சிரியாவின் வடமேற்கு இட்லிப் மாகாணத்தின் குடியிருப்புப் பிரதேசங்கள் மீது அரசாங்கப் படையினர் மேற்கொண்ட எறிகணை வீச்சுத் தாக்குதலில் குறைந்தது பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 34 பேர் காயமடைந்துள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வெள்ளைத் தலைக்கவச சிவில் பாதுகாப்பு முகவரகம் தெரிவித்தது.
இட்லிப்பின் கிராமப் பகுதிகளான கான் ஷெக்கௌன் மற்றும் மாறா அல்-நூமான் பிரதேசங்களிலுள்ள சனநெரிசல்மிக்க 13 பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக வெள்ளைத் தலைக்கவசத்தினர் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுள் மூன்று சிறுவர்களும் நான்கு பெண்களும் உள்ளடங்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தற்போது இடம்பெற்றுவரும் அரச படையினரின் தாக்குதல்கள் காரணமாக மனிதப் பேரவலம் ஏற்படும் என இட்லிப்பிலுள்ள வெள்ளைத் தலைக்கவச சிவில் பாதுகாப்பு முகவரகப் பணிப்பாளர் முஸ்தபா ஹாஜ் யூஸுப் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் அதிக இரத்தம் சிந்தப்பட்டுவிட்டது, தாக்குதல்கள் காரணமாக உயிரிழந்தவர்களுள் அதிகமானவர்கள் பெண்களும் சிறுவர்களுமாவர் எனவும் அவர் தெரிவித்தார்.
மோதல் தவிர்ப்பு வலயமான இட்லிப்பில் அரச படைகள் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக இவ்வருட ஆரம்பம் தொடக்கம் குறைந்தது 63 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
2011 ஆம் ஆண்டு ஆரம்பித்து பாரிய அழிவுகளை ஏற்படுத்திய முரண்பாடுகளில் இருந்து சிரியா தற்போதுதான் மீள ஆரம்பித்திருக்கும் நிலையில் ஆர்ப்பாட் டக்காரர்கள் மீது அரச படைகள் அபரிமிதமான பலத்தைப் பிரயோகித்து நவடிக்கைகளை மேற்கொண்டு வருகின் றனர்.
-Vidivelli