திருமலை ஷண்முகா ஆசிரியைகள் விவகாரம்: அபாயா அணிவது அடிப்படை உரிமை

'அபாயா' அணிந்து மீண்டும் கற்பிக்க அனுமதிக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரை

0 758

திரு­கோ­ண­மலை ஷண்­முகா இந்துக் கல்­லூ­ரியில் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து கட­மை­யாற்­று­வது அவர்­க­ளது அடிப்­படை உரிமை என்றும் அதற்குத் தடை விதித்­ததன் மூலம் பாட­சா­லையின் அதிபர், குறித்த ஆசி­ரி­யை­களின் அர­சி­ய­ல­மைப்பில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள அடிப்­படை உரி­மையை மீறி­யுள்­ள­தா­கவும் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. அத்­துடன் இவ் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து மீண்டும் அதே பாட­சா­லையில் கற்­பிப்­ப­தற்கு அனு­ம­திக்­கப்­பட வேண்டும் என்றும் ஆணைக்­குழு பரிந்­து­ரைத்­துள்­ளது. மேலும்  முறை­யான இட­மாற்ற ஒழுங்­கு­களைப் பின்­பற்­றாமல் குறித்த ஆசி­ரி­யை­களை இட­மாற்­றி­யதன் மூலம்  அவர்­க­ளது அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ள­தா­கவும் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது.

திரு­கோ­ண­மலை ஷண்­முகா இந்துக் கல்­லூ­ரியில் கட­மை­யாற்­றிய நான்கு முஸ்லிம் ஆசி­ரி­யைகள் இஸ்­லா­மிய கலா­சார ஆடை­யான ‘அபாயா’ அணிந்து கற்­பித்தல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் பாட­சா­லையின் அதிபர் தடை விதித்­தி­ருந்தார். இத­னை­ய­டுத்து குறித்த ஆசி­ரி­யைகள் 9 மாதங்­க­ளுக்கு தற்­கா­லி­க­மாக இட­மாற்­றப்­பட்­டி­ருந்த நிலையில், கடந்த மாதம் முதல் நிரந்­த­ர­மாக இட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளனர். இந் நிலையில் அபாயா அணிந்து கற்­பிக்க முடி­யாது என தடை விதிப்­ப­தா­னது தமது அடிப்­படை உரி­மையை மீறி­யுள்­ள­தாக குறித்த ஆசி­ரி­யைகள் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் முறை­யிட்­டி­ருந்­தனர். இது தொடர்பில் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களின் இறுதி அறிக்கை நேற்று வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இவ் அறிக்­கையின் பரிந்­து­ரை­க­ளி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

18.02.2019 திக­தி­யி­டப்­பட்டு, மனித உரி­மை­ஆ­ணை­யா­ளர்கள் இரு­வ­ரினால் கையெ­ழுத்­தி­டப்­பட்டு வெளி­யி­டப்­பட்­டுள்ள 9 பக்­கங்கள் கொண்ட குறித்த அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் கண்­ட­றி­தல்கள்

  1. 1923 ஆம் ஆண்டு தங்­கம்மா ஷண்­மு­கப்­பிள்ளை என்ற பெண்­ம­ணியால் உரு­வாக்­கப்­பட்ட ஷண்­முகா இந்து மகளிர் கல்­லூரி 1961 ஆம் ஆண்டு இலங்கை அர­சாங்­கத்தால் உள்­வாங்­கப்­பட்­டது. அன்று முதல் இன்று வரை அக்­கல்­லூ­ரியில் கற்­பிக்கும் ஆசி­ரி­யைகள் இந்­துக்­களின் கலா­சார ஆடை­யான சேலையை அணிந்து கொண்டு வர வேண்டும் என்ற எழு­தப்­ப­டாத விதி­யி­ருப்­ப­தாக அதிபர் குறிப்­பி­டு­கிறார். பாட­சா­லையின் வர­லாறு எப்­படி இருப்­பினும் இது ஒரு தேசிய பாட­சா­லை­யாக இருப்­ப­தாலும், நிர்­வாக நிதியை அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து பெறு­வ­த­னாலும் இக்­கல்­லூரி தேசிய சட்ட வரை­ய­றைகள், ஒழுங்­கு­க­ளுக்கும் முக்­கி­ய­மாக அர­சியல் யாப்­பிற்கும் உட்­பட்­ட­தாகும்.
  2. அர­சியல் யாப்பு உறுப்­புரை 12(2) ஒரு பிரஜை சம­யத்தின் பெயரால் துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தப்­படக் கூடாது என்றும் உறுப்­புரை 10 ஒருவர் தாம் விரும்­பிய மதத்தைத் தெரிவு செய்யும் உரி­மை­யையும், உறுப்­புரை 14(1) (ஈ) ஒவ்­வொரு பிர­ஜைக்கும் தனி­யா­கவும், கூட்­டா­கவும், தனி­மை­யிலும் பொது இடத்­திலும் அவ­ரு­டைய மதத்தை பின்­பற்­று­வ­தற்கும், பிர­சாரம் செய்­வ­தற்­கு­மான உரி­மை­களை வழங்­கி­யி­ருக்­கி­றது.
  3. ஆசி­ரி­யைகள் முன்னர் சேலைதான் அணிந்து வந்­தார்கள் என்ற வாதம் ஏற்றுக் கொள்­ள­மு­டி­யாது. ஏனெனில் அர­சியல் யாப்பின் உறுப்­புரை 10 ஒரு மதத்தைப் பின்­பற்­று­வ­தற்கு ஒரு பிர­ஜைக்கு இருக்கும் சுதந்­தி­ரத்தில் கால எல்­லையை நிர்­ண­யிக்­க­வில்லை. அதனால் அவ்­வா­சி­ரி­யைகள் முன்னர் சேலை அணிந்து கொண்டு வந்­தார்கள் என்று கூறு­வது அவர்கள் இப்­பொ­ழுது அபாயா அணிந்து கொண்டு வர விரும்­பு­வதைத் தடுக்­காது.
  4. ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து கொண்டு வரு­வது அவர்­களை ஏனைய ஆசி­ரி­யை­களில் இருந்து பிரித்துக் காட்டும் மற்றும் மாண­வர்கள் அச்­ச­ம­டை­கி­றார்கள் போன்ற வாதங்கள் இனப்­பல்­வ­கைமை கொண்ட சமூ­கத்­திற்குப் பொருத்­த­மா­னவை அல்ல.
  5. உச்ச நீதி­மன்­றத்தின் தீர்ப்பு 688/12 ஐத் தொடர்ந்து கல்வி அமைச்­சினால் வெளி­யி­டப்­பட்ட சுற்று நிருப இலக்கம் 37/95ன் அடிப்­ப­டை­யிலும், மற்றும் உச்ச நீதி­மன்­றத்தின் FR 97/14 வழக்கின் தீர்ப்பின் அடிப்­ப­டை­யிலும் முஸ்­லிம்­களின் கலா­சார ஆடை என்­பது இலங்­கையின் கலா­சா­ரத்­திற்குள் உட்­பட்­டது என்­ப­தோடு அவ்­வா­றான ஆடை­களை அணியும் உரிமை முஸ்­லிம்­க­ளுக்கு இருக்­கி­றது.
  6. ஆசி­ரி­யைகள் 01.01.2019 ஆம் திகதி மீண்டும் ஷண்­முகா கல்­லூ­ரிக்குள் உள்­வாங்­கப்­பட்ட பின்­னரும் அவர்­க­ளுக்கு கற்­பிப்­ப­தற்­காக நேர­சூ­சிகள் வழங்­கப்­ப­ட­வில்லை என்­ப­தோடு விஷேட தேவை கொண்ட மாண­வர்­க­ளுக்­காகப் பயிற்சி பெற்ற ஆசி­ரியை ஒருவர் பாதிக்­கப்­பட்ட ஆசி­ரி­யை­களில் ஒரு­வ­ராக இருப்­ப­தனால் விஷேட தேவைகள் கொண்ட மாண­வர்­களின் கல்வி கற்­ப­தற்­கான உரிமை மீறப்­பட்­டுள்­ளது.
  7. ஆசி­ரி­யைகள் இட­மாற்­றப்­பட்­டமை ‘தேசிய இட­மாற்றக் கொள்­கைகள்’ இலக்கம் 2007/20க்கு முற்­றிலும் முர­ணா­னது. அவ்­வா­சி­ரி­யைகள் தான் தோன்­றித்­த­ன­மா­கவும் வலுக்­காட்­டா­ய­மா­கவும் பிர­தி­வா­தி­களால் இட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளனர்.
  8. அர­சியல் யாப்பின் சரத்து 10 மற்றும் 14 (ஈ) அத்­தோடு முஸ்லிம் பெண்­களின் ஆடை சம்­பந்­த­மான கல்வி அமைச்சின் சுற்று நிருபம் 37/95க்கு முர­ணாக திரு­கோ­ண­மலை ஷண்­முகா இந்துக் கல்­லூ­ரியும் அதன் நிர்­வா­கமும் ஒரு குறிப்­பிட்ட வகை­யான ஆடையை அணிந்துவரக் கூடாது என்றும் ஒரு குறிப்­பிட்ட வகை­யான ஆடை­யைத்தான் அணிந்து கொண்டு வர வேண்டும் என்றும் பணிக்க முடி­யாது.
  9. ஆசி­ரி­யை­களின் வலுக்­கட்­டா­ய­மான இட­மாற்­றமும், அவர்­களின் கலா­சார ஆடை­களை அணிந்து வரு­வ­தற்­கான தடையும் அர­சியல் யாப்பில் சரத்­துக்கள் 12(1),12(2) என்­ப­வற்றில் உறுதி செய்­யப்­பட்ட அடிப்­படை உரி­மை­களை மீறு­கின்­றன.

பரிந்­து­ரைகள்

  1. இலங்­கையின் அர­சியல் யாப்பில் உறுதி செய்­யப்­பட்­டுள்ள உறுப்­பு­ரைகள் 10,12(1),12(2),14(ஈ) இன் பிர­காரம் ஆசி­ரி­யை­களின் அடிப்­படை உரி­மை­களை முத­லா­வது பிர­தி­வா­தி­யா­கிய ஷண்­முகா இந்துக் கல்­லூ­ரியின் அதிபர் மீறி­யி­ருக்­கிறார். ஆசி­ரி­யைகள் அவர்­களின் கலா­சார ஆடை­யான அபா­யாவை அணிந்து கொண்டு மீண்டும் ஷண்­முகா இந்துக் கல்­லூ­ரிக்குள் உள்­வாங்­கப்­பட வேண்டும் என ஆணை­யகம் பரிந்­து­ரைக்­கி­றது.
  2. மூன்றாம் மற்றும் நான்காம் பிர­தி­வா­தி­க­ளான மாகாணக் கல்விப் பணிப்­பா­ளரும், கல்வி அமைச்சின் செய­லா­ளரும் முறை­யான இட­மாற்ற ஒழுங்­கு­களைப் பின்­பற்­றாமல் ஆசி­ரி­யை­களை இட­மாற்­றி­யதன் மூலம் அர­சியல் யாப்பின் உறுப்­பு­ரைகள் 12 (1),(2) இல் கூறப்­பட்­டுள்ள ஆசி­ரி­யை­களின் அடிப்­படை உரி­மை­களை மீறி­யுள்­ளனர்.
  3. மேற்­பார்­வை­யா­ளர்கள் என்ற தகு­தியில் இருக்கும் வலயக் கல்விப் பணிப்­பாளர், மாகாணக் கல்விப் பணிப்­பாளர், கல்வி அமைச்சின் செய­லாளர் ஆகியோர் முறைப்­பாட்­டா­ளர்­களின் முறைப்­பாட்­டுக்­கான தீர்­வு­களைக் கொடுக்­காமல் அர­சியல் யாப்பின் உறுப்­பு­ரைகள் 10, 14(ஈ) என்­ப­வற்றில் கூறப்­பட்­டுள்ள ஆசிரியைகளின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர்.
  4. பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் தங்களது கலாசார ஆடையான அபாயாவை அணிந்து கொண்டு எந்தவிதமான தடையோ துஷ்பிரயோகமோ இன்றி ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு செல்வதை வலயக் கல்விப் பணிப்பாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் உறுதி செய்ய வேண்டும்.
  5. வலயக் கல்விப் பணிப்பாளர் இனப் பல்வகைமை தொடர்பாக பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள், பெற்றோர் ஆகியோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்த வேண்டும் என்றும் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியைகளுக்கான சட்ட உதவிகள் மற்றும் ஆலோசனைகளை ‘குரல்கள் இயக்கம்’ வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.