புத்தளம் அறுவக்காட்டில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக நேற்று புதன்கிழமை புத்தளத்தில் வாழும் மூவின மக்களும் கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
எதிர்வரும் மார்ச் மாதம் முதல் புத்தளம் அறுவக்காட்டில் குப்பைகளை கொட்டும் திட்டம் ஆரம்பிக்கப்படவிருப்பதால், அதனை எதிர்த்தே நேற்றைய தினம் புத்தளத்தில் கறுப்புக் கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், நேற்றைய தினம் புத்தளம், கரைத்தீவு, கற்பிட்டி மற்றும் முந்தல் ஆகிய பிரதேசங்களிலுள்ள பாலர் பாடசாலை, அரச மற்றும் தனியார் பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும், அரச அலுவலகங்களில் கடமைபுரியும் அரச உத்தியோகத்தர்களும் கறுப்பு பட்டியை அணிந்துகொண்டு பாடசாலை மற்றும் அலுவலகங்களுக்குச் சென்றனர்.
அத்தோடு, புத்தளம் நகர் மற்றும் ஏனைய பிரதேசங்களிலும் மூவின மக்களும் தமது வீடுகள், வர்த்தக நிலையங்கள், வாகனங்கள் மற்றும் மதஸ்தலங்கள் என்பனவற்றில் குப்பைக்கு எதிரான பதாகைகள் தொங்கவிட்டு கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டு தமது எதிர்ப்பையும் தெரிவித்தனர்.
புத்தளம் அறுவக்காட்டில் குப்பை கொட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று முதல் மூன்று நாட்களை புத்தளத்தின் கறுப்பு நாட்களாக பிரகடனப்படுத்துவதாக புத்தளம் மாவட்ட சர்வமத செயற்குழு அறிவித்துள்ளது.
புத்தளம் பெளத்த மத்திய நிலையம் , இந்து மகாசபை, கிறிஸ்தவ சபை, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் கிளை, புத்தளம் பெரிய பள்ளிவாசல் ஆகியன இணைந்தே புதன்கிழமை (13), வியாழக்கிழமை (14) மற்றும் வெள்ளிக்கிழமை (15) ஆகிய நாட்களை கறுப்பு நாட்களாக பிரகடனப்படுத்தியுள்ளன. அத்துடன், இன்று வியாழக்கிழமை (14) புத்தளத்திலுள்ள அனைத்து முஸ்லிம் மக்களும் புனித நோன்பு நோற்குமாறும், அனைத்து பள்ளிவாசல்கள், அரபு மத்ரஸாக்கள் என்பனவற்றில் விஷேட துஆ பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் கிளைத் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேவேளை, நாளை வெள்ளிக்கிழமை புத்தளத்தில் முழுநாள் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளதுடன், ஜும்ஆ தொழுகையின் பின்னர் புத்தளம் – கொழும்பு முகத்திடலில் எழுச்சிப் பேரணியொன்றும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli