போலியான எரிபொருள் விலை சூத்திரத்தை மையப்படுத்தி நடுத்தர மக்களின் வாழ்க்கை செலவுகளை அதிகரிக்க வேண்டாம். ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாதார கொள்கையாக முறையற்ற வரி அறிவிடல், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் என்பவை மாத்திரமே காணப்படுகின்றன என்று பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர்ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
வஜிராஷ்ராம விகாரையில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்ட பொழுது பிரதமராகப் பதவிவகித்த மஹிந்த ராஜபக் ஷ எரிபொருட்களின் விலையினை 15 ரூபாவிற்கு குறைத்து போலியான எரிபொருள் விலை சூத்திரத்தையும் முழுமையாக இரத்து செய்தார். அதனை தொடர்ந்து ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் சடுதியாக குறைக்கப்பட்டன. 52 நாட்கள் நாட்டு மக்கள் சற்று திருப்தியடைந்தார்கள் என்றே குறிப்பிட வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சி போராடிப் பெற்ற அரசாங்கத்தினால் இதுவரை காலமும் எவ்விதமான விலை குறைப்புக்களும் இடம் பெறவில்லை. மக்களை ஏமாற்றுவதற்காகவே கடந்த மாதம் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டது. தற்போது மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்விலை அதிகரிப்பில் விலை சூத்திரம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறாயின் இனி ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுமா என்ற அச்சத்திலே மக்கள் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வரி அறவிடுதலும், விலையேற்றமுமே அரசாங்கத்தின் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாதாரக் கொள்கையாக காணப்படுகின்றது.
சுயாதீனமாக செயற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆணைக்குழுக்கள் எதுவும் சுயாதீனமாக செயற்படவில்லை. உதாரணமாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினை குறிப்பிட வேண்டும். சாதாரண ஒரு பிரஜை இலஞ்சம் பெற்றுள்ளமை தொடர்பில் விரைவாகவும், சுயாதீனமாகவும் செயற்படும் இவ்வாணைக்குழு, தேசிய நிதியினை கொள்ளையடித்தவர்கள் விவகாரத்தில் எவ்விதமாக சுயாதீனத் தன்மையினையும் பேணவில்லை. பிணைமுறி விவகாரத்தின் பிரதான சூத்திரதாரியான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் விவகாரத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு எவ்விதமான தமது ஆணைக்குழுவின் கடமைகளையும் முழுமைப்படுத்தவில்லை என்றார்.
-Vidivelli