- எம்.ஐ அன்வர் (ஸலபி)
இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் முழு உலகையும் தன் விரல் நுனியால் ஆட்டிப்படைக்கிறது ஊடகம். 19 ஆம் நூற்றாண்டில் எழுச்சியுறத் துவங்கிய அதிவேக தொடர்பு ஊடகங்களின் செயற்பாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் பாரிய வீச்சுடன் முன்னேறிவருகின்றன. சமூகத்திற்கு தொலை தூரத்திலிருந்த ஊடகம் இன்று எமது வீட்டுக் கதவுகளைத் திறந்து கொண்டு அடுக்களைக்கும் குளியலறைக்கும் கூட வந்துவிட்டது.
தொடர்பறுந்து காணப்பட்ட மனித சமூகத்தை நாட்டு மக்கள் என்று மட்டுமல்லாது உலக மக்கள் என்ற உறவுமுறையில் கூட பிணைப்பை ஏற்படுத்திவிட்டது இவ்வூடகங்கள். யாரும் யாருடனும் எங்கிருந்தும் கணப்பொழுதில் தொடர்பை ஏற்படுத்தி தகவல்களை அறியவும் கருத்துப் பரிமாறவும் என பல்வேறு வசதி வாய்ப்புக்களைப் பல பரிமாணங்களில் இவ்வூடகங்கள் அமைத்து தருகின்றன.
ஊடகங்களின் மூலம் மனித சமூகம் அளவில்லா நன்மைகளை அனுபவிப்பது கண்கூடு. எனினும் தற்போதைய நிலையை அவதானித்தால் ஊடகங்களின் மூலம் நன்மைகளை பெறுவதை விடவும் தீமைகளை பெறுவதே அதிகம் என்பதை மறுக்கமுடியாது.
முன்பு ஏகாதிபத்திய அரசுகள் இராணுவப் படையெடுப்பின் மூலம் பிற நாடுகளை காலனியாதிக்கம் செய்து தமது மதத்தையும் சிந்தனையையும் திணித்தன. வளங்களை சூறையாடின. ஆனால் இன்று ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் நாடுகளின் ஒத்துழைப்புடன் மதப் பிரசாரமும் கலாசார திணிப்பும் வளச் சுரண்டல்களும் தங்கு தடையின்றி முன்னெடுக்கப்படுகின்றன.
நாட்டின் மக்கள் அபிப்பிராயத்தை கட்டியெழுப்புவதிலும் அரசுக்கெதிராக அவர்களை ஒன்று திரட்டுவதிலும் பல்லின மக்கள் வாழும் ஒரு தேசத்தில் இனங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்துவதிலும் பாரிய பங்கு வகிப்பவை ஊடகங்களே என்பதை நாம் மறுக்கமுடியாது. மத்தியகிழக்கு நாடுகளில் அண்மையில் வெடித்த மக்கள் புரட்சிகளுக்குப் பின்னால் பாரியளவில் ஊடகங்களே தொழிற்பட்டன என்பதை நாம் அறிவோம்.
அந்தவகையில் தற்போது நடைமுறையிலுள்ள ஊடக ஒழுங்கானது அதனை உருவாக்கியவர்களையே உதறித் தள்ளிவிட்டு சட்டதிட்டங்கள் உச்சவரம்புகள் ஒழுக்ககோவைகள் என்பவற்றை புறந்தள்ளிவிட்டு தட்டிக்கேட்க எவருமில்லை என்ற வகையில் தறிகெட்டு அலைகிறது என்பது கண்கூடு. இதன் விளைவாக முழு உலகமும் தார்மீகத்தினதும் சத்தியத்தினதும் பலிபீடமாக மாறிவருகிறது.
அந்தவகையில் புதிய ஊடக ஒழுக்க கோவையொன்றை விரைவில் இலங்கை அரசாங்கமும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் உத்தேசக் கோவை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் வெகுசன ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாடுகளும் அமைப்புக்களும் எப்படி ஊடகத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என்று தலையைப் பிய்த்துக்கொண்டு யோசிக்கின்றன. இதுபற்றி தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பலதரப்பட்ட வாதப்பிரதிவாதங்களும் நடந்துகொண்டிருக்கின்றன.
ஆனால், இஸ்லாம் மனித சமூகத்தின் அனைத்து துறைகளுக்குமான வழிகாட்டி என்ற வகையில் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சிறந்த முறையில் பொருத்தமான வகையில் உரிய ஊடக செல்நெறியை முன்கூட்டியே வகுத்து தந்துவிட்டது. ஊடகங்கள் கொண்டிருக்கவேண்டிய பண்புகள், ஒழுக்கங்கள் குறித்து குர்ஆனும் ஹதீஸும் மிகச் சிறப்பாகப் பிரஸ்தாபிக்கின்றன. அவற்றில் மிகப் பிரதானமான ஒரு சிலவற்றை மாத்திரம் இங்கு நோக்குவோம்.
- கருத்துச் சுதந்திரம் இஸ்லாம் மனிதனுக்கு கருத்துச் சுதந்திரத்தை வழங்கியுள்ளது.
“விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் கூறுவதை தெளிவாகவே கூறுங்கள்” (33-:70) ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் மிகச் சிறந்த ஜிஹாத் எது என்று வினவப்பட்டது அப்போது, “தீய ஆட்சியாளன் முன்னிலையில் சத்தியத்தை எடுத்துரைப்பதாகும்” என பதில் கூறினார்கள். (அபூ-தாவூத்)
மனிதனுக்கு பேசுவதற்கு சுதந்திரத்தை அளித்த இஸ்லாம் அதற்கு சில ஒழுங்குகளையும் விதித்துள்ளது. கருத்தை வெளிப்படுத்துகையில் பிறர் உள்ளமும் உணர்வுகளும் புண்படாதிருக்கவேண்டும். அவை மதிக்கப்பட வேண்டும் என இஸ்லாம் வழிகாட்டுகிறது. மென்மையையும் நளினமான போக்கையும் கடைப்பிடிக்குமாறு அது உபதேசிக்கிறது. “நீங்கள் அவர்களுடன் மிகவும் அழகிய வழிமுறையிலேயே விவாதம் புரியுங்கள்.” (16-:125)
- தகவல்களை ஊர்ஜிதப்படுத்தல்
ஊடகவியலாளன் தனக்குக் கிடைக்கும் தகவல்கள் அனைத்தையும் அவற்றை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளாதவரை வெளியிடலாகாது. “உங்களிடம் ஒரு பாவி ஒரு செய்தியை எடுத்து வந்தால் (அதனை) தீர்க்கமாக விசாரித்து தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள். அப்படியில்லாத பட்சத்தில் நீங்கள் அறியாமையின் காரணமாக ஒரு சமூகத்தை பாதிக்கும் முடிவுகளுக்கு வந்துவிடக்கூடும். அப்போது நீங்கள் செய்ததை நினைத்து கைசேதப்படுவீர்கள்.” (49-:06)
நபி (ஸல்) அவர்கள், “ஒருவன் தனது காதுக்கு கிட்டும் தகவல்கள் அனைத்தையும் எடுத்துக் கூறுவது (அவற்றை ஊர்ஜிதப்படுத்தாமல் வெளியிடுவது) அவன் பொய்யன் என்பதற்கு அதுவே போதுமானதாகும்” என்றார்கள். (முஸ்லிம்)
மேற்குறிப்பிடப்பட்ட குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் ஓர் ஊடகவியலாளன் ஆதாரமற்ற செய்திகள், வதந்திகள் சமுதாயத்தில் உலாவரும்போது அவற்றை நன்கு ஆராய்ந்து உண்மைகளை துல்லியமாகக் கண்டறிந்து அவற்றை மாத்திரமே வெளியிடவேண்டும் என்பதை தெளிவுபடுத்துகின்றது.
- இரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்
பத்திரிகைச் சுதந்திரம் அல்லது தகவலறியும் சுதந்திரம் என்ற போர்வையில் தனி நபர்களின் இரகசியங்களை பகிரங்கப்படுத்தும் அரட்டைச் சந்தைகளாக ஊடகங்கள் தொழிற்படலாகாது. இஸ்லாம் பிற மனிதர்களது மானத்தை களங்கப்படுத்துவதை, அந்தரங்கத்தை வெளிப்படுத்துவதை கடுமையான குற்றமாகப் பார்க்கிறது.
“யார் ஒருவர் தன் சகோதரனின் குறையை (குற்றத்தை) மறைக்கிறாரோ அல்லாஹ் மறுமையில் அவரது குறையை மறைப்பான்.” (இப்னுமாஜா)
- நீதமான செய்தி
தற்காலத்தில் ஊடகங்கள் வாயிலாக பெரும்பாலும் பக்கச் சார்பான செய்திகளே வெளியிடப்படுகின்றன. தமக்கு வேண்டியவர்களின் செய்திகளுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுப்பதும் அவர்களின் தவறுகளைக் குறைத்துக் காட்டுவதும் போன்ற நீதமற்ற நடைமுறைகள்தான் ஊடகத்துறையில் கடைப் பிடிக்கப்படுகின்றன. இஸ்லாம் இப்போக்கை வன்மையாகக் கண்டிக்கிறது.
“உங்களுக்கு ஒரு சமுதாயத்தில் இருக்கும் பகையானது நீங்கள் நீதியாக நடந்து கொள்வதற்கு ஒரு போதும் தடையாக இருக்க வேண்டாம். நீதியாக நடவுங்கள். அப்படி நடப்பது இறைபக்திக்கு மிக நெருக்கமானதாகும்.” (05-:08)
- ஞானமும் சமயோசிதமும்
சில தகவல்களை உடனுக்குடன் வெளியிடுவது மக்கள் மத்தியில் பதற்றத்தை உண்டுபண்ணும் என்றிருந்தால் அவற்றை மறைப்பது அவசியமாகும். ஏனெனில் நாம் தகவல்களை பரிமாறும்போதும் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும்போதும் அறிவு மற்றும் உளவியல் அணுகுமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளையாகும்.
“நபியே! நீர் உமது இரட்சகனின் பாதையின் பால் (ஹிக்மா) அறிவு ஞானத்தை பிரயோகித்தும் அழகிய உபதேசங்களை கொண்டும் அழைப்பு விடுப்பீராக” (16-125)இங்கு குறிப்பிடப்படும் ஹிக்மா என்ற சொல் அவர்களது சூழல் அறிவுப் பின்னணி போன்ற விரிந்த கருத்துக்களை தருகிறது.
- மானக்கேடான தகவல்களைப் பரப்புவதை தவிர்ந்து கொள்ளல்
சமூகத்தில் இடம்பெறும் பாலியல் ரீதியான அத்துமீறல்கள், குற்றச் செயல்கள் தாறுமாறாக அம்பலப்படுத்தப்படும் போது குற்றச் செயல்கள் புரியும்விதம், அவற்றிலிருந்து தப்பும் வழிகள் பற்றி அறிவதற்கும் குற்றச் செயல்களில் ஈடுபடவும் வழி பிறக்கின்றது. எனவே மனிதர்களது கற்பொழுக்கம் தொடர்பான செய்திகளை மிகவும் கவனமாக ஊடகவியலாளர்கள் சமூகத்தில் முன்வைக்க வேண்டும்.
“விசுவாசிகளுக்கு மத்தியில் மானக்கேடான செயல்களை பரப்பவேண்டுமென யார் விரும்புகின்றாரோ! அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நோவினை தரும் வேதனையுண்டு.” (24-19)
- அச்சமூட்டும் செய்திகள்
அச்சத்தையும் பதற்றத்தையும் தரும் செய்திகளை ஆராய்ந்து பார்க்காமல் தேவையின்றி பரப்புவது சமூகத்தை பேராபத்தில் கொண்டுபோய் சேர்த்துவிடும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக அல்லது சிறுபான்மையாக இருக்கும் சூழலில் பதற்றமான செய்திகளை பரப்பிவிடுவதனால் சமூகத்தில் அமைதி குலைந்து பீதியும் அச்சமும் நிலவி இறுதியில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம்.
“மேலும் பாதுகாப்பு அல்லது பீதியை ஏற்படுத்தும் செய்தி அவர்களிடம் வந்துவிட்டால் அதை அவர்கள் பரப்பிவிடுகின்றார்கள்.” (4-83)
மேற்கூறப்பட்டவற்றைத் தவிர மேலும் பல ஊடகவியல் ஒழுக்கங்களை அல-குர்ஆன், அஸ்ஸுன்னா அடிப்படையில் நாம் காணமுடியும். எனவேதான் இன்று ஊடக சாதனங்களால் சமூகத்தில் ஏற்படும் தீங்குகளை கட்டுப்படுத்த முடியாது சர்வதேசமே தடுமாறிக்கொண்டிருக்கும் வேளை இஸ்லாம் சிறந்ததொரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கிறது.
-Vidivelli