சிறுவர்கள் தமது நேரங்களை விளையாட்டுகளிலும், பொழுதுபோக்கு நிகழ்வுகளிலுமே செலவிடுவதற்கு விரும்புகிறார்கள். அதிகமாக சிறுவர் பூங்காக்களே அவர்களை வெகுவாகக் கவர்கின்றன.
அங்கே சிறிய தண்ணீர்த் தடாகங்கள், மோட்டாரில் இயங்கும் பல்வேறு வடிவிலான சிறியரக படகுகள், மற்றும் மின்சார ரயில்கள், ஊஞ்சல்கள் என அவர்களது பொழுது போக்கு சாதனங்களை வகைப்படுத்தலாம்.
பெற்றோரும் விடுமுறை தினங்களில் தங்கள் சிறு பிள்ளைகளை அதிகமாக சிறுவர் பூங்காக்களுக்கே அழைத்துச் செல்கிறார்கள். இவ்வாறான சிறுவர் பூங்காக்கள், சிறுவர் பொழுதுபோக்கு அமைவிடங்கள் நாடெங்கும் வியாபித்துள்ளன.
கடந்த சுதந்திர தினத்தன்று நாம் பெற்ற சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்காக, பிள்ளைகளை மகிழ்விப்பதற்காக பெற்றோர் சிறுவர் பூங்காக்களுக்கு தங்கள் பிள்ளைகளுடன் சென்றிருந்தனர். இவ்வாறான பூங்காவொன்றில் சுதந்திர தினத்தன்று இடம்பெற்ற அனர்த்தம் எம் அனைவரையும் துயரத்துக்குள்ளாக்கியது.
வெயாங்கொட, நைவல மாராபொல சிறுவர் பூங்காவில் இயந்திர ஊஞ்சலொன்று உடைந்து வீழ்ந்ததில் தாயொருவரும் அவரது மகளொருவரும் பரிதாபமாக உயிரிழந்தார்கள். சுதந்திர தினத்தன்று தங்களது பொழுதுகளை மகிழ்ச்சியாகக் கழிப்பதற்குச் சென்ற அவர்கள் மீண்டும் பெட்டிகளிலே வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இயந்திர ஊஞ்சலில் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் அதிலிருந்த தாயும் மகளும் வீசியெறியப்பட்டு அவர்களது தலைகள் இரும்புக் குழாய்கள் மீது மோதியதால் இந்த அனர்த்தம் நிகழ்ந்திருக்கிறது. குறிப்பிட்ட அந்த ஊஞ்சல் இணைப்பு ஆபத்தான நிலையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது ஒரு அனர்த்தமா? இன்றேல் விபத்தா? என விமர்சிக்கவேண்டியுள்ளது. சிறுவர் பூங்காக்களை நடாத்தும் தனியார் நிறுவனங்களின் அசமந்தப் போக்கே இதற்குக் காரணமெனலாம். இந்த இறப்புகளுக்கு குறிப்பிட்ட சிறுவர் பூங்காவில் கடமையிலிருந்த ஊழியர்களும், உரிமையாளருமே பொறுப்புக் கூறவேண்டும்.
இவ்வாறான சிறுவர் பொழுது போக்கிடமான சிறுவர் பூங்காக்கள் முழுக்க முழுக்க வர்த்தக நோக்கமாகவே நடாத்தப்படுகின்றன. இவ்வாறான சிறுவர் பூங்காக்கள் அவசியமானதே. ஆனால் அங்கு வருபவர்களின் பாதுகாப்பினை அதன் உரிமையாளர்களே உறுதிப்படுத்த வேண்டும்.
குறிப்பிட்ட அனர்த்தம் இடம்பெற்றவேளை காயமுற்றவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்குக் கூட எந்த வசதிகளும் அந்த சிறுவர் பூங்காவில் இருக்கவில்லை. அவசர முதலுதவி சிகிச்சை வழங்குவதற்கு அங்குள்ள ஊழியர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் பல்வேறு இடங்களில் இவ்வாறான பூங்காக்கள் இயங்குகின்றன. விசேட தினங்களில் அங்கு பல்வேறு பொழுதுபோக்கு சாதனங்கள் பொருத்தப்படுகின்றன.
சிறுவர் பூங்காக்களை எவ்வித கண்காணிப்புகளுமின்றி இவ்வாறு தன்னிச்சையாக இயங்குவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. அவற்றின் தரங்கள், ஊழியர்களின் பயிற்சிகள் பரிசீலிக்கப்பட வேண்டும். உரியதரத்தைப் பேணாத சிறுவர் பூங்காவுக்கு சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் அனுமதிவழங்கக்கூடாது.
தாயும், மகளும் அனர்த்தத்தினால் உயிர்விட்ட குறிப்பிட்ட சிறுவர் பூங்காவில் இதற்கு முன்பும் சிறு பிள்ளையொன்று நீரில் மூழ்கி இறந்துள்ளதாக வெயாங்கொட பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அண்மைய அனர்த்தம் தொடர்பான விசாரணைகளையடுத்து சிறுவர் பூங்கா உரிமையாளர் உட்பட ஊழியர்கள் 6 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 13 ஆம் திகதி (இன்று) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான பூங்காக்களை நடாத்துவதற்கு பிரதேசசபை, நகர சபை, மாநகர சபை என்பன வரி அறவிடுகின்றன. வரி அறவிடுவதுடன் மாத்திரம் அவற்றின் செயற்பாடுகள் முற்றுப் பெற்றுவிடக்கூடாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, நிபந்தனைகளை மீறும் சிறுவர் பூங்காக்களின் அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்யவேண்டும்.