இன ரீதியான முரண்பாடுகளை உருவாக்கி அதனூடாக எமது செயற்பாடுகளை முடக்குவதற்கு முனைகின்றனர்
கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு
சிலர் இன ரீதியான முரண்பாடுகளை உருவாக்கி அதனூடாக எமது செயற்பாடுகளை முடக்குவதற்கு முனைகின்றனர். எனினும் நான் கிழக்கு மாகாண ஆளுநர் என்ற பதவியை அரசியலுக்கு பயன்படுத்தப்போவதில்லை என கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி கல்லூரியின் அதிபர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தெடர்ந்து உரையாற்றுகையில், நான் பாராளுமன்றத்தில் ஒரு வெறும் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்து கொண்டு காலத்தை ஓட்டுவதை விடுத்து கிழக்கு மாகாணத்திற்கு தலைமை தாங்கி மாகாணத்தின் வறுமையை நீக்கி பொருளாதாரத்தை கட்டியெழுப்பி ஒரு வளர்ச்சியடைந்த மாகாணமாக மாற்றவேண்டும் என்பதற்காகவே இப்பதவியை பொறுப்பேற்றிருக்கின்றேன். எனது பதவியை எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதி இராஜினாமாச் செய்துவிடுவேன். ஆதலால் பதவியிலிருக்கும் எனக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது. என்னுடைய ஒரு நாளும் வீணாகப் போய்விடக்கூடாது என மிக அவதானமாக செயற்படுகின்றேன்.
சிலர் இன ரீதியான முரண்பாடுகளை உருவாக்கி அதனூடாக எமது செயற்பாடுகளை முடக்குவதற்கு முனைகின்றனர். தவறான செய்திகளை வெளியிடுகின்றனர். கடந்த வாரம் காத்தான்குடி மத்திய கல்லூரியினுடைய விளையாட்டு விழாவுக்கு நான் வருகை தந்தபோது மாணவர் படையணியினரின் கடேட் பிரிவினர் எமக்கு இராணுவ மரியாதை செலுத்தினர். அதனை பிரபல தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் நான் உருவாக்கிய ஜிஹாத் படைப்பிரிவே ஆயுதம்தாங்கி எனக்கு இராணுவ மரியாதை தந்ததாக பெரிதுபடுத்தி வெளியிடுகின்றனர். எமது விடயங்களை விமர்சிக்கின்ற பூரண உரிமை உங்களுக்கு இருக்கின்றது. நான் ஏதாவது தவறுகள் செய்தால் இனரீதியான முரண்பாடுகளை ஏற்படுத்தும் தீர்மானங்களை நான் எடுத்தால் எனது ஆளுநர் என்ற செயற்பாட்டில் குறைகள் இருந்தால் எந்த சந்தர்ப்பத்திலும் என்னைப் பற்றி எழுதமுடியும். என்னை சந்திக்கமுடியும். அவற்றுக்கு தீர்வு வழங்க நான் ஆயத்தமாக இருக்கின்றேன். ஏன் அந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என்பதை சொல்வதற்கு நான் ஆயத்தமாக இருக்கின்றேன். இதைவிடுத்து உண்மைக்கு மாறாக பொய்யாக ஜிஹாத் படை பரிவு என்று இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்துவதில் இருந்து விடுபட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.இவ்வாறு இன ரீதியாக முரண்பாடுகளை ஏற்படுத்துவதன் மூலம் என்ன இலாபத்தை அடையப் போகின்றீர்கள் என நான் கேட்கின்றேன். கிழக்கு மாகாணம் பல பிரச்சினைகளைக் கொண்டுள்ளது. நான் ஆளுநர் பதவியை பொறுப்பேற்கும்போது இங்கு பிரச்சினை இருக்கின்றது, அதற்கு நான் முகம்கொடுக்கவேண்டும் என்பதையெல்லாம் அறிந்துதான் நான் ஜனாதிபதியுடன் பேசி இப்பதவியை பொறுப்பேற்றேன் என்றார்.
-Vidivelli