- ஏ.ஜே.எம். நிழாம்
1946 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் இலங்கையருக்கு டொமினியன் சுயாதீனத்தை வழங்குவதற்காகவே சோல்பரி யாப்பை வழங்கியிருந்தனர். அதை இயற்றியவர் சேர் ஐவர் ஜெனிங்ஸ் எனும் ஆங்கிலேயர். எனினும் அப்போது ஆளுநராக இருந்த சோல்பரி பிரபுவின் பெயராலேயே சோல்பரி யாப்பு என அது அழைக்கப்பட்டது.
முதலில் டொமினியன் சுயாதீனம் என்றால் என்னவென்பதைப் பார்ப்போம். 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி வழங்கப்பட்டது முழுமையான சுதந்திரம் அல்ல. பிரதான அதிகாரங்களை ஆங்கிலேயரே வைத்துக்கொண்டு முகாமைத்துவங் களை மட்டுமே இலங்கையருக்கு வழங்கியிருந்தனர்.
அதன்படி சுங்கம், கப்பல் துறைமுகம், பணம் அச்சிடல், விமானத்தளம், திறைசேரி, இறைவரித் திணைக்களம், உப்பளம், நிதி, நீதி, பாதுகாப்பு, பொலிஸ், வைத்திய சாலைகள், பெருந்நெருக்கள், பஸ் போக்குவர்த்து, சட்டமா அதிபர், தோட்டக் கைத்தொழில், ஏற்றுமதி, அரசவர்த்தமானி, இறக்குமதி, வர்த்தக முதலீடு, மின்சாரம், வானொலி நிலையம், பெற்றோல் குதங்கள், சர்வகலாசாலைகள், முடிக்குரிய காணிகள் ஆகியன ஆங்கிலேயர் வசமே இருந்தன.
எனவே, டொமினியன் சுயாதீனத்தை முழுமையான சுதந்திரம் எனக் கூறமுடியாது. எனினும் அந்தநாளே இற்றைவரை சுதந்திர நாளாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது என்பதே உண்மையாகும்.
இந்தியாவுக்கு மகாத்மா காந்தியும் பாகிஸ்தானுக்கு முஹம்மதலி ஜின்னாவும் ஆங்கிலேயரிடமிருந்து முழுயைான சுதந்திரத்தைப் பெற்று வழங்கி யிருக்கையில் டி.எஸ். சேனாநாயக்க இலங்கைக்கு டொமினியன் சுயாதீனத்தையே பெற்று வழங்கியிருந்தார். இந்தியாவில் இனப்பிரச்சினையைத் தீர்க்க இந்தியா எனவும் பாகிஸ்தான் எனவும் இருநாடுகளாகப் பிரித்துவிட்ட ஆங்கிலேயர் இலங்கை சின்னஞ்சிறு தீவு என்பதால் இனப்பிரச்சினை ஏற்படாதிருக்க தாம் இயற்றி வழங்கிய யாப்பில் சிறுபான்மைக் காப்பீட்டுச் சட்டமான 29 ஆம் ஷரத்தை வழங்கியிருந்தனர்.
இதன்படி இலங்கையில் சிங்கள மக்கள் 74% வீதமாக வாழ்ந்து நான்கில் மூன்று பங்கு மக்கள் பிரதிநிதித்துவத்தை வழங்கிய போதும் சிறுபான்மைகளின் அடிப்படை உரிமைகளில் எதையும் நீக்கிவிட முடியாது. ஆக 29 ஆம் ஷரத்து என்பது பாராளுமன்ற பெரும்பான்மை வாக்குகளாலும் கூட மாற்ற இயலாத சிறுபான்மைகளுக்குப் பாதிப்பற்ற காப்பீட்டுச் சட்டமாகும். உலகில் இற்றைவரை இந்த ஷரத்து புகழப்பட்டே வருகின்றது. காரணம் பல்லின நாட்டில் பெரும்பான்மை சமூகத்திடமிருந்து சிறுபான்மைகள் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படாது வாழ இதுவே சிறந்த ஏற்பாடு என ஏற்றிப் போற்றப்படுகின்றது.
இரண்டாம் உலக மகா யுத்தத்துக்குப் பின் ஐ.நா உருவாகி மனித உரிமை சாசனத்தை நிறைவேற்றியது. அதற்குப் பின்பே காலனித்துவ நாடுகள் தமது கைகள் வசமிருந்த நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கின. அந்த சாசனத்தின் அடிப்படையில்தான் ஆங்கிலேயர் பல்லின நாடான இலங்கைக்கு 29 ஆம் ஷரத்தை சிறுபான்மைக் காப்பீடாக வழங்கியிருந்தனர்.
அதன்படி தமிழ்மொழி, தமிழ் கலை, கலாசாரம், தமிழ் வாழ்வாதாரம், தமிழ்ப்பிரதேசம், ஆலயங்கள், மத வழிபாடு ஆகியவற்றுக்கும் 29 ஆம் ஷரத்தால் சட்டக் காப்பீடு இருந்தது. முஸ்லிங்களுக்கு ஆங்கிலேயர் வழங்கிய பிரதிநிதித்துவம், வக்பு சபை காதிகோர்ட், தனியார் சட்டம், வாழ்வாதாரம், பிரதேசம் ஆகியவற்றுக்கும் சட்டக்காப்பீடு இருந்தது.
1972 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ ஆட்சியின் சட்ட மந்திரி இயற்றிய குடியரசு யாப்பில் 29 ஆம் ஷரத்து நீக்கப்பட்டிருந்தது. அதற்குப்பின் உரிமைகளை அனுபவித்து வந்த சிறுபான்மைகள் யாவரும் சலுகைகளைப் பெற்றே வாழவேண்டிய நிலை ஏற்பட்டது. சோல்பரி யாப்பின் 29 ஆம் ஷரத்து நீக்கப்பட்ட பின் தம்மிடம் இருப்பது உரிமையா?, சலுகையா? என்பதுவும் சிறுபான்மைகள் பலருக்குத் தெரியாது. அதாவது எதுவும் சிங்களவர்களுக்குப் பிறகுதான் சிறுபான்மைகளுக்கு எனும் பேரினக் கருத்தாக்கமே 1972 ஆம் ஆண்டு யாப்புக்குப் பின் மேலோங்கியிருந்தது.
1949 ஆம் ஆண்டு பிரதமர் டி. எஸ். சேனாநாயக்க கிழக்கில் திட்டமிட்ட பேரினக் குடியேற்றத்தை நிகழ்த்தாமலும் மலையக இந்திய வம்சாவளியினரின் குடியுரிமையை நீக்காமலும் இருந்திருப்பாராயின் வடக்குக் கிழக்கில் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் சமஷ்டிக் கோரிக்கை எழுந்திருக்காது. சிறுபான்மைக் காப்பீடான 29 ஆம் ஷரத்தாலும் அதைத்தடுக்க முடியாமற் போனதே சமஷ்டிக் கோரிக்கை தோற்றம் பெறக் காரணமாயிற்று எனலாம். எனினும் எஸ். டப்ளியு. ஆர். டி. பண்டாரநாயக்க பிரதமராக இருக்கையில் அவர் கொண்டு வந்த சிங்களம் மட்டும் அரசகரும மொழி வழக்கில் 29 ஆம் ஷரத்தை அரசால் வெற்றிகொள்ள முடியவில்லை. வடக்குக் கிழக்கு தமிழர் வெற்றி கொண்ட அதுவே கோடீஸ்வரன் வழக்காகும்.
இதில் ஆஜரான ஜி.ஜி. பொன்னம்பலமும், எஸ்.ஜே.வி. செல்வநாயகமும் முருகேசு திருச்செல்வமும் திறமையான தமது விவாதங்களால் அரசைத் தோற்கடித்திருந்தனர். அதன் காரணமாகவே 1972 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ அரசில் சட்ட அமைச்சர் கொல்வின் ஆர்.டி. சில்வா 29 ஆம் ஷரத்தை நீக்கியிருந்தார். பௌத்த மத சாசன முன்னுரிமைகளைக் கொண்டு வந்து சிறுபான்மைக் காப்பீடான 29 ஆம் ஷரத்தை நீக்கியதன் மூலம் அவர் இப்படி குடியரசு யாப்பு என பெயரிட்டதால் சிங்கள மக்களுக்கே இலங்கை உரித்து என்றாகியது. ஆங்கிலேயரின் காலனித்துவத்திலிருந்து சுதந்திரம் பெற்ற சிங்களவரின் ஆளுமைக்குள் சிறுபான்மைகள் சிக்கிக்கொண்டார்கள் என்றாகியது. அதற்குப் பின்பே அனைத்து இலங்கைப் பிரஜைகளும் சமம் எனும் நிலைப்பாடு அகன்று முதல் தரப்பிரஜை இரண்டாம் தரப்பிரஜை எனும் பாகுபாடும் உருவானது. சிங்கள மக்களே பூமி புத்திரர்கள், இலங்கை புத்தரின் தேசம் எனும் கருத்துருவாக்கங்கள் அன்றிலிருந்தே தோற்றம் பெற்றன.
இதனால் 1949 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை சமஷ்டியை மட்டுமே கோரிவந்த வடக்கு கிழக்கு தமிழ் தரப்பினர் சுயநிர்ணய தனி இறைமைக் கோரிக்கையை முன்வைத்து 1977 ஆம் ஆண்டு நிகழ்ந்த பொதுத்தேர்தலில் மக்களாணையையும் பெற்றுக்கொண்டனர். ஜனநாயக ரீதியிலான அவர்களின் முன்னெடுப்பு ஆயுத ரீதியில் ஒடுக்கப்பட்டதாலேயே தீவிரவாதம் தலைதூக்கியது.
பிறகு அரசு ஜனநாயக தமிழ் தலைவர்களைப் புறக்கணித்துவிட்டு தமிழ் ஆயுதப் போராளிகளுடனேயே பேச்சு வார்த்தைகளை நடாத்தியது. அதிலும் இணக்கப்பாடு ஏற்படாததால் 30 வருடகால கொடூர யுத்தம் நிகழ்ந்து பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பலியாகினர். ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அங்கவீனமுற்றனர். இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் அகதிகளாயினர். ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களும் பலியாகினர். நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்களும் அங்கவீனமுற்றனர். கோடிக்கணக்கான சொத்துக்களும் அழிவுற்றன. உலக நாடுகளில் இலங்கை தனிமைப்பட்டு ஐநா விலும் போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளானது. எனினும் தீர்வு இன்னும் எட்டப்படவில்லை.
1978 ஆம் ஆண்டு ஜே.ஆர் இயற்றிய நிறைவேற்று யாப்பும்கூட பௌத்த மதத்தையும் சாசனத்தையும் முன்னிலைப்படுத்தி 29 ஆம் ஷரத்தாகிய சிறுபான்மைக்காப்பீட்டை நீக்கியே இருந்தது. எனினும் அத்தனை அழிவுகளும் நிகழ்ந்த பின் அண்மையில்தான் உயர்நீதிமன்றம் சமஷ்டி அந்த யாப்புக்கு முரணல்ல எனப்பொருட் கோடல் செய்திருக்கிறது. அப்படியானால் 1972 ஆம் ஆண்டின் குடியரசு யாப்புக்கும் சமஷ்டி முரணல்ல என்றே ஆகிறது. எனவே சோல்பரி யாப்புக்கு சமஷ்டி முற்றிலும் இசைந்திருப்பதும் தெளிவாகிறது.
அந்த வகையில் 1957 ஆம் ஆண்டு நிகழ்ந்த பண்டா –செல்வா ஒப்பந்தம் அமுலாகியிருக்குமாயின் இந்த நாடு இப்போது சிங்கப்பூர், மலேஷியா, மாலைதீவு, இந்தியா, ஹொங்கொங் ஆகிய நாடுகளைப்போல் பொருளாதார ரீதியில் மேம்பாடு அடைந்து மக்களும் செழிப்போடு வாழ்ந்திருப்பார்கள். எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டார நாயக்க பேரினவாதத்தைத் தனது அரசியல் தேவைக்காக உசுப்பி விட்டு ஆட்சிக்கு வந்ததாலேயே சிங்கள மக்களின் எதிர்ப்புக்கு அஞ்சி ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தார். எனினும் அவருக்கு சமஷ்டி சரியானது என்பது தெரியும். இல்லாவிட்டால் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தோடு சேர்ந்து அதை வடிவமைக்க வாரக்கணக்கில் ஈடுபட்டிருப்பாரா? அரசியல் வடிவமைப்புகளில் வல்லவரான ஜே.ஆருக்கும் சமஷ்டியின் அவசியம் புரியாமலில்லை. எனினும் அவர் சிங்கள வாக்குவங்கியை மீளப்பெறவே சமஷ்டிக்கு எதிராக நின்றிருக்கிறார். இதே நிலை அரசியலில் தற்போதும் தொடரவே செய்கிறது.
1978 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட தற்போதைய நிறைவேற்று யாப்பு சமஷ்டிக்கு முரணல்ல என உயர் நீதிமன்றம் பொருட்கோடல் செய்தும் கூட சமஷ்டியைப் பிரிவினளளளை, தனிநாடு என்றெல்லாம் அரசியல் தேவைகளுக்காக பெருந்தேசியக் கட்சிகள் அர்த்தப்படுத்துகின்றன.
முன்பு கோரப்பட்ட சமஷ்டிக்கும் இப்போது கோரப்படும் சமஷ்டிக்கும் வித்தியாசம் எனவும் குறிப்பிடுகின்றன. முன்பு சுயநிர்ணய தனி இறைமைக் கோரிக்கை அற்ற நிலையில் முன்வைக்கப்பட்ட சமஷ்டி எனவும் இப்போது சுயநிர்ணய தனி இறைமைக்கு மாற்றீடாகக் கோரப்படும் சமஷ்டி எனவும் விளக்கம் கூறுகிறார்கள். அது முழு நாடும் சிங்களவருக்கே எனும் சட்ட அமைப்பு இல்லாத நிலைமையில் முன்வைக்கப்பட்ட சமஷ்டி எனவும் இது முழு நாடும் சிங்களவருக்கே எனும் சட்ட வடிவம் இருக்கையில் முன்வைக்கப்படும் சமஷ்டி எனவும் எடுத்துக்கொள்ளலாமே?
பௌத்த மதத்தையும் சாசனத்தையும் முன்னுரிமைப்படுத்தி ஒற்றையாட்சி என்றால் என்ன அர்த்தம்? அந்த முறைப்படி வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு சமஷ்டி வழங்கினாலும் கூட அது சமநிலைப்பாடுள்ளதாக அமையாது. பல்லின நாட்டுக்கான சமஷ்டி பல்லின யாப்பாலேயே சாத்தியப்படும். பேரின யாப்பு மூலம் அதை நிலை நிறுத்த முடியாது. எனினும் பேரின வடிவத்தைத் தக்கவைத்துக்கொண்டே சிறுபான்மைப் பிரதேசத்துக்கான சமஷ்டியை அமைக்கப்பார்க்கிறார்கள். பேரின மத்திய அரசு சமஷ்டியை ஏற்குமெனில் இன ரீதியிலன்றி பிரதேச ரீதியிலேயே அது சாத்தியமாகும். மத்திய அரசின் ஆளுமை அங்கு இருக்கும்.
சோல்பரி யாப்பில் பௌத்த சாசன முன்னுரிமைகள் இருக்கவில்லை. காரணம் அது மத சார்பற்ற யாப்பாக இருந்ததேயாகும். அதன் மூலம் இலங்கையில் எல்லா மதத்தினருக்கும் சமத்துவம் இருந்தது. 1972 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியரசு யாப்பில் அவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதன் மூலமும் அரச கருமமொழி சிங்களமாக ஆக்கப்பட்டதன் மூலமும் உருவான ஒற்றையாட்சி சிறுபான்மைக் காப்பீட்டுச் சட்டமான 29 ஆம் ஷரத்தையும் நீக்கியதன் மூலமும் சிறுபான்மைகள் அநீதி இழைக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள்.
சிறுபான்மைகளும் சேர்ந்து ஆங்கிலேயரிடம் கோரி சமமாகப் பெற்ற சுயாதீனத்தை தன்னிச்சையாக இவர்கள் அபகரித்துக் கொண்டார்கள். இது பற்றி நான் முன்பும் கூறியிருக்கிறேன். பேரினவாதிகள் சோல்பரி யாப்பில் காணப்பட்ட ஒரு குறைபாட்டைக் கண்டுபிடித்தே இதை சாதித்துக்கொண்டார்கள். அந்த யாப்பை பாராளுமன்றத்தில் கூடி இரத்தாக்க முடியாது என அதில் காணப்பட்டதால் ரோயல் கல்லூரி நவரங்கஹல மண்டபத்தில் எம்பிக்களைக் கூட்டி இரத்தாக்கிவிட்டுப் பாராளுமன்றத்தில் பேரினக் குடியரசு யாப்பை இயற்றிக் கொண்டார்கள்.
இந்த யாப்பு பௌத்த மத சாசன முன்னுரிமைகளை வழங்கியதோடு அரச கரும மொழியாக சிங்களத்தையும் ஏற்று சிறுபான்மைக்காப்பீடாகிய 29 ஆம் ஷரத்தை நீக்கியிருந்தது. இது சிறுபான்மை தமிழ்– முஸ்லிம் எம்பிக்களுக்குத் தெரியாது. சிங்கள எம்பிக்கள் மட்டுமே கூடிச்செய்தது எனவும் கூறிவிட முடியாது.
தமிழ்த்தரப்பினர் சமூக நோக்கோடு இதை எதிர்த்த போதும் முஸ்லிம்கள் தமிழ் தரப்போடு அன்றிருந்த பகையாலும் சிங்களவருடனான நெருக்கத்தாலும் எதிர்கால சந்ததியின் நல உரிமைகள் பற்றிய நோக்கமின்றியும் நன்கு ஆராயாமலும் இதை ஆதரித்திருந்தார்கள்.
இதனால் 29 ஆம் ஷரத்து நீக்கப்பட்ட தன் காரணமாக இற்றைவரை சிறுபான்
மைகள் ஆங்கிலேயர் வழங்கியிருந்த உரிமைகளை சலுகைகளாகவே பெற்றுக்கொண்டிருக்கின்றனர்.
கிழக்கை வடக்கோடு இணைத்தால் இலங்கையின் நிலப்பரப்பில் மூன்றில் ஒன்று தமிழருக்காகி விடும். பொலிஸ் அதிகாரத்தையும் காணி அதிகாரத்தையும் அதற்கு வழங்கினால் நாடு கடந்த தமிழரும் அங்கு வந்து குடியேறி தம் வசமுள்ள செல்வங்களையும் குவித்தால் தனியரசு போல் ஆகிவிடும் என சிங்கள தரப்பினர் கருதுகையில் கிழக்கை வடக்கோடு இணைக்காது தனியே விட்டால் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றம் நாளடைவில் கபளீகரம் செய்துவிடும். அதை தடுப்பதற்கே இணைப்பைக் கோருவதாகவும் பொலிஸ் அதிகாரமும் காணியதிகாரமும் இருந்தால் தான் அவ்வாறு தடுக்கலாம் எனவும் தமிழ் தரப்பு குறிப்பிடுகிறது. பரஸ்பரம் இருதரப்பும் நம்பிக்கை கொள்ளாதவரை நிலையான தீர்வுக்கு வருவது இழுபறியாகவே இருக்கும். இருதரப்பு மட்டும் பே சாமல் முஸ்லிம் களையும் மூன்றாம் தரப்பாகத் தம்மோடு இணைத்துக்கொள்ள வேண் டும். இன்றேல் எட்டப்படும் இணக்கம் முழுமைபெறாது. அரைகுறை தீர்வு பிற்பலனைப் பாதிக்கும்.
-Vidivelli