அமைச்சரவையை அதிகரித்துக்கொள்ளக் கையாளும் முயற்சியே தேசிய அரசாங்கமாகும். அதனை நாம் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம். தேசிய அரசாங்க கொள்கையை நாம் முற்றாக எதிர்க்கிறோமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அரசியலமைப்பு பேரவை குறித்த விவாதத்தில் பல உண்மைகள் நாம் வெளியிடுவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் தேசிய அரசாங்கம் குறித்தும் அரசியலமைப்பு பேரவை குறித்தும் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், தேசிய அரசாங்கம் என்ற கொள்கையை நாம் ஏற்றுகொள்ளவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் தேசிய அரசாங்கம் என்ற முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இப்போது மீண்டும் தேசிய அரசாங்கம் என்ற கதை உருவாக அவர்களின் சுயநல சிந்தனையே காரணமாகும். அவர்களுக்கு அமைச்சுப்பதவிகளை அதிகரித்துக்கொள்ள வேண்டுமென்ற நோக்கம் மட்டுமே உள்ளது. அதற்காகவே அவர்கள் மீண்டும் தேசிய அரசாங்கம் அமைக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். எவ்வாறிருப்பினும் நாம் தேசிய அரசாங்கம் என்ற கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இதனை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். அதேபோல் அரசியலமைப்பு பேரவை குறித்து எம்மத்தியில் ஆரோக்கியமான கருத்துக்கள் இல்லை.
எவ்வாறு இருப்பினும் அடுத்த பாராளுமன்ற அமர்வுகளில் அரசியலமைப்பு பேரவை குறித்த விவாதம் நடத்தப்படவுள்ளது. அந்த விவாதத்தில் நாம் எமது தரப்புக் கருத்துக்களை முன்வைப்போம். அதன்போது பல உண்மைகளை நாம் வெளிப்படுத்துவோம்.
19 ஆவது திருத்தத்தை நான் ஆதரிக்கவில்லை. எனினும் அப்போதிருந்த சூழலில் எமது தரப்பினர் அதனை ஆதரித்தனர். எனினும் இப்போது அதனை எதிர்க்கின்றனர் என அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli