அபுதாபி ஆறு நட்சத்திர ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டு தற்போது டுபாய் தலைமை பொலிஸ் நிலைய கட்டுப்பாட்டிலுள்ள அல் ரபா பொலிஸ் கூண்டில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் பிரபல போதைப்பொருள் கடத்தற்காரரும் பாதாள உலகக் கோஷ்டியின் தலைவருமான மாகந்துரே மதூஷை இலங்கைக்கு அழைத்துவரும் இராஜதந்திர நடவடிக்கைகள் தொடரும் நிலையில், அதிரடிப்படை கட்டளைத் தளபதியும் குற்றம், திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுகளின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான எம்.ஆர். லத்தீப் தலைமையிலான விசேட குழு டுபாய் நோக்கிப் பயணிக்கவுள்ளதாக பொலிஸ் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான அனுமதி மற்றும் ஆலோசனைகளை பாதுகாப்பு அமைச்சு பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்கியுள்ளது.
குறித்த குழுவில் குற்றப் புலனாய்வுப் பிரிவு, பயங்கரவாத தடுப்புப் பிரிவு, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படை ஆகிய 5 பிரிவுகளின் உயரதிகாரிகள் உள்ளடங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.
மதூஷ், டுபாயை மையப்படுத்தி முன்னெடுத்த போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அவரது வலையமைப்பு தொடர்பிலான தகவல்களை டுபாய் பொலிசாருக்கு முன்வைத்து மதூஷை இலங்கைக்கு அழைத்துவருவது தொடர்பில் ஆராயவே, இக் குழு டுபாய்க்கு செல்லவுள்ளது.
மாகந்துரே மதூஷ் மீது போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டு மட்டும் சுமத்தப்பட்டு இலகுரக தண்டனையொன்று விதிக்கப்படும் வாய்ப்புக்கள் குறித்து பேசப்படும் நிலையிலேயே, அதனைத் தடுத்து மதூஷை இலங்கைக்கு அழைத்துவந்து அவரது கணக்கில் குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க இந்தக் குழு டுபாய் நோக்கி செல்லவுள்ளதாக அறியமுடிகின்றது.
இதனிடையே மாகந்துரே மதூஷுடன் கைது செய்யப்பட்ட பாடகர் நதீமால் பெரேரா போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கவில்லையென, இரத்த பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. டுபாய் பொலிஸாரை சந்தித்தபோது இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டதாக, அவர் சார்பில் டுபாயில் சட்ட நடவடிக்கைகளை ஆராயும் சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள பாடகரான அமல் பெரேரா மற்றும் நதீமால் பெரேரா ஆகியோர் சார்பில் தகவல்களை சமர்ப்பிப்பதற்காக, சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன டுபாய்க்கு சென்றுள்ளார். அமல் பெரேரா மற்றும் நதீமால் பெரேரா ஆகியோர் இலங்கையில் மாத்திரமின்றி சர்வதேச ரீதியிலும் சிறந்த சிங்கள மொழிப் பாடகர்களாக உள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள் டுபாய் பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன குறிப்பிட்டுள்ளார். இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள இவர்கள் பாடும் காட்சிகளை டுபாய் பொலிஸாருக்கு காட்டியதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, அமல் பெரேராவின் குருதியில் போதைப்பொருள் கலந்துள்ளதா இல்லையா என்பது தொடர்பான அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை என டுபாய் பொலிஸார் கூறியதாகவும் சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன தெரிவித்துள்ளார். எனினும், கைது செய்யப்பட்டுள்ள அமல் மற்றும் நதிமால் ஆகிய இருவரையும் இதுவரையும் சந்திக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர்களில் ஒருவருமான மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் அந்நாட்டுப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளன. மாகந்துரே மதூஷுடன், பிரபல பாடகரான அமல் பெரேரா, அவருடைய மகனான நந்திமால் பெரேரா மற்றும் நடிகர் ரயன் வென்ங் ரோயன் உள்ளிட்ட சந்தேகநபர்கள் கடந்த 5 ஆம் திகதி அபுதாபியில் வைத்து அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 18 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் உறுதியாகியுள்ளதாகவும் டுபாய் சென்றுள்ள சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டவர்களும், சில பெண்களும் உள்ளடங்குவதாக அறிய முடிகின்றது.
-vidivelli