தெற்கு சிரியாவில் இரவு வேளையில் எறிகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு கடந்த செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினார்.
பெப்ரவரி 13–-14 ஆம் திகதிகளில் போலந்தின் வோர்சோவில் நடைபெறும் ‘மத்திய கிழக்கில் சமாதானம்’ என்ற தொனிப் பொருளிலான மாநாட்டில் கலந்துகொள்வதற்கு புறப்பட்டுச் செல்வதற்கு முன்னதாக டெல் அவிவில் அமைந்துள்ள பென்குரியன் விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் பேசிய நெட்டன்யாஹு இக்கருத்தினை வெளியிட்டார்.
குறித்த மாநாட்டின் முக்கியத்துவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், இம் மாநாட்டில் ஈரான் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.
ஈரானை முடக்குவதற்கு நாம் எல்லா சந்தர்ப்பங்களிலும் பணியாற்றுகின்றோம். நாம் தினமும் அந்த இலக்கிலேயே செயற்படுகின்றோம். பிராந்தியத்தில் ஈரான் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு எதிராகவே நாம் செயற்படுகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருந்ததை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பஸார் அல்-–அசாத்தின் அரசாங்கத்திற்கு ஆதரவளித்துவரும் ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தெற்கு குனெய்ற்ராவிலுள்ள நிலைகள் மீது இஸ்ரேல் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதாக சிரியாவிலுள்ள உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பில் இஸ்ரேலிய அதிகாரிகள் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
ஈரானியப் படையினர் பிராந்தியத்தில் இருப்பதை காரணம் காட்டி சிரியா வின் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்களை அண் மைய ஆண்டுகளில் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli