இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் கலப்படங்கள் இல்லை எனவும் பாதுகாப்பானதும் பொதுமக்கள் நுகர்வுக்கு அவை ஏற்றது எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை கட்டளைகள் நிறுவனம், மாதிரிகளை கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தினூடாக ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்து பால்மாவில் வேறு வகையான கொழுப்பு மற்றும் எண்ணெய் எதுவும் கலப்படம் செய்யப் படவில்லை என உறுதியளித்துள்ளது என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவுடன் பன்றிக் கொழுப்பு மற்றும் மரக்கறி எண்ணெய் கலக்கப்படுவதாக கடந்த வாரம் பாராளுமன்ற அமர்வுகளின் போது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அது பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் சுகாதார அமைச்சு இந்த அறிவிப்பினை விடுத்துள்ளது.
அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவுச் சட்டத்தின் பிரகாரம் இறக்குமதி செய்யப்படும் உணவு சம்பந்தமான நடவடிக்கைகளுக்கான உணவு அதிகாரியாக சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். இறக்குமதி செய்யப்படும் உணவுகளின் தரம், குணம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமாக பரிசீலனை செய்து அவை சர்வதேச தரத்திற்கும் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் தரத்திற்கும் அமைவாக உள்ளனவா என உறுதிப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சின் இறக்குமதி உணவு பரிசோதனைப் பிரிவின் உணவு மற்றும் மருந்து பரிசோதகர், கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், கமநல திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் தர நிர்ணய உத்தியோகத்தர்கள் முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் தரத்தினை பரிசோதிக்கும் வேலைத்திட்டத்தில் பால்மாவும் கட்டாயமாக உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் அது :731:2018 ஆம் இலக்க தரநிர்ணயத்திற்கு உள்ளனவா எனவும் உறுதிப்படுத்தப்படுகின்றது. கப்பலிலிருந்து இறக்குவதற்கு முன்பதான தர மதிப்பீடு பால்மா கப்பலில் கொண்டுவரும் போது அதற்கான பகுப்பாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். இவ்வறிக்கை சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட முறைப்படி பகுப்பாய்வு செய்யும் ஆய்வு கூடத்தினால் வழங்கப்பட்டுள்ளது என பால்மா ஏற்றுமதி செய்யும் நாடு உறுதியளிக்கப்பட்டிருத்தலும் வேண்டும்.
பொதுவான தர நிர்ணய பகுப்பாய்வு அறிக்கை நுண்ணுயிர் பகுப்பாய்வு அறிக்கை மற்றும் பால்மாவுடன் வேறு ஏதேனும் கொழுப்பு அல்லது எண்ணெய் கலக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் உயர் தரத்திற்கு பால் கொழுப்பு உள்ளதா என அறிவதற்கும் பகுப்பாய்வு அறிக்கை என்பன மிக முக்கியமானதாகும். இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பால் தொகுதிகளும் மனித நுகர்வுக்கு உகந்தது என்ற சுகாதாரச் சான்றிதழ் ஏற்றுமதி செய்யும் நாட்டின் அரசாங்கத்தின் உணவு அதிகாரியால் வழங்கப்பட வேண்டும். அத்துடன் இச் சுகாதாரச் சான்றிதழில் குறித்த பால்மா தொகுதியில் ‘பால் கொழுப்பு தவிர்ந்த வேறு எந்த வகையான கொழுப்போ எண்ணெய்யோ அடங்கவில்லை’ என்றும் உறுதிப்படுத்தப்பட்டிருத்தலும் வேண்டும்.
உலக வணிக நிறுவன உடன்படிக்கையின் பிரகாரம் ஏற்றுமதி செய்யும் நாட்டின் அரசாங்கத்தினால் வழங்கப்படும் சுகாதார சான்றிதழை இறக்குமதி செய்யும் நாடு ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் இறக்குமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் இறக்குமதி உணவுப்பரிசோதனை பிரிவிலுள்ள உணவு மற்றும் மருந்து பரிசோதகர்களுக்கு பால்மா இறக்குமதி சம்பந்தமான ஆவணங்கள் சுங்க அதிகாரிகளினால் சமர்ப்பிக்கப்பட்டதும் உரிய ஆவணங்களை அவதானமாக பரிசோதனை செய்வதுடன் எல்லா பால்மா தொகுதிகளும் அணு கதிர்வீச்சு சோதனைக்காக அணுசக்தி அதிகார சபைக்கு அனுப்பப்பட்டு உறுதிப்படுத்தப்படும். அத்துடன் 04 பால்மா தொகுதிகளுக்கு 01 தொகுதி தெரிவு செய்யப்பட்டு அத்தொகுதியின் மாதிரிகள் கொழுப்பு பகுப்பாய்விற்கும் நுண்ணங்கி பகுப்பாய்விற்கும் சுகாதார அமைச்சின் உணவு ஆய்வுகூடத்திற்கும் அனுப்பி உறுதிப்படுத்தப்படுகின்றது. அத்துடன் பகுப்பாய்வுக்காக கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு உறுதி செய்யப்படுகின்றது.
கண்காணிப்பு மாதிரிகள் பரிசோதனை பால்மாவில் வேறு விதமான கொழுப்பு அல்லது எண்ணெய் வகைகள் சேர்க்கப்பட்டு கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என அறிய மாதிரிகள் பெறப்பட்டு சுகாதார அமைச்சின் உணவு ஆய்வகத்தினால் பகுப்பாய்வு செய்யப்பட்டு திருப்திகரமானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டும் 5 மாதிரிகள் பெறப்பட்டு இதற்கான ஆய்வறிக்கையும் பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை கட்டளைகள் நிறுவனமும் மாதிரிகளை கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தினூடாக ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்து பால்மாவில் வேறு வகையான கொழுப்பு மற்றும் எண்ணெய் எதுவும் கலப்படம் செய்யப்படவில்லை என உறுதியளித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட ஏற்றுமதி செய்யப்படும் நாட்டினால் சமர்ப்பிக்கப்படும் சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தின் பகுப்பாய்வு அறிக்கை அந்நாட்டின் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சுகாதார சான்றிதழ் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் அறிக்கை அணுசக்தி அதிகாரசபை கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் சுகாதார அமைச்சின் உணவு ஆய்வகத்தின் அறிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா வேறு வகையான கொழுப்பு மற்றும் எண்ணெய்களினால் கலப்படம் செய்யப்படாத பால்மா என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
-Vidivelli