கஷோக்ஜி கொலை விவகாரம்: இளவரசர் சல்மானின் வலக்கரமாக செயற்பட்ட உதவிப் பணியாளர் தண்டிக்கப்பட வேண்டும்
அமெரிக்கா கோரிக்கை
வொஷிங்டன் போஸ்ட் பத்தி எழுத்தாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, இளவரசர் மொஹமட் பின் சல்மானின் வலக்கரமாக செயற்பட்ட முன்னாள் உதவிப் பணியாளர் சௌத் அல்-கஹதானி தண்டிக்கப்பட வேண்டும் என அமெரிக்கா சவூதி அரேபியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த ஒக்டோபர் 02 ஆம் திகதி இஸ்தான்பூலில் அமைந்துள்ள சவூதி அரேபிய துணைத் தூரகத்தினுள் வைத்து ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சௌத் அல்-கஹதானி மீதான நடவடிக்கைக்கு அமெரிக்கா கொடுக்கும் அழுத்தத்திற்கு எதிராகவே தொடராக றியாத் செயற்பட்டு வருகின்றது என சவூதி அரேபிய மற்றும் அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தகவல் வெளியிட்டுள்ளது.
அல்-கஹதானி சவூதி அரேபியாவின் பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானின் வலக்கரமாக செயற்பட்டவர். அவர் தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தாலும் கூட அரண்மனையின் உத்தியோகப்பற்றற்ற ஆலோசகராகச் செயற்பட்டு வருகின்றார். சௌத் அல்-கஹதானி மனச்சாட்சியுடன் தனது செயற்பாடுகளை முன்னெடுப்பதை எம்மால் அவதானிக்க முடியவில்லை என தன்னை அடையாளம் காட்ட விரும்பாத சிரேஷ்ட இராஜாங்க திணைக்கள அதிகாரியொருவர் அந்த நாளிதழுக்கு தெரிவித்தார்.
கஷோக்ஜி கொலை தொடர்பில் கடந்த டிசம்பர் மாதம் அல்-கஹதானி உள்ளிட்ட 17 சவூதி நாட்டவர்கள் மீது அமெரிக்கா குற்றம் சுமத்தியிருந்தது. துருக்கியும் அல்-கஹதானி நாடு கடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தது. சவூதி மன்னர் சல்மானினால் அல்-கஹதானி பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னரும் சவூதி அரேபியாவின் பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானின் உத்தியோகப்பற்றற்ற ஆலோசகராக செயற்படுகின்றார் என்பதை சவூதி அரேபிய அதிகாரியொருவர் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
இக் கொலைக்கு தனிப்பட்ட ரீதியில் மொஹமட் பின் சல்மான் மீது குற்றம் சுமத்தப்பட வேண்டும் என அமெரிக்க நிருவாகம் அழுத்தம் கொடுத்துவருகின்ற போதிலும், அதற்கு எதிர்ப்பு நிலையே காணப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பின் சல்மான் மீது குற்றம் சுமத்தப்படுமா இல்லையா என்பது தொடர்பில் பகிரங்கப்படுத்துவதற்கான காங்கிரஸின் இறுதித் திகதியைப் புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.