மாரவிலவில் பாரிய விபத்து
சக்திவாய்ந்த மின் மாற்றியுடன் பஸ் மோதியதில் மூவர் பலி; 19 பேர் காயம்; சாரதி கைது
சிலாபம், மாரவில – மஹவெவ பகுதியில் நேற்று அதிகாலை தனியார் பயணிகள் பஸ் வண்டியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து சக்திவாய்ந்த மின் மாற்றியொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 16 ஆண்கள், மூன்று பெண்கள் உள்ளடங்கலாக 19 பேர் படுகாயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிலாபம், கொழும்பு, ராகம மற்றும் இராணுவ வைத்தியசாலைகளுக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் விபத்தின்போது காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பஸ்ஸின் சாரதியான அனுராதபுரத்தைச் சேர்ந்த 33 வயதான சுஜீவ குமார தென்னகோனை மாரவில பொலிஸார் நேற்று பிற்பகல் கைது செய்தனர்.
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் வண்டி நேற்று அதிகாலை 4.30 மணியளவில் மாரவில – மஹவத்த பகுதியில் விபத்துக்குள்ளானது. மிக வேகமாகப் பயணித்துள்ள குறித்த பஸ் வண்டி, மஹவத்த சந்திக்கு அருகில் பாதையை விட்டு விலகி, அருகிலிருந்த சக்திவாய்ந்த மின் மாற்றியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது. லொறியொன்றினை முந்திச் செல்ல முற்பட்டபோது சாரதியால் பஸ்ஸை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தின்போது, குறித்த பஸ் வண்டியின் மீது மின் மாற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பம் முறிந்து விழுந்திருந்ததால் பஸ் வண்டியில் இருந்தோரை மீட்க கடும் பிரயத்தனம் முன்னெடுக்கப்பட்டது. பொலிசாரும் பிரதேச மக்களும் இணைந்து முதலில் 19 பேரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும் பஸ்ஸுக்குள் சிக்கியிருந்த நான்கு பேரை மட்டும் மீட்க 3 மணி நேரம் மீட்புப் பணியாளர்களுக்குத் தேவைப்பட்டது. அவர்களில் மூவரும் உயிரிழந்த நிலையில் சடலமாகவே மீட்கப்பட்டனர்.
உயிரிழந்தவர்கள் மூவரும் ஆண்களாவர். அவர்களில் ஒருவர் 60 வயதான நபர் என்பதுடன் அவரது அடையாளம் நேற்று மாலை 6.00 மணி வரை உறுதி செய்யப்பட்டிருக்கவில்லை. உயிரிழந்த ஏனைய இருவரில் ஒருவர் 32 வயதானவர் எனவும் அவர் எழுவன்குளம் பகுதியைச் சேர்ந்த நாமல் என அறியப்படுபவர் எனவும் குறிப்பிட்ட பொலிஸார், மற்றையவர் 45 வயதான ஷிரோன் சஞ்சய மென்டிஸ் எனும் சூரியபுர பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் கூறினர்.
காயமடைந்த 19 பேரில், புத்தளம் இராணுவ முகாமொன்றில் சேவையாற்றும், விடுமுறையில் வீடுகளை நோக்கிப் பயணித்த மூன்று இராணுவ வீரர்களும் ஒரு கடற்படை வீரரும் உள்ளடங்குவதாக வைத்தியசாலை தரப்பு தகவல்கள் தெரிவித்தன.
இந் நிலையில் மாரவில பொலிசார் முன்னெடுத்த விசாரணைகளில் குறித்த பஸ் வண்டியில் இரு சாரதிகள் இருந்துள்ளமையும் அவர்களில் ஒருவர் வவுனியாவில் இருந்து புத்தளம் வரையில் பஸ்ஸை செலுத்தியுள்ளமையும், மற்றையவர் புத்தளத்தில் இருந்து பஸ்ஸை செலுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
அத்துடன் இருவரும் மிக வேகமாகவே பஸ்ஸை செலுத்தியதாக பயணிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். அதிக வேகம் காரணமாக சாரதியால் பஸ்ஸை கட்டுப்படுத்த முடியாமல் போனதே விபத்துக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ள நிலையில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
-Vidivelli