புத்தளம் அருவக்காடு குப்பை பிரச்சினையை ஒரு தேசிய பிரச்சினையாக பார்க்க வேண்டும்
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர்
புத்தளம் அருவக்காடு பிரச்சினையானது புத்தளத்திற்கான ஒரு பிரச்சினையல்ல அது ஒரு தேசிய பிரச்சினையாகும்.
இப்பிரச்சினையைத் தீர்க்க அமைச்சர் சம்பிக்க ரணவக்க உடனடியாக நடவடிக்கை எடுத்து, இங்கு குப்பை கொண்டுவருவதனை நிறுத்த வேண்டுமென நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் தெரிவித்தார்.
புத்தளம் அருவக்காடு பகுதியில் குப்பை கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்து, கடந்த வெள்ளிக்கிழமை (15) புத்தளம் கொழும்புமுகத் திடலில் ‘க்ளீன் புத்தளம்’ ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
போராடுகின்ற மக்கள் ஒரு போதும் பின்வாங்க வேண்டாம்.
அரசியல்வாதிகள் மக்களுக்கு பணி செய்ய வந்தவர்களே தவிர, மக்களின் எஜமானர்கள் கிடையாது. மக்களின் கோரிக்கைகளை சிரமேற்கொண்டு செய்வதே அரசியல்வாதிகளின் பணியாகும்.
பல நாடுகளில் இவ்வாறான பிரச்சினைகளை மனித உரிமைப் பிரச்சினையாக மாற்றி, அந்த நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதனைப் பரவலாக நாம் காணலாம்.
நுரைச்சோலை பிரச்சினையாக இருக்கலாம் அல்லது கந்தலகம, ரத்துபஸ்வெல, சம்பூர் பிரச்சினையாக இருக்கலாம் இவை யாவும் மக்கள் போராட்டமாக இருந்த போதும் கடைசி வரை அரசாங்கம் அதற்கு நடவடிக்கை எடுக்காமலேயேதான் இருந்தது.
இந்தப் போராட்டம் தொடர வேண்டும். நாங்கள் உங்களோடு இருப்போம். சுத்தமான குடிநீருக்காக ரதுபஸ்வெல மக்கள் தங்களது உயிரைக் கொடுத்து போராடினார்கள். இங்கு நாங்கள் வெயிலையும் பொருட்படுத்தாது போராடிக் கொண்டிருக்கின்றோம்.
இது உரிமைக்கான போராட்டம், வாழ்வதற்கான போராட்டம், ஆரோக்கிய வாழ்விற்கான பேராட்டம். இது ஒரு மக்கள் போராட்டம்.
இந்த மக்கள் போராட்டம் ஒருபோதும் தோற்றுப் போய்விடக் கூடாது. அதனை நாங்கள் மதிக்கின்றோம்.
அதேபோன்று புத்தளம் நகரசபையிலே இப்பிரச்சினைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எங்களது உறுப்பினர் அமீன் அவர்களும் ஆதரவளித்து, எங்களால் முடியுமான ஒரு முயற்சியை செய்திருக்கின்றோம்.
தற்போது நடைபெற்றுக் பெற்றுக் கொண்டிருகின்ற பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வுப் போராட்டமானது, பெருந்தோட்ட தொழிலாளர்களின் போராட்டமாக மட்டும் இருக்கப்போவதில்லை.
தொழிற்சங்கங்கள், மக்கள் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புக்கள் மற்றும் நீதியையும், நியாயத்தையும் மதிக்கின்ற மக்கள் அனைவரினதும் போராட்டமாகும் என அதன் ஏற்பாட்டாளர்கள் கூறியிருக்கின்றார்கள்.
அவர்களுக்கான ஆதரவினை நாங்கள் தெரிவிக்கின்றோம். அதேபோன்று இது புத்தளத் திற்குரிய பிரச்சினையல்ல, இதனை கொழும்பிலும் வந்து பேசுங்கள், கிழக்கு மாகாணத்திற்கும் வந்து பேசுங்கள். இது ஒரு தேசியப் பிரச்சினையாகும். என்றார்.
-Vidivelli