பால்மா விவகாரம் குறித்து உடன் விசாரணை நடத்துக
வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் தரம் தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளதால் அவற்றில் கலப்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிவதற்கு முறையான விசாரணையொன்றினை நடத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எழுத்துமூலம் கோரியுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளில் பன்றிக் கொழுப்பு, தாவர எண்ணெய் உட்பட வேறு சேர்க்கைகள் அடங்கியுள்ளனவா என்றும் சுகாதார அமைச்சில் தற்போது பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் முன்னைய அதிகாரிகளுக்கு பால்மா நிறுவனங்களுடனான உறவுகள் என்பன தொடர்பில் ஆராயுமாறும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பால்மா வகைகளில் கலப்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதியமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்துள்ள கருத்துகளின் உண்மை நிலையினை அறிந்து கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அனுருத்த பாதெனிய மற்றும் செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே ஆகியோரின் கையொப்பங்களுடன் குறிப்பிட்ட கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
சுகாதார திணைக்களத்தில் உணவு சுகாதாரம் தொடர்பான பதவிகளை வகித்தவர்கள் ஓய்வுபெற்றதன் பின்பு வெளிநாட்டு பால்மா நிறுவனங்களின் தலைவர்களாக நியமனம் பெற்றுள்ளமை தொடர்பிலும் ஆராய வேண்டும். நாட்டு மக்களின் சுகாதாரத்தினைப் பாதுகாக்க வேண்டிய, உறுதிப்படுத்த வேண்டிய சுகாதார அமைச்சர் பால்மா நிறுவனங்களுக்குச் சார்பாக கருத்து வெளியிடுகின்றமை கவலைக்குரியதாகும். அத்தோடு அமெரிக்கா மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலிருந்து அதிகமான தாவர எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக நியூசிலாந்து இருக்கின்றமை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
உலக சந்தையில் பால் கொழுப்பு கிலோ ஒன்றின் விலை இலங்கை ரூபாவில் 900 ரூபாவாகும். இதேவேளை தாவர எண்ணெய் ஒரு கிலோவின் விலை 150 ரூபா மாத்திரமே. அதனால் இலங்கை போன்ற பொருளாதார வசதி குறைந்த மக்கள் வாழும் சந்தைகளுக்கு குறைந்த விலையில் பால்மாவினை வழங்குவதற்காக பல மாற்று வழிகளைக் கையாள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.
எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்தி நாட்டு மக்களுக்கு தூய்மையான பால்மாவினை நுகர்வதற்கு வழிவகை செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
-Vidivelli