கிழக்கு மாகாண காணி பிரச்சினைக்கு 3 மாத காலத்தில் தீர்வு
ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய உயர்மட்ட குழு நியமிப்பு என்கிறார் கிழக்கு மாகாண ஆளுநர்
கிழக்கு மாகாணத்திலுள்ள காணிப் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன். ஜனாதிபதியின் ஆலோசனையைப் பெற்று ஓர் உயர்மட்டக் குழுவையும் நியமித்துள்ளேன். மக்களின் காணியை விடுவிப்பதற்காக அக்குழுவுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கியுள்ளேன். மூன்று மாத காலத்திற்குள் சகல காணிப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண நடவடிக்கை எடுத்துள்ளேன். எதிர்வரும் 15ஆம் திகதி அம்பாறையில் முதலாவது கூட்டத்தை நடத்தவுள்ளோம் என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
நிந்தவூர் அல்–-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐக்கிய அமெரிக்க பசுபிக் கட்டளை மையத்தினால் சுமார் ரூபா 7 கோடி நிதியில் நிர்மாணிக்கப்பட்ட 12 வகுப்பறைகளைக் கொண்ட 3 மாடிக் கட்டிடத் தொகுதி திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அனர்த்த முகாமைத்துவத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இம்மூன்று மாடிக் கட்டிடத்தோடு, நவீன வசதிகளைக் கொண்ட சமையலறைத் தொகுதியும், மலசலகூடத் தொகுதியும் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலையின் அதிபர் ஏ.எல்.நிஸாமுத்தீன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கிழக்கு ஆளுநர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாணம் கல்வி, பொருளாதாரம் உட்பட எல்லாத்துறைகளிலும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. இம்மாகாணத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டுமானால் இனம், மொழி, பிரதேச வேறுபாடுகளிலிருந்து விடுபட்டு ஒற்றுமைப்படுதல் வேண்டும்.
கிழக்கு மாகாணம் யுத்தத்தினாலும், இனமுரண்பாடுகளினாலும் இயற்கை அனர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசமாகும். யுத்தத்தினால் மூவின மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நான் யுத்தத்தின் தாக்கங்களை நேரடியாக அனுபவித்தவன். அதன் துன்பம், துயரங்களை அனுபவித்தவன். கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கின்றது. இதற்காகவே ஜனாதிபதி ஒரு வருட காலத்திற்கு ஆளுநர் பதவியை எனக்கு வழங்கியுள்ளார். ஆகவே, நாம் இன, மத, மொழி வேறுபாடுகளின்றி ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். நாங்கள் அரசியல் ரீதியாகவும், இன ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும், மொழி ரீதியாகவும் முரண்பட்டு எதிர்ப்புக்களைக் காட்டினால் கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப வேண்டிய இலக்கை அடைய முடியாது.
ஆளுநர் என்பது கொழும்பிலே இருந்து வந்து ஒரு உல்லாச வாழ்க்கையை வாழ்கின்றதொரு பதவியாகவே இருந்து வந்துள்ளது. அப்படியில்லாமல் இம்மாகாணத்திலுள்ள உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன். இன முரண்பாடுகள் களையப்பட வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன்.
கிழக்கு மாகாணத்தில் காணிப் பிரச்சினை வெகுவாகக் காணப்படுகின்றது. சுகாதாரப் பிரச்சினைகள் காணப்படுகின்றன. எங்களின் வாழ்வாதாரத்திலும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அதிலும், அம்பாறை மாவட்டத்தில் அதிகளவு காணிப் பிரச்சினை காணப்படுகின்றது. வன இலாகா என்றும், தொல்பொருள் என்றும் காணிகள் பறிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு நாம் தீர்வுகாண வேண்டும். கிழக்கு மாகாணத்திலுள்ள காணிப் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன். ஜனாதிபதியின் ஆலோசனையைப் பெற்று ஓர் உயர்மட்ட குழுவையும் நியமித்துள்ளேன். மக்களின் காணியை விடுவிப்பதற்காக அக்குழுவுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கியுள்ளேன். மூன்று மாத காலத்திற்குள் சகல காணிப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை காண நடவடிக்கை எடுத்துள்ளேன். எதிர்வரும் 15ஆம் திகதி அம்பாறையில் முதலாவது கூட்டத்தை நடத்தவுள்ளோம்.
கிழக்கு மாகாணம் கல்வியிலும், பொருளாதாரத்திலும், சுகாதாரத்துறையிலும் ஒன்பதாவது இடத்தில் இருக்கின்றது. கிழக்கு மாகாணம் மதுக்குடிப் பழக்கத்தில் முதலாவது இடத்தில் இருக்கின்றது. 22 மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில்தான் அதிகளவு மதுக்குடிப் பழக்கத்தையுடைய மக்கள் காணப்படுகின்றார்கள்.
கல்வியை பொறுத்தவரை சில பாடசாலைகளில் அதிகமான ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். அதே வேளை, முக்கியமான சில பாடங்களுக்கு போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையும் காணப்படுகின்றது. அத்தகைய பாடங்களில் ஏற்படும் பின்னடைவு காரணமாக முழு மாகாணமும் பாதிப்படைகின்றது. ஒருசில வலயங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றன. கிழக்கு மாகாணம் ஏன் ஒன்பதாவது இடத்தில் இருக்கின்றதென்று நாம் ஆராய்ந்தோம். அதன்போது, கிழக்கு மாகாணத்திலிருந்து ஒரு வலயத்தை நீக்கிவிட்டால் நாங்கள் ஐந்தாவது இடத்திற்கு வரலாமென்று தெரிவிக்கப்பட்டது. இதனால், அந்த வலயத்தில் விசேட கவனம் செலுத்துமாறு பணித்துள்ளேன். தேவையான வளங்களை வழங்காமல் அந்த வலயத்தை குறைசொல்ல முடியாது. எந்தவொரு பாடசாலையையும் குறைசொல்ல முடியாது. இவற்றுக்கெல்லாம் 2020ஆம் ஆண்டு தீர்வு காண வேண்டிய கட்டாயம் உள்ளது.
இத்திறப்பு விழாவில் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான அமெரிக்க தூதுவராலயத்தின் அரசியல் பிரிவு தலைவர் அன்டனி எப். ரென்சூலி (Anthony F Renzulli), சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான அமெரிக்க தூதுவராலயத்தின் சிவில் பாதுகாப்பு கட்டளை மையத்தின் பணிப்பாளர் டெர்ரி ஜோன்சன் (Terry A Jhonson), கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர், நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், நிந்தவூர் கோட்டக் கல்வியதிகாரி யூ.எல்.எம்.சாஜித் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-Vidivelli