கல்வியியலாளர்கள், ஒலிபரப்பாளர்களைக் கொண்ட குழுவொன்று கடந்த செவ்வாய்க்கிழமையன்று தலைநகர் கார்ட்டூமில் வைத்து சூடான் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக சூடானிய ஊடக சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடக சுதந்திரத்திற்காக கார்ட்டூமில் அமைந்துள்ள தகவல் அமைச்சுக்கு முன்னால் எதிர்த்தரப்பு சூடானிய தொழில்சார் நிபுணர்கள் அமைப்பினால் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அது நடைபெறுவதற்கு முன்னதாக இந்தக் கைது இடம்பெற்றுள்ளது என அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிபரப்பாளர்களான அபூபக்கர் ஆப்தீன், வயீர் மொஹமட் ஹுஸைன் மற்றும் அஸீஸா அப்துல் கரீம் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களுள் உள்ளடங்குவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் எவையும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
அரசாங்கம் பதவி விலக வேண்டும் எனக் கோரும் ஆர்ப்பாட்டத்திற்காக ஹார்டௌம் பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்டபோது சில கல்வியியலாளர்களும் கைது செய்யப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவித்தனர்.
இதனிடையே 16 கல்வியியலாளர்கள் கைது செய்யப்பட்டதாக சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இக் கைதுகள் தொடர்பில் சூடான் அதிகாரிகள் எதுவித தகவலையும் வெளியிடவில்லை.
மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சூடானின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக தெரிவித்து கடந்த டிசம்பர் மாத நடுப் பகுதியிலிருந்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
2011 ஆம் ஆண்டு தெற்கு சூடான் உருவாக்கப்பட்டதிலிருந்து சூடான் அதன் பிரதான அந்நியச் செலாவணி வருமான வளமாக இருந்த எண்ணெய் உற்பத்தியில் சுமார் மூன்றிலொரு பகுதியை இழந்துள்ள நிலையில் அதனை மீள அடைந்து கொள்ள 40 மில்லியன் மக்களைக்கொண்ட அந்த நாடு திணறிக்கொண்டி ருக்கின்றது.
-Vidivelli