மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரம்: தேடப்படும் பிரதான சந்தேகநபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படும் பெண் உட்பட இருவர் கைது
சந்தேகநபர்கள் பட்டியல் 17 ஆக உயர்வு; நால்வரின் தடுப்புக் காவல் தொடர்கிறது
மாவனெல்லையிலிருந்து எம்.எப்.எம்.பஸீர்
கண்டி மற்றும் மாவனெல்லை ஆகிய பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் நொறுக்கி சேதமாக்கப்பட்ட சம்பவங்களுடன் ஆரம்பமான புத்தர் சிலை உடைப்பு விவகார விசாரணைகளில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் எண்ணிக்கை தற்போது 17 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விவகாரத்தில் பிரதான சந்தேக நபராக கருதித் தேடப்படும் சாதிக் அப்துல்லா, சாஹித் அப்துல்லா ஆகிய சகோதரர்களுக்கு தங்க இடமளித்ததாக கூறி மாவனெல்லை பொலிஸாரால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கம்பளை – உலப்பனை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் உள்ளிட்ட இருவரை கைது செய்து நேற்று மாவனெல்லை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.
இதன் ஊடாகவே இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இதில் நால்வர் சி.ஐ.டி. பொறுப்பில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு நான்காம் மாடியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஏனைய 13 பேரையும் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மாவனெல்லை நீதிவான் உபுல் ராஜகருணா உத்தரவிட்டார்.
நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சி.ஐ.டி.யால் வணாத்தவில்லுவில் வைத்து கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களான மொஹம்மட் ஹனீபா முபீன், மொஹம்மட் ஹமாஸ், மொஹம்மட் நக்பி, மொஹம்மட் நளீம் என அறியப்படும் நால்வரும் நீதிவானின் மேற்பார்வைக்காக மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். அத்துடன் ஏற்கனவே கைது செய்யப்பட்ட அக்தாப், முப்தி, முனீப், இர்ஷாத், அஸீஸ், மொஹம்மட் பெளஸான், முஸ்தபா, மொஹம்மட் பயாஸ், பயாஸ் அஹமட், மொஹம்மட் இப்ராஹீம், ஆகில் அஹமட் ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். பின்னர் பிரதான சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்தமை தொடர்பில் அப்துல் ஜப்பார் பதுர்தீன், சித்தி நஸீரா இஸ்ஸதீன் ஆகியோரை மாவனெல்லை பொலிசாரும் கேகாலை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரும் மன்றில் முன்னிலைப்படுத்தினர்.
விசாரணையாளர்கள் சார்பில் நேற்று மன்றில் மாவனெல்லை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.ஏ. ரணசிங்க ஆஜரானார். சி.ஐ.டி. சார்பில் உபபொலிஸ் பரிசோதகர் டயஸ் முன்னிலையானார்.
முதலில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 15 சந்தேக நபர்களே ஆஜர் செய்யப்பட்டனர். 11 பேர் விளக்கமறியலில் இருந்தும் நால்வர் சி.ஐ.டி. பொறுப்பிலிருந்தும் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போது குறித்த 11 சந்தேக நபர்களையும் தனித்தனியாக சிறையில் வைத்து விசாரிக்க வேண்டுமென சி.ஐ.டி. உதவி பொலிஸ் அத்தியட்சகர் டயஸ் நீதிவானிடம் சுட்டிக்காட்டினார். இதுவரை விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கமைய இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டுமெனவும் அதனால் கேகாலை சிறைச்சாலை அத்தியட்சகருக்கு, அந்த விசாரணைகள் தொடர்பில் சி.ஐ.டி. அதிகாரிகளுக்கு அனுமதியளிக்க உத்தரவிடுமாறு அவர் கோரினார். இதற்கு நீதிவான் அனுமதியளித்தார்.
இதனையடுத்து சி.ஐ.டி. பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நால்வரையும் தொடர்ந்து தடுத்து வைத்து விசாரிக்க அனுமதித்த நீதிவான், ஏனைய 11 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து இதனுடன் தொடர்பான வழக்காக மற்றொரு புத்தர் சிலை உடைக்கப்பட்ட விவகாரம் மன்றில் விசாரணைக்கு வந்தது. இதன்போது மாவனெல்லை பொலிஸ் பரிசோதகர் ரணசிங்க மன்றில் கருத்துக்களை முன்வைத்து, பிரதான சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் வழங்கிய இருவரை மன்றில் முன்னிலைப்படுத்தினார். சிறையிலுள்ள 11 பேருக்கும் மேலதிகமாக அவர்களை அவர் ஆஜர் செய்தார்.
“கனம் நீதிவான் அவர்களே, இந்த விவகாரத்தில் தேடப்படும் மிக முக்கிய சந்தேக நபர்கள் இருவரையும் இதுவரை கைது செய்ய முடியவில்லை. அவர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தமைக்காக இருவரை நாம் விசாரணையில் கைது செய்துள்ளோம். நாவலப்பிட்டி வீதி, உலப்பனை பகுதியில் சந்தேக நபர்கள் இவர்களின் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். எனினும் இவர்கள் அது தொடர்பில் அறிந்திருந்தும் பொலிசாருக்குத் தகவல் அளிக்கவில்லை. எனவே, பயங்கரவாத தடை சட்டத்தின் 2(1)ஈ, 2, 5(அ) ஆகிய பிரிவுகளின் கீழ் இவர்களைக் கைது செய்துள்ளோம்” என்றார்.
இந்நிலையில் சந்தேக நபர்கள் சார்பில், கொழும்பிலிருந்து சென்ற சட்டத்தரணிகளான தில்ஹாம் தெஹ்லான் மற்றும் அசேல உள்ளிட்ட குழுவினர் ஆஜராகியிருந்தனர். சட்டத்தரணி தில்ஹாம் தெஹ்லான் மன்றில் வாதிடுகையில்,
“இரு சந்தேக நபர்களை கைது செய்ய பொலிசார் தவறிவிட்டு அவர்கள் மறைந்துள்ளதாக ஒவ்வொரு தவணையிலும் கூறுகின்றனர். இங்கு இவ்வழக்கின் சாட்சியாளர்களாக இருக்க வேண்டியவர்கள் சந்தேக நபர்களாக உள்ளனர்.
குறிப்பாக உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் இருவரை இங்கு ஆஜர் செய்துள்ளனர். அவர்களுக்கு இந்த சம்பவமே தெரியாது. அவர்களது வீட்டுக்கு சந்தேக நபர்கள் சென்றுள்ளனர். எனினும், அப்போது அவர்கள் இவ்வழக்கின் சந்தேக நபர்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அங்கு அவர்கள் சில மணி நேரமே இருந்துள்ளனர். இக்குற்றம் தொடர்பில் இவர்கள் எதனையும் அறிந்திருக்கவில்லை. குறைந்தபட்சம் இந்தப் பெண்ணுக்கேனும் பிணை தாருங்கள்” என கோரினார்.
எனினும், மாவனெல்லை நீதிமன்றில் கடமையாற்றும் அனைத்து சட்டத்தரணிகளும் (நேற்று மன்றில் இருந்தோர்) விசாரணையாளர்களுக்கு கூடுதல் பலமாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகி பிணைக்கு எதிர்ப்பு வெளியிட்டனர்.
இந்நிலையில் குற்றச்சாட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் உள்ளதால் பிணை வழங்க அதிகாரம் இல்லை எனக் கூறிய நீதிவான், அனைவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். அத்துடன் எதிர்வரும் 27 ஆம் திகதி கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் குறித்த இரசாயன பகுப்பாய்வு அறிக்கை மற்றும் சந்தேக நபர்கள் தொடர்பிலான சாட்சியங்களின் சுருக்கத்தை மன்றில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
கடந்த 2018 டிசம்பர் 25 ஆம் திகதி அதிகாலை நேரத்தில் குருநாகல் மாவட்டம் பொதுஹர பொலிஸ் பிரிவின் கட்டுபிட்டிய வீதியில் கோண்வல பகுதியில் அமையப்பெற்றுள்ள ஆலயம் ஒன்றில் இந்து கடவுள்களைக் குறிக்கும் உருவச்சிலைகள் அடையாளம் தெரியாதோரால் அடித்து நொறுக்கி சேதமாக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பில் பொதுஹர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது, கடந்த 2018 டிசம்பர் 26 ஆம் திகதி இதனையொத்த ஒரு சம்பவம் யட்டிநுவர – வெலம்பட பொலிஸ் பிரிவில் பதிவானது.
அதிகாலை 3.00 மணியளவில் வெலம்பட பொலிஸ் பிரிவின் லெயம்கஹவல பகுதியில் மூன்றரை அடி உயரமான புத்தர் சிலை அடையாளம் தெரியாதோரின் தாக்குதலுக்குள்ளானது. அத்துடன் அந்த மூன்றரை அடி உயரமான புத்தர் சிலை சேதப்படுத்தப்படும் அதே நேரம் அதனை அண்டிய பகுதியில் இருந்த மேலும் மூன்று சிறு சிலைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் அதே தினம் அதிகாலை 4.00 மணியளவில் மாவனெல்லை – திதுருவத்த சந்தியிலுள்ள புத்தர் சிலையும் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதன்போதுதான் இந்த சிலை உடைப்பு விவகாரத்தில் அல்லது இச்சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தடயமும் கிடைத்திருந்தது.
திதுருவத்த சந்தியில் புத்தர் சிலையை தாக்க மோட்டார் சைக்கிளில் இருவர் வந்துள் ளனர். இவ்வாறு வந்ததாகக் கூறப்படும் இருவரில் ஒருவரை பிரதேசவாசிகள் துரத்திப் பிடித்து மாவனெல்லை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அதுமுதல் இதுகுறித்த விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே தற்போது அவ்விடயத்தில் பல அதிர்ச்சியளிக்கும் விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli