போர்ட் காகோட்ஸ் நகரில் இடம்பெற்ற நைஜீரிய ஜனாதிபதி முஹம்மது புஹாரியின் தேர்தல் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்குண்டு பதினான்கு பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இறந்த நிலையில் 14 பேரின் சடலங்கள் கொண்டு வரப்பட்டதோடு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மூவரைக் காப்பாற்றுவதற்கு நாம் போராடி வருகின்றோம் என போர்ட் காகோட்ஸ் பல்கலைக்கழக வைத்தியசாலையைச் சேர்ந்த கெம் டேனியல் எலெபிகா செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தார்.
பின்னர் டசின்கணக்கானோர் பாரதூரமான காயங்களுடன் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் எலெபிகா தெரிவித்தார்.
எதிர்வரும் சனிக்கிழமை சவால்மிக்க ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் நைஜீரிய மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி தனது அனுதாபத்தைத் தெரிவித்து கடந்த செவ்வாய்க்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
காயமடைந்தோர் விரைவாக குணமடைய வேண்டும் என விரும்புவதாகவும் அவரது ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டம் நடைபெற்ற இடமான அடோக்கியே அமியேஸ்மாக விளையாட்டரங்கிலிருந்து மக்கள் முறையாக வெளியேறியிருந்தால் உயிரிழப்புக்களைத் தவிர்த்திருக்க முடியும் என புஹாரி தெரிவித்தார்.
நைஜீரிய மக்கள் தமது எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான முக்கிய பங்களிப்பைச் செய்யவிருக்கும் இத் தருணத்தில் அவர்களது கனவை நிறைவேற்றுவதற்கு அவர்களது அரசாங்கம் எந்தளவு கடினமாக உழைக்கின்றது என நாம் கூறுவதைக் கண்டும் கேட்டும் அறிந்து கொள்வதற்கு வந்திருந்த அவர்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டமை துரதிஷ்டவசமானது, உண்மையில் இது பாரதூரமான சம்பவமாகும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்பவற்றின் அதிகரிப்பு என்ற பெரும் எதிர்பார்ப்போடு ஆட்சிக்கு வந்த தனக்கு தனது சேவையின் அடிப்படையிலான மக்கள் அபிப்பிராயத்தைப் பெறுவது போன்ற தேர்தலாகும் என மீளத் தெரிவு செய்யப்படுவதற்காக சவால்மிக்க தேர்தலை எதிர்கொண்டுள்ள தனது 70 ஆவது வயதிலிருக்கும் புஹாரி தெரிவித்தார்.
-Vidivelli