நான் முஸ்லிம் இனத்துக்கான அமைச்சரல்ல: ரிஷாத் பதியுதீன்
த.தே.கூட்டமைப்பினர் இனவாதம் பேசக் கூடாது என்றும் தெரிவிப்பு
‘நான் முஸ்லிம் இனத்துக்கான அமைச்சரல்ல. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனவாதம் பேசி தமிழ், முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தக்கூடாது. மீள்குடியேற்ற அமைச்சில் ஒரு பகுதியே எனக்குத் தரப்பட்டுள்ளது. நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் பொறுப்பே என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனாலே நீண்டகாலமாக இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் மீள்குடியேற்றத்துக்கு முதலிடம் அளிக்கிறேன்’ என கைத்தொழில், வர்த்தகம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் நீண்ட காலமாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் எஸ். ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பில் வினவியபோதே அமைச்சர் ரிசாத் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் விடிவெள்ளிக்கு கருத்து தெரிவிக்கையில்; மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமே இருக்கிறது. அதனால் தமிழ் மக்களின் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் அவர்கள் பிரதமரிடமே கோரிக்கை விடுக்கவேண்டும். என்னிடம் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு வழங்கப்படக்கூடாது என பிரதமரிடம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்கவே அவ்வமைச்சு என்னிடம் வழங்கப்படாது பிரதமரின் கீழ் இருக்கிறது.
புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்ற அமைச்சு முழுமையாக எனக்கு வழங்கப்பட்டால் தமிழ் மக்களின் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான செயற்திட்டங்களை என்னால் முன்னெடுக்க முடியும். இதை விடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்னை இனவாதியாக சித்திரிப்பது தவறாகும். இதனால் தமிழ், முஸ்லிம் உறவுகளுக்கிடையே விரிசல்கள் ஏற்படலாம்.
2009 இல் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்பு முல்லைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்த 1800 குடும்பங்களுக்கென 900 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டது. என்றாலும் அக்காணியில் அவர்கள் மீள் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதுவரை காலம் அது இழுத்தடிக்கப்படுகிறது. அதனால் மீள் குடியேறுவதற்கு வந்திருந்த அநேக குடும்பங்கள் திரும்பிச்சென்று விட்டன. அங்கு எஞ்சியிருக்கும் 700 குடும்பங்களில் 500 குடும்பங்களுக்காவது அரசாங்கம் தலா 20 பேர்ச்சஸ் வீதமாவது பெற்றுக் கொடுக்கவேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
நீண்டகாலமாக இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம் மக்களை மீள் குடியேற்றுவது எனது கடமையாகும். இந்த அதிகாரம் அமைச்சு மூலம் எனக்குத் தரப்பட்டுள்ளது என்பதை என்மீது குற்றம் சுமத்துபவர்கள் புரிந்துக் கொள்ளவேண்டும். இதைவிடுத்து என்மீது இனவாத சேறு பூச முனைவது அறியாத்தனமாகும்.
மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சராக பதவி வகித்த காலத்தில் தமிழ் மக்களையே மீள் குடியேற்றியுள்ளேன் என்பதை எவராலும் மறுக்க முடியாது. நாட்டின் அபிவிருத்திக்கும், நிலையான ஆட்சிக்கும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு இருக்கவேண்டும். இல்லையேல் அந்த இலக்கினை எம்மால் எட்ட முடியாது என்றார்.
-Vidivelli