டவர்கள் பெறும்போது குறித்த நாடுகள் இலங்கையை பின் தள்ளுவதற்கு இலங்கையே காரணமாக அமைந்து விடுகின்றது.
சிறுவர் உரிமைகளும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய விடயங்களும் சிறுவர் தினத்தில் மாத்திரமே பேசப்படும் பொருளாக மாறிவிட்டது. ஏனைய நாட்களில் சிறுவர்களின் தேவைகள் கண்டுகொள்ளப்படுவதில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. அந்த வகையில் வெளிநாடு செல்லும் பெற்றோர்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று வினவினால் நிச்சயமாக அதற்கு விடை கிடையாது.
சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் மலேஷியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் இலங்கையை விட அரசியல், பொருளாதார நிலைமையில் பின்தங்கியே காணப்பட்டன. ஆனால் தற்போது சகல துறைகளிலும் குறித்த நாடுகள் இலங்கையை பின்தள்ளியிருக்கிறது. அதற்கான காரணம் மனித வலுச்சக்தியினை வெளிநாட்டுக்கு விலைபேசி விற்காமல் உள்நாட்டிலேயே பிரயோகித்தமை தான் என்று கூறினால் அது மிகையாகாது. ஒரு நாடு, நாட்டின் பொருளாதார நலன் திட்டங்களில் வெற்றி காண வேண்டும் என்றால் தூரநோக்குடன் செயற்படும் பட்சத்திலேயே அது சாத்தியமாகும். மலேஷியாவும் சிங்கப்பூரும், “இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள்” என்ற அம்சத்தை விளங்கிச் செயற்பட்டிருக்கின்றன. நாட்டின் குடிமக்களுக்கு நல்ல முறையில் ஊதியம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் பிள்ளைகளைப் பிரிந்து வெளிநாடு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைதான் அனைவருக்கும் உண்டாகும்.
இன்று பிள்ளைகளைப் பிரிந்து வெளிநாடு செல்லும் பெற்றோர்கள் தமக்கு சொந்தமாக வீடு இல்லாத பிரச்சினையையே கூறி வருகின்றார்கள். ஆனால் எமது நாட்டில் வீடமைப்புத் திட்டம் பரவலாக பேசப்படும் ஒன்றாகவே காணப்படுகிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் அரசாங்கத்தினால் கட்டப்படுவதாகவும் அதற்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்படுவதாகவும் தொலைகாட்சி, பத்திரிகை மற்றும் வானொலி விளம்பரங்களில் காண்கிறோம். ஆனால் இன்று நமது சமூகத்தில் பலர் சொந்த வீடின்றி தவிக்கும் நிலை தொடர்கிறது என்று கூறுவதை விட இனிமேலும் தொடரும் என்று கூறுவதே மிகப் பொருத்தமானது. கட்டப்படுகின்ற வீடுகள் உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதில்லை என்பதே உண்மை. சுனாமி, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் வீடுகளை இழந்தவர்களுக்கு, வீடுகளை வழங்க வீடுகள் கட்டப்பட்டுள்ள போதிலும் அவை யாருக்கும் உதவாத காட்டுச்செடிகள் போல பார்ப்பாரின்றி கிடக்கின்றன.
குறைந்தபட்சம் கட்டப்பட்ட வீடுகளை பகிர்ந்தளித்தாலாவது பலர் வெளிநாட்டு வேலை வாய்ப்பை நாடுவதை மட்டுப்படுத்தலாம். ஆனால் அரசாங்கத்தின் ஆமை வேகம் எம்மவர்களை வெளிநாட்டு வேலை வாய்ப்பை நாட வைக்கிறது. எமது பிள்ளைகள் சீர்கெடுவதற்கு எமது அரசாங்கம் காரணமாக அமைந்து விடுகின்றது.
நாட்டின் பல துறைகள் சீர்கெடுவதற்கு மூளைசாலிகளின் வெளியேற்றம் காரணமாக அமைகிறது. அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை மற்றும் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் என்பனவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பை நாடுவதற்கு காரணங்களாக அமைகின்றன. அரசாங்கப் பரீட்சைகள் தொடர்பில் காணப்படுகின்ற கடும்போட்டிகளும் வெளிநாட்டு வேலை வாய்ப்பை தேட காரணமாக அமைகிறது.
இன்று பல வீடுகளில் பிள்ளைகளின் பிறழ்வு நடத்தைக்கு தந்தை வெளிநாட்டில் உள்ளமை பிரதான காரணமாக அமைகிறது. ஒரு சில வீடுகளில் பிள்ளைகளின் பிறழ்வு நடத்தையை கட்டுப்படுத்துவதென்பது தாய் ஒருவரால் மாத்திரம் சாத்தியமான ஒன்றாக இருப்பதில்லை. இதன்போது மனப்பக்குவம் இல்லாத பிள்ளை தான்தோன்றித்தனமாக வளர்வதற்கான சந்தர்ப்பம் அமைந்து விடுகிறது. இவ்வாறான பிள்ளைகளின் தந்தைமார் வெளிநாட்டில் காலம் கடத்துவதால் பிள்ளைகளின் எதிர்காலம் சீர்கெடும் ஒருநிலை உருவாகிறது. வெளிநாட்டு சம்பாத்தியமே சிறந்ததென பொருளீட்டச் சென்ற எத்தனையோ தந்தைமார்கள் இன்று பிள்ளைகளின் எதிர் காலத்தை எண்ணி வருந்துவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். அவ்வாறான பிள்ளைகள் சமூகத்துக்கு சுமையாக ஊர்மக்களின் சாபத்தை நாளாந்தம் கேட்டு வருகிறார்கள்.
இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுவர்களில் பாதிப்
பேரிலும் அதிகமானவர்களுடைய தாயோ அல்லது தந்தையோ வெளிநாட்டில் உள்ளவர்களாக இருந்ததை கடந்த கால சம்பவங்கள் நமக்கு உணர்த்துகிறன்றன. நம்மில் பலர் பிள்ளைகளுக்காகவே வாழ்கிறோம். பிள்ளைகள் மீது பாலியல் சீண்டல் நடைபெறுவதை எந்தவொரு பெற்றோராலும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே இந்த அடிப்படை நலன் கருதியாவது இன்றைய தந்தைமார்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பை தவிர்க்க வேண்டும்.
எமது நாட்டின் உழைப்பை இன்னொரு நாடு சுரண்டுவதற்கு இடமளித்துள்ள எமது அரசாங்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பை எமது நாட்டவர்கள் துறந்து இலங்கைக்குள்ளேயே அனைவருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் சாத்தியத்திற்கு இடமில்லை. ஆகக்குறைந்தது சிறுவர்களின் உள விருத்தியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நடவடிக்கையையாவது அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம் குழந்தைச் செல்வம் தான். அத்தகைய செல்வங்களை நாம் விட்டுப் பிரிவதென்பது அந்த செல்வங்களை உள ரீதியாக பாதிக்கும். அன்பு தான் அனைவருக்கும் தேவையான அடிப்படை அம்சம். கண்ணீரைக் கூட ஆனந்தக் கண்ணீராக்கும் சக்தி அன்புக்கு உண்டு. ஆகவே, நாம் எமது பிள்ளைகள் மீதுஅன்பு செலுத்த நேரம் ஒதுக்க வேண்டும். தூரம் கூடினால் பேசும் ஆசை குறையும். பேச்சு குறைந்தால் அன்பும் குறைந்து செல்லும். பிள்ளைகளின் மனதை நோகடிக்கும் வெளிநாட்டு வாழ்க்கை நிச்சயமாக வேண்டாத ஒன்று. வெளிநாடு செல்வதற்கு எத்தனை நியாயமான காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும் பிள்ளைகளை சிறந்த முறையில் வளர்ப்பதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு தடையாக அமையும் என்பதில் மாற்று கருத்துக்களுக்கு இடமில்லை. எனவே முடிந்தவரை நாட்டுக்குள்ளேயே தொழிலை அமைத்துக்கொள்ள நாம் அனைவரும் முன்வரவேண்டும். முடிந்தவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பினை புறக்கணிக்க வேண்டும்.
-Vidivelli