அன்பு கொள்ளுதல், நேசம் பாராட்டுதல் போன்றவையெல்லாம் இவ்வுலகில் இரண்டு விதமான காரணங்களுக்காகவே நடைபெறுகின்றன, ஒன்று தன்னைப்படைத்த ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்வுக்காக. மற்றது உலக இலாபங்களுக்காக என்று எம்மால் வகைப்படுத்த முடியும், இதில் முதலாவது வகையே இஸ்லாத்தில் ஊக்குவிக்கப்பட்ட வணக்க வழிபாடாக கருதப்படுகிறது, அதுவே அல்லாஹ்வின் அன்பையும் அருளையும், நாளை மறுமை நாளில் அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்த சந்தர்ப்பத்தில் அவனது அர்ஷின் நிழலைப் பெற்றுத் தரும் ஓர் உயர்ந்த அமலாகவும் கருதப்படுகிறது.
இரண்டாவது வகையில் அமைந்த நட்பு, அன்பு, இவையெல்லாம் ஏதோ ஓர் உலக இலாபத்தை மையப்படுத்தியதாகவோ ஏமாற்றம், நயவஞ்சகத்தனம் போன்றவற்றை தன்னகத்தே கொண்டதாகவோ இருக்கும், இதில் இஸ்லாம் தடை செய்த அந்நிய ஆண், பெண் நட்பு, தகாத உறவு, திருமணத்துக்கு முந்தய காதல், போன்றவையெல்லாம் உள்ளடங்கும், இவை இஸ்லாம் தடைசெய்திருக்கின்ற உறவு முறைகளாகும்.
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்; உற்ற நேசர்களெல்லாம் அன்றைய (மறுமை) நாளில் ஒருவர் மற்றவருக்கு விரோதிகளாயிருப்பர், இறையச்சமுள்ளவர்களைத் தவிர (அல்குர்ஆன் – 43:67)
‘எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவர்கள் இருவரல்லாத வேறு அனைத்தை விடவும் அதிக நேசத்திற்குரியவர்களாக இருப்பது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அறிவிப்பவர் : அனஸ் (ரழி),
நூல் : புஹாரி 16
இறையச்சத்துடன் அல்லாஹ்வுக்காக அன்பு கொள்ளுதல் மாத்திரமே மறுமை விமோசனத்துக்கு சிறந்த வழியாகும் அதுவே ஈமானின் சுவையையும் சுவைக்கச் செய்யும் சிறந்த பண்பாகும். இறையச்சமின்றி உலக இலாபங்களுக்காக ஒருவர் மற்றொருவரை நேசித்தால் மறுமை நாளில் ஒருவர் மற்றவருக்கு விரோதிகளாவே இருப்பார்கள் என்பதனையே இறைச் செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.
ஆன்மாக்கள் எல்லாம் குழுக்களாக பிரிக்கப்பட்ட படைகளாகும். அவற்றில் அறிமுகமாகிக் கொள்பவை இணைந்து கொள்கின்றன. அறிமுகமாகிக் கொள்ளாதவை வேறுபட்டு விடுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) அவர்கள், நூல்: புஹாரி 3088)
நபி (ஸல்) அவர்களின் சபையில் நான் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் (எங்களை) கடந்து சென்றார். எங்களுடன் இருந்தவர்களில் ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! நான் இந்த மனிதரை நேசிக்கிறேன் என்றார். அதனை அவருக்கு தெரிவித்துவிட்டாயா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் இல்லை என்றார். எழுந்து சென்று அவரிடம் தெரிவித்துவிடு என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். உடனே அவர் எழுந்து சென்று, நான் உம்மை அல்லாஹ்வுக்காக நேசிக்கிறேன் என்றார். அதற்கு அந்த மனிதர், யாருக்காக நீ என்னை நேசித்தாயோ அந்த அல்லாஹ் உம்மை நேசிப்பானாக! என்று கூறினார்.
அறிவிப்பவர்: அனஸ் (ரழி) அவர்கள்,
நூல்: முஸ்னத் அஹ்மத் 11980
நட்புக்கொள்ளவும் நேசம் பாராட்டவும் பொருத்தமான நல்ல மனிதர்களைத் தேடிச் சென்று அவர்களோடு அறிமுகமாகி அவர்களிடம் நட்புக் கொள்வதனைப் பற்றி தெரிவித்துக் கொள்வது நபிகளாரின் மிகச்சிறந்த வழிமுறையாகும்.
ஒரு மனிதர் இன்னொரு ஊரிலிருந்த தன் சகோதரரை சந்திக்கச் சென்றார். அவர் செல்லும் வழியில் அல்லாஹ் ஒரு மலக்கை எதிர்பார்த்திருக்கும் படி செய்தான். அம்மனிதர் அந்த மலக்கு அருகில் வந்த போது, அம்மலக்கு அவரிடம் எங்கு செல்கிறீர்? என்றுகேட்டார். அதற்கவர் இந்த ஊரிலுள்ள என் சகோதரரை நாடிச் செல்கிறேன் என்றார். அப்போதுஅந்த மலக்கு அந்த சகோதரர் உமக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டி இருக்கிறதா? (அந்த உலக நோக்கத்திற்காகவா அவரிடம் செல்கிறாய்) என்று கேட்டார். அதற்கு அம்மனிதர், அல்லாஹ்வுக்காக அவரை நேசிக்கிறேன் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை என்றார். அப்போது அந்த மலக்கு, அல்லாஹ்வுக்காக நீர் அவரை நேசித்தது போல் அல்லாஹ் உன்னை நேசிக்கிறான் என்பதை உனக்கு தெரிவிக்க வந்த அல்லாஹ்வின் தூதர்தான் நான் என்று கூறினார்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) அவர்கள்,
நூல்: முஸ்லிம் 4656)
அல்லாஹ்வுக்காக அன்பு கொள்பவர்களிடம் உலக இலாபங்களை அடைந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணம் ஒரு போதும் வந்துவிடக்கூடாது, அவர்கள் ஒருவருக்கொருவர் நன்மையை ஏவி, தீமையை தடுப்பவர்களாகவும், நன்மைக்கும் இறையச்சத்துக்கும் உதவுபவர்களாகவும் பாவத்துக்கும் அநீதிக்கும் வரம்புமீறுதலுக்கும் தடையாகவும் அல்லாஹ், மறுமையை ஞாபகப்படுத்தக் கூடியவர்களாகவும் நரகத்தை விட்டும் பாதுகாத்து, சுவனத்தை நோக்கி அழைத்துச் செல்பவர்களாகவும் எல்லா நேரங்களிலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இறை திருப்தியை மாத்திரம் இலக்காகக் கொண்டு நேசம் பாராட்டக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் .
நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரையும் கொல்லனின் உலையையும் போன்றதாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லது உமது ஆடையையோ எரித்துவிடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக்கொள்வீர்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரழி)
நூல்: புஹாரி (2101)
ஒரு நண்பன் தனது நண்பனின் வழிமுறையில் இருப்பான். எனவே, உங்களில் ஒருவர் தான் நட்புக் கொள்கின்றவரை அவதானிக்கட்டும்
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி)
நூல்கள் : அபூதாவுத் (4193) திர்மிதி (2300)
நல்ல நண்பர்களால் ஒரு மனிதன் சுவனத்தை நோக்கி அழைத்துச் செல்லப்படுகின்ற அதே வேளை தீய, மோசமான நண்பர்களால் அவன் சீரழிந்து வழிகெட்டுப் போகின்ற துரதிஷ்டவச நிலையும் ஏற்பட்டு விடுகின்றது, எனவே நாம் யாரை நேசிக்கின்றோம் யாரோடு நெருங்கிச் செல்கின்றோம், நாம் மரணித்தால் மறுமையில் நாம் யாரோடு இருக்க ஆசை வைக்கின்றோம் போன்ற விடயங்களில் நாம் அதிக கரிசனை காட்ட வேண்டும்.
அல்லாஹ்வின் தூதரே ஒரு மனிதர் (நன்) மக்களை நேசிக்கிறார். ஆனால் (செயல்பாட்டிலும் சிறப்பிலும்) அவர்களை அவரால் எட்ட முடியவில்லை. (இவரைக் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?) என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் மனிதன் யார் மீது அன்பு வைத்துள்ளானோ அவர்களுடன் தான் இருப்பான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூசா (ரழி)
நூல்: புஹாரி (6170)
சினிமா நட்சித்திரங்கள்,விளையாட்டு வீரர்கள், சாதனையாளர்கள் மீது இயல்பாகவே எமது சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு வகையான அன்பும் நேசமும் ஏற்படுகின்றன. அதன் விளைவாக அவர்களைப் போன்றே நடை, உடை, பாவனை, சிகை அலங்காரங்களெல்லாம் மாறிவிடுகின்றன. இந்த நேசத்தை விடுத்து நமது முன்மாதிரிகளான உத்தம நபிகளார் அவர்களது தோழர்கள், இஸ்லாத்தை எமக்கு போதித்த இமாம்கள், முன்னோர்கள், நல்லோர்களின் அன்பை எம்மிலும் எமது சிறார்கள், இளைஞர்களின் இதயங்களிலும் உண்டு பண்ண நாம் முயற்சிக்க வேண்டும்.
அல்லாஹ்வுக்காக நட்புக் கொள்பவர்கள், அவனுக்காக மாத்திரம் நேசம் கொள்பவர்களுக்கு கிடைக்கின்ற சுபசோபனங்களும் வெகுமதிகளும் விலை மதிக்க முடியாதவை, அதனை உலகின் அற்ப சுகபோகங்களுக்கும் இலாபங்களுக்கும் விற்று விடக்கூடாது.
நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் எனக்காக நேசம் வைத்துக் கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இந்நாளில் நான் அவர்களுக்கு எனது நிழலைத் தருகிறேன் என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
நூல்: முஸ்லிம் (4655)
அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் நபிமார்களும் அல்ல. இறைவனின் பாதையில் உயிர் நீத்தவர்களும் அல்ல. இவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் அந்தஸ்த்தைப் பார்த்து நபிமார்களும் தியாகிகளும் பொறாமைப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அவர்கள் யார் என எங்களுக்குக் கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் தங்களுக்கிடையே இரத்த உறவிற்காகவோ, கொடுத்து வாங்கிக் கொள்ளும் செல்வங்களுக்காகவோ அல்லாமல் அல்லாஹ்வுக்காக ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டவர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக அவர்களுடைய முகங்கள் ஒளியாக இருக்கும். அவர்கள் ஒளியின் மீது இருப்பார்கள். மக்கள் அஞ்சும் போது அவர்கள் அஞ்சமாட்டார்கள். மக்கள் கவலைப்படும் போது அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்று கூறி விட்டு அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்ற வசனத்தை படித்துக்காட்டினார்கள்.
அறிவிப்பவர்: உமர் பின் ஹத்தாப் (ரழி)
நூல்: அபூதாவூத் (3060)
நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ் தன்னுடைய (அர்ஷின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தன்னுடைய நிழலில் ஏழு பேருக்கு நிழல் கொடுப்பான்.
1.நீதிமிக்க ஆட்சியாளர்.
2.இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.
3.தனிமையில் அல்லாஹ்வை நினைத்து அவனுடைய அச்சத்தில் கண்ணீர் சிந்திய மனிதன்.
4.பள்ளிவாசலுடன் எப்போதும் தொடர்பு வைத்துக் கொள்ளும் இதயமுடையவர்.
5.அல்லாஹ்வுக்காக நட்புக் கொண்ட இருவர்.
6.அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போது ‘நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்’ என்று கூறியவர்.
7.தம் இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம் கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரழி) நூல்
புஹாரி 6806)
தகாத உறவுமுறைகளுக்கு நாகரிகமான பெயர்களை சூட்டிக்கொள்வதனால் அவை ஒரு போதும் அனுமதிக்கப்பட்டதாக ஆகிவிடப்போவதில்லை, அவை எம்மை மானக்கேடான விடயங்களை நோக்கி நகர்த்தி இம்மையிலும் மறுமையிலும் எம்மை இழிநிலைக்கு அழைத்துச் சென்று விடும், அந்த விடயத்தில் மிகக்கவனமாக நாம் செயல்பட வேண்டும், வஹியின் வழிகாட்டலுக்குள் நின்று நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அது போன்றே உலகியல் நோக்கங்களுக்காக நட்புக்கொள்வதனையும் நேசம் பாராட்டுவதனையும் விட்டு விட்டு இறைவனின் பொருத்தத்துக்காகவும் அவனது உயர்ந்த சன்மானங்களுக்காகவும் அன்பு கொண்டு, நேசம் பாராட்டக்கூடிய மனிதர்களாக வாழ முயற்சிப்போம்.
-Vidivelli