புத்தளம் அருவாக்காடு பிரதேசத்தின் குப்பைத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை புத்தளத்தில் முழு நாள் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
புத்தளம் மாவட்ட சர்வ மத செயற்குழுவின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் புதன் கிழமை முதல் தொடர்ந்து மூன்று தினங்கள் புத்தளத்தில் கறுப்பு நாட்களாகப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ள நிலையில் அதில் ஒரு அங்கமாகவே இந்த முழு நாள் ஹர்த்தால் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
இன்றைய ஹர்த்தாலின் போது வைத்தியசாலை, மருந்தகம் (பார்மசிகள்), மருத்துவ நிலையங்கள், மருத்துவ ஆய்வுக்கூடம் தவிர்ந்த ஏனைய அனைத்து நிறுவனங்களையும் மூடி இந்த ஹர்த்தாலை வெற்றியடையச் செய்யுமாறு அனைவருக்கும் ஏற்பாட்டுக் குழு அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுவது அமைதிப் போராட்டமேயன்றி, எவ்விதமான வன்முறையோ சட்டத்துக்கு விரோதமான போராட்டமோ அல்ல என்றும் ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
மேலும் நேற்று வியாழக்கிழமை புத்தளம் பிரதேச மக்கள் நோன்பு நோற்று மாலை நோன்பு துறக்கும் கூட்டு இப்தார் நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த இப்தார் நிகழ்வு புத்தளம் கொழும்பு முகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று புத்தளம் பிரதேச மக்கள் நோன்பு நோற்ற நிலையில் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். இந்த தொடர் மூன்று நாள் போராட்டங்களின் போது புத்தளத்தின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் வாகனங்களில் கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டு மக்கள் இந்த குப்பைத் திட்டத்திற்கான எதிர்ப்பை வெளிக்காட்டினர்.
-Vidivelli