ஹஜ் யாத்திரைக்கு போலியான பெயரில் சிலர் விண்ணப்பிப்பு
இரத்துச்செய்துவிட்டு 28 ஆம் திகதிக்கு முன் பதிவுக்கட்டணத்தை மீளப்பெற வலியுறுத்து
ஒரு சில ஹஜ் முகவர்களும், தனி நபர்களும் ஹஜ் பயணத்தை மேற்கொள்வதற்கு போலியான பெயர்களில் விண்ணப்பித்து பதிவுக்கட்டணமான 25 ஆயிரம் ரூபாய் கட்டணத்தையும் செலுத்தியுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது எனத் தெரிவித்துள்ள அரச ஹஜ் குழு, அவ்வாறானவர்கள் தங்கள் பதிவுகளை எதிர்வரும் 28 ஆம் திகதிக்குள் இரத்துச்செய்துவிட்டு பதிவுக்கட்டணங்களை மீளப்பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
இவ்வருடத்துக்கான ஹஜ் பயணிகள் தெரிவு தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், அரச ஹஜ் குழுவின் உறுப்பினரும், முஸ்லிம் சமய விவகார அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான எம்.எச்.எம்.பாஹிம் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் ‘போலியான பெயர்களில் விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளவர்களுக்கு எதிர்வரும் 28 ஆம் திகதிக்குப் பின்பு பதிவுக்கட்டணங்கள் மீளக் கையளிக்கப் படமாட்டாது. இதேவேளை ஹஜ் முகவர்கள் போலியான பெயர்களில் விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளமை உறுதி செய்யப்பட்டால் அவர்களது ஹஜ் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படும்.
இவ்வாறான போலியான விண்ணப்பங்கள் காரணமாக ஹஜ் பயணத்துக்காக விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரிகள் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர். எனவே இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய ஹஜ் முகவர்கள் மற்றும் உப முகவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
-Vidivelli