- ரஸீன் ரஸ்மின்
இலங்கையைப் பொறுத்த வரையில் எல்லாவற்றையும் போராடியே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. இலங்கை ஆசியாவின் ஆச்சரியமான நாடல்லவா…
மலையக மக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வடக்கு, கிழக்கு மக்கள், தொழிற்சங்கங்கள் என எல்லா தரப்பினரும் தமது அடிப்படை உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வீதியில் இறங்கி போராடிக்கொண்டே இருக்கிறார்கள்.
அதுபோல கொழும்பிலிருந்து புத்தளத்திற்கு கொண்டு வரப்படவுள்ள குப்பைத் திட்டத்திற்கு எதிராக புத்தளத்தில் வாழும் மூவின மக்களும் கடந்த 150 நாட்களுக்கும் மேலாக கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதேவேளை, தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தும் போது அவர்களை மேசைக்கு அழைத்து அவர்கள் விடுக்கும் கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்து கொடுக்கின்ற இந்த அரசாங்கம் புத்தளம் மக்களின் நியாயமான இந்த கோரிக்கைகளை கண்டும் காணாதது போல இருப்பது கவலைக்குரியதே.
தலைநகர் கொழும்பை அழகுபடுத்தும் நோக்கை அடிப்படையாகக் கொண்டு அழகும், வளமும் கொண்ட புத்தளத்தை குப்பை மேடாக ஆக்குவதற்கு அரசாங்கம் மிகத் தீவிரமாக முயற்சித்து வருகின்றது.
கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளம் அருவாக்காடு சேராக்குளி எனும் பிரதேசத்தில் கொட்டுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க் கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக் காலத்திலேயே இந்த திண்மக்கழிவு அகற்றும் திட்டம் கொண்டுவரப்பட்டது.
எனினும், அப்போது கிடப்பில் இருந்த இந்த திட்டத்தை இப்போது நடைமுறைப்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருகிறது. பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு இந்த திட்டத்தை நடைமுறைப் படுத்தவுள்ளது.
கொழும்பு மீதொட்டமுல்ல பகுதியில் உள்ள குப்பைகளையும், கொழும்பு உள்ளிட்ட பிற இடங்களில் நாளாந்தம் சேகரிக்கப்படும் குப்பைகளையும் புத்தளம் அருவாக்காட்டில் ரயில் மூலம் கொண்டுவந்து கொட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வணாத்தவில்லு பிரதேச சபைக்கு உட்பட்ட அருவாக்காடு பிரதேசத்தில் சீமெந்து தொழிற்சாலைக்காக சுண்ணாம்புக்கல் எடுக்கப்படும் அந்த பாரிய குழிகளில் இந்த குப்பைகளை கொட்டி சுற்றுப்புறச் சூழலுக்கும், மக்களுக்கும் எந்தப் பாதிப்புக்களும் வராதபடி அதனை பாதுகாப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ௯றுகிறது.
எனினும், அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நம்பத் தயாரில்லை எனக் ௯றும் மக்கள் இந்த திட்டத்தை புத்தளத்தில் நடைமுறைப்படுத்தக் ௯டாது என்று அங்கு வாழும் மூவின மக்களும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.
அழகிய புத்தளத்தை அசுத்தப்படுத்தும் திட்டம்
கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளத்தில் கொட்டுவதனால் சுற்றுப்புறச் சூழல் பெரும் அச்சுறுத்தலாக காணப்படுவதுடன், அங்கு வாழும் மக்கள் பொருளாதார மற்றும் சுகாதார ரீதியிலும் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குப்பை கொட்டுவதற்காக அடையாளப் படுத்தப்பட்டுள்ள அருவாக்காட்டுக்குப் பக்கத்தில்தான் வில்பத்து தேசிய வனமும், கங்கேவாடி எனும் கிறிஸ்தவ மக்கள் அதிகமாக வாழும் மீனவர் கிராமமும், முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கலைத்தீவு கிராமமும் இருக்கிறது.
எனவே, இந்த குப்பை மேட்டின் துர்நாற்றத்தால் வில்பத்துவில் வாழுகின்ற விலங்குகள் குப்பை மேட்டை தேடி வெளியே வர ஆரம்பிக்கும். இதனால், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படும்.
அத்துடன், அங்கு வாழும் மக்கள் தாழ்வுப்பகுதியில் இருந்தே குடிநீரையும் பெற்றுக்கொள்கின்றனர். இவ்வாறு குப்பைகளை கொட்டுவதனால் அந்த மக்கள் அசுத்தமான நீரை அருந்தும் நிலை ஏற்படும்.
அதுமாத்திரமன்றி, குப்பை கொட்டுவதற்கு எதிர்பார்த்துள்ள அருவாக்காட்டிற்கு பக்கத்தில்தான் கலா ஓயா ஆறும் இருக்கிறது. இந்த ஆற்றிலிருந்து குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு குப்பைகளை கொட்டுவதால் கலா ஓயா ஆற்றின் நீரும் அசுத்தமடையலாம் எனவும் சொல்லப்படுகிறது.
அத்தோடு உப்பு வளம், கடல் வளம் நிறைந்த புத்தளத்தில் இந்த குப்பைத் திட்டம் நடைமுறைப்படுத்தப் படுமானால் உப்பு வளம் பாதிப்படையும் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
மாத்திரமன்றி, இதுவரை காலமும் சுத்தமான உப்பை உட்கொண்ட நாட்டு மக்கள் இந்தக் குப்பைத் திட்டத்தால் அசுத்த நீர் கலந்த உப்பையே உட்கொள்ளும் நிலை உருவாவதுடன் மீன்பிடித் தொழிலும் பாதிப்படையும் எனவும் சொல்லப்படுகிறது.
போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்கள்
இவ்வாறு நிகழ்கால மற்றும் எதிர்கால சந்ததியினரின் வளங்களையும் பொருளாதாரத்தையும் இல்லாமல் செய்யும் இந்த திட்டத்தை எதிர்த்து புத்தளத்தில் வாழும் மூவின மக்களும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
எவ்வாறான போராட்டங்களை நடத்தினாலும், கொஞ்சம் ௯ட விட்டுக்கொடுக்காமல் மக்களின் குரலை நசுக்கி அவர்களின் உணர்வுகளை மதிக்காமல் எப்படியும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியே தீருவோம் என்று திட்டத்திற்குப் பொறுப்பான அமைச்சர் சம்பிக்க ரணவக்க ௯றுவதையும் சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்வதையும் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறான திட்டங்கள் புத்தளத்திற்கு கொண்டுவரப்பட்டது இது முதல் தடவை அல்ல. புத்தளம் மக்களுக்கு அபிவிருத்தி திட்டங்களை வழங்குவதற்கு பதிலாக மக்களுக்கு பாதகங்களை விளைவிக்கக் கூடிய திட்டங்களையே ஆட்சியாளர்கள் பரிசாக கொடுத்திருக்கிறார்கள்.
இதற்கு முன்னர் சீமெந்து தொழிற்சாலையையும் அதற்குப் பின்னர் அனல் மின்சார நிலையத்தையும் அமைக்கும் போது ௯ட மக்கள் தமது எதிர்ப்பினை தெரிவித்தார்கள்.
ஆனால், இந்த திட்டங்களால் மக்களுக்கு நன்மையே கிடைக்கும், ஒருபோதும் தீங்கு வராது என்று பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அந்த திட்டங்களை நடைமுறைப் படுத்தியுள்ளனர். அவ்வாறான திட்டங்களால் புத்தளம் மக்கள் இன்றுவரைக்கும் பாதிப்புக்களை அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
அதுபோலவே, இந்த குப்பைத் திட்ட விவகாரத்திலும் அரசாங்கத்தின் எந்த வாக்குறுதிகளையும் மக்கள் நம்புவதற்கு தயாரில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
இந்த குப்பை திட்டத்திற்கு எதிராக க்ளீன் புத்தளம் அமைப்பினரோடு இணைந்து புத்தளத்தில் வாழும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் வயோதிபர்கள் என்று மூவின மக்களும் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.
இந்த போராட்டத்திற்கு கட்சி வேறுபாடுகள் இன்றி, அரசியல் கட்சிகளும் அதன் உறுப்பினர்களும் தமது முழுமையான ஆதரவினை வழங்கி வருகின்றார்கள்.
அரசியல்வாதிகளுக்குப் பொறுப்பு
இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்திய மற்றும் தலைமை தாங்கி வழிநடத்திய அரசியல் பிரமுகர்கள், சமயத் தலைவர்கள் , சமூக ஆர்வலர்கள் எனப் பலர் கைது செய்யப்பட்டார்கள். இவ்வாறான கைதுகள் மூலம் மக்களை உளரீதியாக நலிவடையச் செய்து, அச்சுறுத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் கொழும்பில் இருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும், சமயத் தலைவர்களின் பூரண வழிகாட்டலோடு எதற்கும் அஞ்சாமல், மனம் தளராமல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, குறித்த திட்டம் தொடர்பில் அரசியல் கட்சிகள் அவ்வப்போது அறிக்கைகளை விட்டாலும், அது மக்களுக்கு ஒருவித மன ஆறுதலைக் கொடுக்கின்ற போதிலும் அது நிரந்தர தீர்வாக இருக்காது என்பது மக்களுக்கும் புரியாமல் இல்லை.
அரசியல் கட்சிகள் இந்த விடயத்தை அரசியலாக பார்க்காமல் ஒரு சமூகத்தின் உரிமையாகப் பார்க்க வேண்டும். இது ஒரு சமூகத்திற்கு மாத்திரம் சம்பந்தப்பட்ட பிரச்சினையும் அல்ல. இந்த குப்பைத் திட்டத்தின் பாதிப்புக்கள் இன, மத, பிரதேசம் என்று பார்க்காமல் எல்லோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தவே போகிறது.
எனவே, இந்த விடயத்தில் சகல கட்சிகளையும் சார்ந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என எல்லோரும் இணைந்து செயற்பட வேண்டிய கட்டாயத் தேவை இப்போது ஏற்பட்டுள்ளது.
குறித்த திட்டம் தொடர்பாக களத்தில் மக்களையும், அறைக்குள் ஆட்சியாளர்களையும் திருப்திப் படுத்தி இரட்டை வேடம் போடுவதை தவிர்க்க வேண்டும்.
மக்கள் ஒருபுறம் தமது எதிர்ப்புக்களில் ஈடுபட்டாலும், தமது கட்சி அல்லது தனிப்பட்ட நிலைப்பாட்டை கடுமையான அழுத்தங்கள் மூலம் பிரயோகிக்க வேண்டும்.
அமைச்சர்களின் பெயர் பட்டியலை தயாரிக்கின்ற போது தமக்கு இத்தனை அமைச்சு, பிரதி அமைச்சு என்று பேரம் பேசுகின்ற சிறுபான்மை கட்சித் தலைமைகள் மற்றும் ஏனைய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் இந்த குப்பை விடயத்தில் அரசுக்கு அழுத்தங்களை வழங்க முடியாது.
அரசியல் மாயைக்குள் மயங்கிக் கிடந்த புத்தளத்து மக்கள் இப்போதுதான் விழிப்படைந்திருக்கிறார்கள் .
அரசின் புதிய யுக்தி
கொழும்பில் இருந்து புத்தளத்திற்கு குப்பைகளைக் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு புத்தளம் மக்களின் எதிர்ப்பு வலுக்கின்ற இந்நிலையில், திட்டத்திற்குப் பொறுப்பான பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு புதிய யுக்தியொன்றை கையாண்டிருக்கிறது.
அதாவது, கொழும்பு குப்பைகளை கொட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள புத்தளம் அருவாக்காடு சேராக்குளி பகுதியில் தமது உள்ளூராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அடுத்த மாதம் 15ஆம் திகதி முதல் கொட்டுமாறு புத்தளம் நகர சபை, புத்தளம் பிரதேச சபை, கற்பிட்டி பிரதேச சபை, சிலாபம் நகர சபை, வணாத்தவில்லு, கருவலகஸ்வெவ ஆகிய உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கு பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளார்.
இங்கு அவதானிக்க வேண்டிய விடயம் என்னவெனில், கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் திட்டத்திற்கு இந்த மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் போது அதனை நடைமுறைப்படுத்த பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிவரும் என்பதால்தான், முதலில் புத்தளம் மாவட்டத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
முதலில் நீங்கள் கொட்டுங்கள் பிறகு நாங்கள் வந்து கொட்டுகிறோம் என்பதே அவர்களுடைய மறைமுகமான திட்டமாகும்.
எனவே, மேற்சொன்ன அனைத்து உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களும் உறுப்பினர்களும் இந்த மறைமுகத் திட்டத்திற்கு ஒருபோதும் துணை போகக் ௯டாது என்பதே மக்களின் வேண்டுகோளாகும்.
இந்த விடயத்தில் மக்களின் எதிர்ப்புக்கள் அதிகமாக இருப்பதால் இதனை நடைமுறைப்படுத்த முடியாது என்ற காரணங்களைக் காட்டி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஏனெனில், இந்த திட்டத்திற்கு எதிராக மேற்குறித்த உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தமையையும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று ஊடகங்களில் அறிக்கை விட்டதும் குறிப்பிடத்தக்கது.
கறுப்பு தினம் அனுஷ்டிப்பு
புத்தளம் அருவாக்காட்டில் குப்பை கொட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த புதன்கிழமை (13) முதல் இன்று வெள்ளிக்கிழமை வரையான மூன்று நாட்களை புத்தளத்தின் கறுப்பு நாட்களாக பிரகடனப்படுத்துவதாக புத்தளம் மாவட்ட சர்வ மத செயற்குழு அறிவித்துள்ளது.
புத்தளம் பெளத்த மத்திய நிலையம் , இந்து மகா சபை , கிறிஸ்தவ சபை, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் கிளை , புத்தளம் பெரிய பள்ளி ஆகியன இணைந்தே புதன்கிழமை (13), வியாழக்கிழமை (14), மற்றும் வெள்ளிக்கிழமை ( 15 ) ஆகிய மூன்று நாட்களை கறுப்பு தினங்களாக பிரகடனப்படுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில் புதன்கிழமை புத்தளம், கரைத்தீவு, கற்பிட்டி மற்றும் முந்தல் ஆகிய பிரதேசங்களில் வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும், வாகனங்களிலும் கறுப்புக் கொடிகள் பறக்கவிட்டு மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
அத்துடன் பாலர் பாடசாலை, அரச, தனியார் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள், வங்கி ஊழியர்கள் ஆகியோர் கறுப்பு பட்டி அணிந்து பாடசாலைகளுக்கும், அரச அலுவலகங்களுக்கும் சென்றனர்.
அத்தோடு, நேற்று வியாழக்கிழமை நோன்பு நோற்றதுடன், பள்ளிவாசல்கள், அரபு மத்ரசாக்கள் என்பனவற்றில் விஷேட துஆ பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
இதேவேளை, இன்று வெள்ளிக்கிழமை புத்தளத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதுடன், ஜும்ஆத் தொழுகையின் பின்னர் எழுச்சிப் பேரணி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு மக்கள் தமது வாழ்வுரிமைக்காக இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் மாதக் கணக்கில் வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
சட்ட நடவடிக்கைக்கு முஸ்தீபு
புத்தளம் அருவாக்காடு சேராக்குளி பகுதியில் இவ்வாறு குப்பைகளை கொட்டும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தக் கோரி மூவின மக்களும் ஒருபுறம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மறுபுறம் திட்டத்தை நிறுத்துமாறு உத்தரவிடக் கோரி வழக்குத் தாக்கல் செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மக்களுக்கும், சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் குறித்த குப்பைத் திட்டத்தை உடனடியாக நிறுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் ஒன்று செய்யப்படவுள்ளது.
ஜனாதிபதி தலையிட வேண்டும்
இலங்கையில் இருந்து போதையை முற்றாக ஒழிப்பதற்கும், சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பதற்கும் ஜனாதிபதி மிகத் தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.
எனவே, இந்தக் குப்பைத் திட்டத்தால் மனிதர்களுக்கு மாத்திரமல்ல சூழலுக்கும் பெரும் சவாலாக இருக்கும் இந்த திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக தலையிட வேண்டும் என்பதே புத்தளத்தில் வாழும் மூவின மக்களினதும் கோரிக்கையாகும்.
அத்துடன், குப்பைத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சரவையையோ அல்லது அதிகாரிகளையோ சந்திப்பதற்கு தாங்கள் தயாரில்லை என புத்தளத்தில் உள்ள சர்வ மதக் குழுவினர்களும் அறிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதாக இருந்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மாத்திரமே பேசுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் உயர்நீதிமன்றத்தின் மீதுமே முழு புத்தளம் மக்களும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
எனவே, குப்பைகளை கொட்டுவதற்கு தகுந்த பல இடங்கள் காணப்படுகின்ற போதிலும், பலவந்தமாக புத்தளத்தில்தான் கொட்ட வேண்டும் என்ற அரசாங்கத்தின் பிடிவாதக் கொள்கைகளை ஒருபுறம் வைத்து விட்டு புத்தளம் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
-Vidivelli