அரசாங்க பரீட்சைகளுக்கு முஸ்லிம் பெண்கள் தோற்றும்போது, அவர்கள் அணியும் ஆடைகள் தொடர்பான சர்ச்சை தொடர்ந்து வருவதை நாம் அறிவோம். குறிப்பாக பரீட்சை எழுதும் மாணவிகள் தமது முகம் மற்றும் காது என்பவற்றை காண்பிக்க வேண்டியது பரீட்சைகள் திணைக்களத்தின் சுற்றுநிருபத்தின் படி கட்டாயமானதாகும். எனினும் சில பிரதேசங்களில் முஸ்லிம் மாணவிகள் முகத்தை முழுமையாக மூடிய வண்ணம் பரீட்சைகளுக்குத் தோற்றுகின்றனர். மேலும் சிலர் முகத்தை திறந்திருப்பினும் காது பகுதியை காண்பிக்க மறுக்கின்றனர். அந்த வகையில் இந்த செயற்பாடுகள் பரீட்சை மேற்பார்வையாளர்களால் கேள்விக்குட்படுத்தப்படுகின்றன. இது பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் மாணவிகளைப் பாதிக்கச் செய்வது மாத்திரமன்றி சில சமயங்களில் அவர்களது பெறுபேறுகள் கூட வெளியிடப்படாது இடைநிறுத்தப்படுகின்றன. சமீபத்தில் முகத்தை மூடிக் கொண்டு தேசிய பரீட்சைகளுக்குத் தோற்றிய பல மாணவிகளின் பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படாது இடைநிறுத்தப்பட்டுள்ளமையும் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
இந் நிலையில்தான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைமையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில், சிவில் சமூக அமைப்புகள் என்பன இணைந்து கலந்துரையாடலை நடத்தி அரசாங்க பரீட்சைகளுக்குத் தோற்றும் முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகளுக்கான உடை எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் பொதுத் தீர்மானம் ஒன்றை எட்டவுள்ளன. இந்த முயற்சி வரவேற்கத்தக்கதும் காலத்தின் தேவை கருதியதுமாகும்.
இது தொடர்பான கூட்டமொன்று நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது. இதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகளும் கல்விமான்களும் கலந்து கொண்டு தமது அபிப்பிராயங்களை முன்வைக்கவுள்ளனர். இதன்போது பரீட்சை எழுதும் முஸ்லிம் மாணவிகள் இஸ்லாமிய கலாசாரத்துக்கு உட்பட்டு, அதேநேரம் பரீட்சைகள் திணைக்களத்தின் சுற்று நிருபத்தை மீறாதவாறு எவ்வாறு ஆடை அணியவேண்டும் என்பது தொடர்பில் தீர்மானம் ஒன்று எட்டப்படவுள்ளது.
பரீட்சைகள் நடைபெறுகின்ற காலங்களில் முஸ்லிம் மாணவிகள் தொடர்பில் இவ்வாறான சர்ச்சைகள் எழுவது இன்று தொடர்கதையாகிவிட்டது. பல இடங்களில் முழுக்க முழுக்க முகத்தை மூடியவாறே மாணவிகள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். இது அவர்கள் பரீட்சைகளில் மோசடிகளில் ஈடுபடவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அவ்வாறான சம்பவங்கள் ஏலவே நடைபெற்றுமுள்ளன.
இஸ்லாமிய வரையறைகளைப் பேணுகின்றோம் என்ற பெயரில் சிலர் இவ்வாறான துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவதானது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் இஸ்லாத்திற்குமே அவப் பெயரைத் தேடிக் கொடுக்கிறது. பலர் காதுகளில் தொடர்பாடல் கருவிகளைப் பொருத்தி அதனை ஹிஜாபினுள் மறைத்து பரீட்சைகளுக்குத் தோற்றிய சம்பவங்களும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன. சிலர் மோசடிகளில் ஈடுபடாது முகத்தை மூடிய வண்ணம் நேர்மையான முறையில் பரீட்சைக்குத் தோற்றினாலும் கூட, அவர்களது பெறுபேறுகள் இடைநிறுத்தப்படுகின்றன. பல வருடங்கள் முயற்சி செய்து படித்து பரீட்சை எழுதிவிட்ட, ஈற்றில் தமது பிடிவாதம் காரணமாக பெறுபேறுகளின்றி வாழ்வைத் தொலைக்க வேண்டிய துரதிஷ்டநிலை ஏற்படுகிறது.
எனவேதான் மார்க்கத்தின் பெயரால் இவ்வாறான சலுகைகளைப் பெறவோ அல்லது மோசடிகளில் ஈடுபடவோ நாம் அனுமதிக்க முடியாது. அந்த வகையில் இதுவிடயத்தில் இஸ்லாமிய வரையறைகளைப் பேணுகின்ற அதேநேரம், பரீட்சைகள் திணைக்களத்தின் சுற்றுநிருபத்தைப் பாதிக்காத வகையிலான தீர்மானம் எட்டப்பட்டு அதனை சகல முஸ்லிம் வகையிலான தீர்மானம் எட்டப்பட்டு அதனை சகல முஸ்லிம் பாடசாலைகள் மூலமாகவும் மாணவ மாணவிகளுக்கு அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
முஸ்லிம் தனியார் சட்டம் போன்று இதில் கருத்து வேறுபாடுபட்டு காலத்தை இழுத்தடிக்கக் கூடாது. உடனடியாகவே பொது நிலைப்பாடு எட்டப்பட வேண்டும். அதனை உடன் நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli